கடந்த பகுதியில் அருட்தந்தை சக்திவேல், வடக்கில் நடைபெறும் சமூகவிரோத குற்றங்களுக்கு அரசு தான் காரணம் என்று கூறியிருந்தார். இந்த பகுதியில் நீதியாளர் இளஞ்செழியனின் கருத்துக்கள் உங்களுக்காக….
இலங்கையில் நீதித்துறையை மட்டும் அல்ல அரசியல் மற்றும் மதசார்ப்பு கட்சிகளின் கவனத்தையும் பெற்றுள்ள ஒரு நீதியாளர் என்றால் அது யாழ்.மேல்நீதி மன்ற நீதிபதி திரு. இளஞ்செழியன் அவர்களைத்தான் கூற முடியும். 2016ம் ஆண்டு அவர் யாழ் மேல் நீதி மன்ற நீதிபதியாக பொறுப்பேற்ற பின், ஒரு வருடத்தில் இந்த வன்முறைகளை கட்டுக்கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
“தண்டணையால் தான் சமூதாயத்தைத் திருத்த முடியும். கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தின் அகோரத்தால் சிக்குண்டு அல்லல்பட்ட எமது சமூதாயம், மீண்டும் மோசமான நிலைக்குச் செல்ல நாம் அனுமதிக்கக் கூடாது. அதனைக் கட்டுப்படுத்துவதற்குக் காலம் தான் பதில் சொல்லும் என்று சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாது” என கடந்த 2016ம் ஆண்டு மே 23ம் தேதி, நெடுங்குளம் சந்தியில் அமைந்துள்ள சர்வோதய மாவட்ட நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது யாழ்.மேல்நீதி மன்ற நீதிபதி திரு. இளஞ்செழியன் கூறியிருந்தார்.
இலங்கையில் கடுமையான சட்டங்கள் பின்பற்றப்படும் போதும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. உதாரணத்திற்கு, இங்கு பெண் பிள்ளையைக் கடத்தினால் 7 வருட சிறைத்தண்டனை, பெண் பிள்ளையை பாலியல் வல்லுறவு செய்தால், 20 வருட சிறைத்தண்டனை, கொலை செய்தால் மரண தண்டனை கூட உண்டு என்று இலங்கையின் சட்டப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளதையும் நீதியாளர் குறிப்பிடுகின்றார். ‘பாலியல் வன்முறை, ஆள்கடத்தல், கஞ்சா கடத்தல் போன்ற சமூகவிரோத குற்றங்களுக்கு தண்டனை மட்டுமே தீர்வு’ என்கிறார் இளஞ்செழியன் .
வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த வாள் வெட்டு, போதைப்பொருள், கடத்தல் போன்ற வன்முறைகளை அடிப்படையாக கொண்ட சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அதே வேளை இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுகள் தமிழ் முஸ்லீம் மக்களை குறிவைத்தும் மலையகத் தமிழர்களை மையப்படுத்தியும் நடத்தப்படும் சூழலும் காணப்படுகின்றது.
நவம்பர் 16ம் தேதி அட்டன் பேரூந்து தரப்பிடத்தில் இரு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து 200 கிராம் மாவா வகையைச் சேர்ந்த போதைப்பொருளை மீட்டனர். அதே நேரம் அந்த போதைப் பொருளை மற்றொரு மாணவர் பயன்படுத்தி இருந்ததையும் கண்டு பிடித்திருந்தனர். அவர்களை போலீஸார் விசாரணை செய்திருந்த போதும் குறித்த மாணவர்களுக்கு எவ்வாறு அல்லது யாரால் இந்த போதைப்பொருள் வழங்கப்பட்டது என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை. வெறுமனே எச்சரிக்கப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, கொட்டகலை பகுதியில் மாவா எனப்படும் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்த வீடு அதிரடிப்படையினரால் கண்டறியப்பட்டது. அட்டன், கொட்டக்கலை போன்றவை மலையகத் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிகளாகும்.
வடக்கு கிழக்கு மற்றும் தென்னிலங்கையின் சில பகுதிகளிலும் தினம் ஒருவரோ அல்லது இருவரோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றனர். இப்படியான வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் உடனே பிணையில் செல்வதும் வாடிக்கையாகி விட்டது. இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து பெறப்படும் பெருமளவிலான கஞ்சா போன்ற போதைப்பொருள்கள், இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருந்து தான் கடத்தி வரப்படுவதாக இலங்கையில் இருந்து வெளிவரும் செய்திகளில் கூட பார்க்கின்றோம். கடல் எல்லைக்குள் அரை கடல் மைல் பகுதிக்குள் தமிழக மீனவர்கள் நுழைந்தாலே ஆவேசம் கொண்டு கைது செய்தும், சுட்டும், துரத்தி அடிக்கும் இலங்கை கடற்படையால் ஏன் இந்த போதைப்பொருட்கள் கேரளாவில் இருந்து கடத்தி வரப்படுவதை தடுக்க முடியவில்லை? பயணிகள் விமான தளமான கட்டுநாயக்காவில் இவ்வாறான போதைப்பொருட்களை கடத்தி வரும் வெளிநாட்டு பிரஜைகள் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருவதும் மறுப்பதற்கில்லை.
ஆனால் ராணுவத்தின் துணையுடன் தான் இந்த போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கடல் வழியாக கொண்டு வரப்படுவதாக பல தரப்பாலும் குற்றம் சுமத்தப்படுகின்றது. இதற்கு சான்றாக கடந்த அக்டோபர் 22ம் தேதி யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் 25வயதுடைய டொன் போஸ்கோ ரிஸ்மன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். போதைப்பொருள் விற்பனையில் கடற் படையினருடன் ஏற்பட்ட முரண்பாடே இந்தக்கொலைக்கு காரணம் என கூறப்பட்டது. முன்னதாக இனம் தெரியாதோராலேயே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட போதும், இரு போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில்,கடந்த 2016 நவம்பர் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, போதைப்பொருள் வர்த்தகத்தின் முக்கிய புள்ளிகள் நான்கு பேர் வெளிநாடுகளுக்கு தப்பியோடியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இதை வைத்துப்பார்க்கும் போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை இலங்கை அரசின் கையை மீறிவிட்ட நிலை தெளிவாகிறது.
– தொடரும்