சித்தராமையாவுக்கு துணை ஜனாதிபதி பதவி வழங்கி அவரது ஆதரவாளர்களின் ஆதரவுடன் கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் முன்பு சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சித்தராமையா 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாததாலும், பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தியதாலும், சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரசே வெற்றி பெறும் என்று பெரும்பாலானவர்கள் கணித்தனர்.
ஆனால் தேர்தல் முடிவுகள் அவ்வாறு அமையவில்லை. இந்த தோல்வியில் இருந்து சித்தராமையாவால் மீள முடியவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிட்ட அவர் சொந்த தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாதாமி தொகுதியிலும் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை எட்டி பறித்தார்.
எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. ஜனதா தளம்(எஸ்) கட்சி முன்னாள் தலைவர் குமாரசாமி முதல்-மந்திரி பதவியில் அமர்ந்துள்ளார். தேவேகவுடாவும், சித்தராமையாவும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ளனர். அவர்கள் அவ்வப்போது பேசிக்கொண்டாலும் இருவரும் அரசியலில் பரம எதிரிகளாகவே பார்க்கப்படுகிறார்கள்.
குமாரசாமி முதல்-மந்திரி ஆனதை சித்தராமையா சிறிதளவும் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதனால் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து இந்த அரசின் செயல்பாடுகள் பற்றியோ அல்லது அரசியல் பற்றியோ அதிகம் பேசாமல் சித்தராமையா சற்று ஒதுங்கியே இருக்கிறார். தனது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கைவிடும் முடிவை எதிர்த்து குமாரசாமிக்கு 4, 5 கடிதங்களை சித்தராமையா எழுதினார். கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா இருக்கிறார். இந்த குழுவின் கூட்டம் நடந்து ஏறத்தாழ ஒரு மாதம் ஆகிவிட்டது.
இந்த நிலையில் சித்தராமையா தனது குடும்பத்தினருடன் வருகிற செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியின் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். இதனால் குமாரசாமியின் கூட்டணி ஆட்சி நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில் பா.ஜனதாவுக்கு தன்னிச்சையாகவே பெரும்பான்மை கிடைத்துவிடும். இதன் மூலம் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என்று சொல்கிறார்கள். இதுபற்றி தகவல் அறிந்து வைத்துள்ள குமாரசாமி, அந்த திட்டத்தை முறியடிக்க தன்னிடம் ஒரு திட்டத்தை தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சிலரை இழுத்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள குமாரசாமி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சித்தராமையா ஏன் முயற்சி செய்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி அமைத்தபோதும், அந்த ஆட்சி அமைந்த பிறகும் சித்தராமையாவை காங்கிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பேசப்படுகிறது. தன்னை புறக்கணித்த காங்கிரசுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பது தான் சித்தராமையாவின் எண்ணமாக உள்ளதாக சொல்லப்படுகின்றன.
பா.ஜனதா சார்பில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், சித்தராமையாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், 2022-ம் ஆண்டில் துணை ஜனாதிபதி பதவியை வழங்க பா.ஜனதா தயாராக இருப்பதாகவும் கூறியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
பா.ஜனதா மதவாத கொள்கையை பின்பற்றி வருவதாக மேடைக்கு மேடை பேசி வரும் சித்தராமையா அக்கட்சியை கடுமையாக குறை கூறுகிறார். அப்படிப்பட்ட மதசார்பற்ற கொள்கையை கொண்ட பா.ஜனதாவுக்கு சாதகமாக அவர் செயல்படுவாரா? என்ற கேள்வி மதசார்பற்ற கொள்கையை பின்பற்றும் அரசியல் வாதிகள் இடையே எழுந்துள்ளது.