இலங்கை இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் ஆற்றிய உரைகளுக்கு கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காகவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதாகவும், அவரின் இலங்கை விஜயம் கலாச்சார ரீதியானதே தவிர அரசியல் செயற்பாடு இடம்பெறாது எனவும் அரசாங்கம் தெரிவித்திருந்தது.
ஆனால், பிரதமர் மோடியின் உரைகளைப் பார்த்தால், அவ்வாறு தெரியவில்லை. வெசாக் தின நிகழ்வில் பங்கேற்க வந்திருத்தால், அவர் வெசாக் பண்டிகையை பற்றிதான் பேசியிருக்க வேண்டும்.
ஆனால், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு பற்றியே அவரின் உரையில் நூற்றுக்கு 75 வீதம் பேச்சு இருந்தது.
இலங்கை மற்றும் இந்தியாவின் இருதரப்பு சந்திப்பு போன்றே அவர் உரையாற்றினார். இது முழுமையான அரசியல் உரையாகும் என்று கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இருநாடுகளின் எல்லைகளூடாக வர்த்தக, முதலீட்டு மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை சுதந்திரமாக முன்னெடுக்க வேண்டும் என மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனூடாக எட்கா உடன்படிக்கையை விரைவாக கைச்சாத்திட வேண்டும் என மோடி சொல்லாமல் சொல்லிச் சென்றுள்ளதாக கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வேறுபடுத்த முடியாது. நீங்கள் செய்வது எமது பாதுகாப்புக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும். அதனால், உங்களுக்கு (இலங்கைக்கு) ஏற்றாற்போல செயற்பட முடியாது என இந்தியப் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டுள்ளதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து என்பவற்றின் பங்களிப்பு குறித்து மோடி கூறியதனூடாக அனுமான் பாலம் அமைக்கப்படும் என்ற தகவலை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனுமான் பாலம் குறித்து இலங்கை அரசியல்தலைவர்கள் மறைக்கும் விடயத்தை அம்பலப்படுத்தியதற்கு மோடிக்கு நன்றி கூறுவதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது மேல் மற்றும் தென் மாகாணங்களில் சேவையில் ஈடுபடும் அம்பியூலன்ஸ் சேவையை நாடு முழுவதும் வழங்குவதாகவும், மலையகத்துக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதாகவும் மோடி கூறியுள்ளார்.
இலங்கையில் இவற்றைச் செய்ய அவருக்கு இருக்கும் அதிகாரம் என்ன? அவர் இந்த நாட்டின் பிரதமரா என உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையானது இந்தியாவின் மற்றுமொரு பிராந்தியம் என நினைத்தே மோடி இவற்றைத் தெரிவித்துள்ளதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தமது வலது பக்கத்தில் இருந்தவர் இலங்கையின் ஆளுநர் சிறிசேன என்றும், இடது பக்கம் இருந்தவர் இலங்கையின் முதலமைச்சர் ரணில் விக்ரமசிங்க என்ற எண்ணத்திலேயே இந்தியப் பிரதமர் உரையாற்றியதாக கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது எமது நாட்டின் இறைமைக்கு பாதிப்பில்லையா? எனவும் இதன்போது கம்மன்பில கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.