வடக்கு – கிழக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக, சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதியளித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை குழுமத் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற லூகாஸ் பெட்ரைட்ஸ், இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவை மரியாதை நிமித்தம் சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றிருந்த நிலையில், அதன்போதே சர்வதேச செஞ்சிலுவை சங்க தலைவர் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
குறித்த சந்திப்பின்போது, வடக்கிலும், கிழக்கிலும் பாதுகாப்பு படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க மற்றும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து இராணுவ தளபதி எடுத்துரைத்துள்ளார்.
மேலும், இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் குறைந்த வருமானம் பெறுவோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், அவர்களது சுகாதார தரத்தை மேம்படுத்தல், விவசாயத்துறைக்கான உதவிகள் போன்ற விடயங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் திட்டங்களுக்கு இராணுவத் தரப்பில் அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராகவிருப்பதாகவும் இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.