கேரளாவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பை அடுத்து நோய்வாய்ப்பட்ட மக்களை குணப்படுத்த போர்க்கால அடிப்படையில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்துவருவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக சுகாதார நிலையங்கள்
கேரளாவின் 11மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி பல முக்கியமான மருத்துவமனை கட்டடங்கள் வெள்ளத்தில் இடிந்துபோயுள்ளன. இந்நிலையில், உடனடி தேவைக்காக மருத்துவ முகாம்கள் பயன்பட்டாலும், அடுத்த ஒரு மாத காலத்திற்கு தீவிரமாக மருத்துவமனைகள் செயல்படவேண்டியுள்ளதால், கிராமங்கள் மற்றும் நகரங்களில் தற்காலிக சுகாதார நிலையங்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது என சுகாதாரம் மற்றும் சமூகநீதித்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் தெரிவித்தார்.
கேரள மாநில தலைமைச்செயலகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குழுவினர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அடிக்கடி விவாதித்து வருகின்றனர். எனவே தொடர்ந்து பணிசெய்துவரும் நேரத்தில் ஒரு சில நிமிடங்களைச் செலவிட்டு பிபிசி தமிழிடம் தற்போது கேரளா சந்தித்துவரும் சுகாதார சீர்கேடுகள் பற்றியும் அவற்றை கடந்துவரும் வழிகள் குறித்தும் பேசினார் அமைச்சர் ஷைலஜா.
”கேரளாவில் பல கிராமங்களில் உள்ள கிணறுகள் வெள்ளநீரால் நிரம்பி வழிகின்றன. ஆனால் கிணற்று நீர் மற்றும் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள நீர் ஆதாரங்களை மக்கள் பயன்படுத்த முடியாது. அதிகப்படியான குடிநீர் தட்டுப்பாட்டை சந்திதுவருகிறோம். எல்லா இடங்களிலும் குடிநீரை அரசு அதிகாரிகள் பரிசோதித்துவருகிறார்கள். பெரும்பாலான இடங்களில் குடிநீர் அருந்துவதற்கு உகந்ததாக இல்லை என்பதுதான் உண்மை. நீர் மற்றும் காற்று மூலம் பரவும் காலரா,மலேரியா, லெப்டோஸ்பிரோசிஸ் போன்ற நோய்கள் தாக்காதுவாறு மக்களை காப்பாற்றவேண்டும்,” என்று கூறினார்.
அம்மை நோய்
தாய்சேய் நலத்தில் பல சாதனைகளைப் படைத்த கேரளா தற்போது நோய்த்தொற்றை எதிர்த்துப்போராடிக் கொண்டிருக்கிறது என்று கூறிய அமைச்சர் ஷைலஜா, “கொச்சினை அடுத்துள்ள ஆலுவா பகுதியில் ஒரு முகாமில் மூன்று நபர்களுக்கு சின்னம்மை இருப்பது கண்டறியப்பட்டு அவர்களுக்கு தனியாக ஒரு இடத்தில் சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிலும் நூற்றுக்கணக்னான குடும்பங்கள் வசிக்கின்றன என்பதால் அவர்களுக்கு கொடுக்கப்படும் உணவு பரிசோதிக்கப்பட்டு அளிக்கப்பட்டுவருகிறது,” என்றார்.
அலோபதி மட்டுமல்லாது, ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களும் முகாம்களுக்கு செல்வதாக அவர் தெரிவித்தார்.
அதோடு உடல்நலம் மட்டுமல்லாது மனநலத்தைப் பேணவும் மருத்துவர்கள் முகாம்களுக்கு அனுப்பட்டுள்ளனர் என்றார்.
”பலரும் இன்னும் அச்சத்தில் இருந்து மீளவில்லை. மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் முகாம்களுக்குச் சென்று அனைவரையும் இயல்புநிலைக்கு திரும்ப பயிற்சிகளை அளித்துவருகிறார்கள். குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் கொடுத்துவருகிறோம்,” என்றார் அமைச்சர்.
தற்போது கேரளா எதிர்கொண்ட சிக்கல்களை அடுத்த ஒரு மாதகாலத்தில் கடந்து வர கடுமையாக வேலைசெய்துவருவதாக குறிப்பிட்ட அமைச்சர், ”நீங்கள் அடுத்த மாதம் கேரளாவுக்கு வந்து எங்கள் மக்களின் ஆரோக்கியம் பற்றி விசாரித்து எழுதவேண்டும். எங்கள் மக்கள் அவர்கள் இருக்கும் முகாம்களை தூய்மையாக வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறார்கள். மருத்துவர்கள் அல்லும்பகலும் வேலைசெய்கிறார்கள். நிச்சயமாக மகிழ்ச்சியான மக்களை நீங்கள் பேட்டி எடுக்கவேண்டும்,” என்ற கோரிக்கையை வைத்தார்.