உலகம் முழுவதும் இருந்து ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் செளதி அரேபியாவுக்கு செல்கின்றனர். ஐந்து நாட்கள் நடைபெறும் அந்த புனிதப்பயணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி தொடங்கியது.
செளதி அரேபியாவின் மெக்கா நகர் இஸ்லாமியர்களின் புனிதத்தளமாக கருதப்படுகிறது. இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம். இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும்.
செளதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு துல்ஹஜ் மாதத்தில் புனித யாத்திரை மேற்கொள்வதே ஹஜ். இது அனைவரும் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமை என்று சொல்லப்படாவிட்டாலும், ஹஜ் கடமையை நிறைவேற்றும் உடல் மற்றும் பொருளாதாரத் தகுதி கொண்டவர்களுக்கு, இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் ஒரு முறையாவது அவர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்லவேண்டும். வசதியும், உடல் தகுதியும் இருந்தும், இந்தக் கடமையை நிறைவேற்றவில்லை எனில் அவர் குற்றவாளி ஆவர்.
துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை செளதி அரேபியாவிலுள்ள மினா, அராஃபத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்கி, அந்த நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும். மெக்கா நகரில் உள்ள கஃபாவை ‘ஏழு முறை இடஞ்சுழியாக சுற்றிவருவது’ (தவாஃப் செய்வது) ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும்.
அப்படி கஃபாவை சுற்றிவரும் போது, ஒவ்வொரு சுற்றிலும் ‘ஹஜ்ருல் அஸ்வத்’ என்று அழைக்கப்படும் புனித கருங்கல்லை முத்தமிடுவார்கள். கூட்ட நெரிசலால் ‘ஹஜ்ருல் அஸ்வத்’-தை நெருங்க முடியவில்லை என்றால், தங்கள் வலது கரத்தை அதை நோக்கிக் காண்பிக்கலாம்.
ஒவ்வொரு சுற்றை முடித்த பின்பும் இறைவனின் பெயரை உரத்துக் கூறவேண்டும். தவாஃப் செய்யும்போது கூறவேண்டிய துவாக்களையும் அறிந்து கொள்ளவேண்டும்.
இத்துணை முக்கியத்துவம் வாய்ந்த ஹஜ் பயணத்திற்காக, இந்த ஆண்டு 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் செளதி அரேபியா சென்றிருப்பதாக கணிக்கப்படுகிறது.
உண்மையில், இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் அனைவரும் தங்களை இஸ்லாமியர்கள் என்று கூறிக்கொண்டாலும், இஸ்லாமிய சட்டம் மற்றும் இஸ்லாமிய வரலாற்றின் சுய புரிதலின் அடிப்படையில், முஸ்லிம்கள் பல பிரிவுகளாகவோ அல்லது வகைகளாகவோ பிரிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரிவுகளின் ஒன்றுதான் அஹமதியா என்னும் பிரிவு.
அஹமதியா முஸ்லிம் பிரிவினரின் நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களை பிற இஸ்லாமியர்கள், முஸ்லிம்களாக ஏற்றுக் கொள்வதில்லை. எனவே, அவர்கள் செளதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் யாத்திரைக்காக அவர்கள் மெக்காவுக்கு சென்றால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு கடத்தப்படும் ஆபத்தும் இருக்கிறது.
ஹனாஃபி இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றும் முஸ்லிம்களின் சமூகம் தங்களை அஹமதியா என்று அடையாளப்படுத்துகிறது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் கிதியான் என்ற இடத்தைச் சேர்ந்த மிர்ஜா குலாம் அகமது என்பவர் இந்த இஸ்லாமியப் பிரிவை தோற்றுவித்தார்.
இந்தப் பிரிவை சேர்ந்தவர்கள், மிர்ஜா குலாம் அஹ்மத், நபிகள் நாயகத்தின் அவதாரம் என்றே நம்புகின்றனர்.
அவர்கள் தங்களுக்கென புதிய ஷரியாவைக் கொண்டு வரவில்லை, இறைதூதர் நபிகள் நாயகத்தின் ஷரியாவையே பின்பற்றுவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால் மிர்ஜா குலாம் அகமதுக்கு, நபிகள் நாயகத்திற்கு சமமான மரியாதையை அவர்கள் அளிக்கின்றனர்.
நபிகள் நாயகத்திற்குப் பிறகு, உலகிற்கு அல்லா வேறு எந்த இறைதூதர்களையும் அனுப்பவில்லை என்று இஸ்லாமின் அனைத்து பிரிவுகளும் நம்புகின்றன.
ஆனால், தீர்க்கதரிசியின் அந்தஸ்தைக் கொண்ட மத சீர்திருத்தவாதியான மிர்ஜா குலாம் அஹமது, இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு சமமானவர் என்று அஹமதியா பிரிவினர் நம்புகின்றனர்.
இந்த கருத்து வேறுபாடுகளே, கணிசமான எண்ணிக்கை கொண்ட அஹமதியாக்களை இஸ்லாமிய மதத்தினர் என்று பிற இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதற்கான தடையாக இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டனில் கணிசமான எண்ணிக்கையிலான அஹமதியா பிரிவு முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர். பாகிஸ்தான் அரசு அஹமதியா பிரிவினர் இஸ்லாமியர்கள் அல்ல என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.