சிங்கள மக்கள் தமிழ் மக்களின் எதிரிகளா? ஆண்டாண்டு காலமாக நாம் அடக்கப்பட்டு எமது உரிமைகள் பறிக்கப்பட்டு நாம் விரும்பாமலே எம்மை ஆயுதத்தை ஏந்த வேண்டிய தேவையை எமது எதிரி உருவாக்கினான் என்பது என்றுமே மறுக்கமுடியாத வாதமாக உள்ளது. ஆயுதம் ஏந்தி போராடிய போராளிகளும் விடுதலைக்காக போராடி மண்ணோடு மண்ணாகிப்போன வித்துக்களையும் என்றுமே நாம் எமது மனங்களில் மேன்மையான நிலையில் போற்றுவோம். போராடி விதையாகிப்போன மாவீரர்கள் மீது களங்கங்களை நாம் என்றுமே கற்பித்து விடக்கூடாது. அவர்களின் தியாகங்களும் ஈழ பற்றும் விலைமதிக்க முடியாத சொத்தாகும்.மாவீர தெய்வங்களையும் இறந்துபோன மக்களையும் மனதில் நிறுத்தி நீதியின் நிலையில் இந்தக் கட்டுரையை எழுதுகின்றேன்.
மனித நாகரீகத்தின் உச்சத்தில் வாழ்வதாக எண்ணும் நாம் மிகவும் கீழ்த்தரமான சிந்தனையுடனும் திறந்த வெளி ஆய்வுகள் அற்ற நிலையிலுமே எமது நடவடிக்கைகளை நகர்த்துகின்றோம். ஆதிக்க சக்திகள் நினைக்கும் செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிக்கொண்டு மறைமுகமாக அவர்களின் செயற்பாடுகளுக்கு இரையாகிப் போகின்றோம்.
தமிழர்_என்றாலே_உணர்ச்சிகளின்_
வெள்ளை வேட்டி திருடர்கள் பலரும் உணர்ச்சி பொங்க எமது இளைஞர்களிடம் சொற்பொழிவாற்றிவிட்டு பின்கதவால் சிங்கள பேரினவாதத்தின் எச்சில் துண்டை பொறுக்கிக்கொள்கின்றான் என்று தான் கூற முடியும்.இந்த நகர்வுகளில் இருந்து நாம் எம்மை நிலைநிறுத்தவும் எமது நியாயமான அபிலாசைகளை பெற்றுக்கொள்ளவும் நாம் எமது உண்மையான உரிமையையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த வேண்டியது சிங்கள மக்களிடம் மட்டுமே.
எமது விடுதலை போராட்ட போராளிகளாகட்டும் தலைமையாகட்டும் சிங்கள மக்களை என்றுமே எதிரியாக நோக்கவில்லை என்பது வெளிப்படை.இதனை மனதில் ஆழமாக நிறுத்தி நாம் சிங்கள மக்களிடம் திறந்த உறவுமுறையை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எமது வலிகளை நாம் ஆணித்தரமாக சிங்கள மக்களுக்கு எடுத்துரைக்கும் பட்ஷத்திலேயே எம்மால் ஒரு நிரந்தரமான தீர்வை எட்டிட முடியும். இல்லாவிடில் தமிழனுக்கான தீர்வானது வெறும் எழுத்தில் எழுத்தப்பட்டு பின்னர் கிழிக்கப்படும் என்று உறுதியாக கூற முடியும்.
விடுதலை போராட்ட களம் உறுதியாக இருந்த காலத்தில் நாம் சிங்கள மக்களுடனான உறவை கவனத்தில் கொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணராமல் போனது எமது துரதிஷ்டம் என்றுதான் என்னால் கூற முடிகின்றது. இப்போது நாம் சிங்கள மக்களுடனான உறவை பேணவேண்டுமாயின் நீண்ட கால அர்பணிப்புகளுக்கு நாம் தயாராக வேண்டும். விடுதலை போராட்டம் நிலையானதாக வெற்றி பெற்று உறுதியாக இருந்த காலப்பகுதியில் சிங்கள மக்களுடன் நாம் ஒரு நெடிய உறவுமுறையினை பேணுவது இலகுவான காரியமாக இருந்திருக்கும். ஆனால் இன்று நாம் தோற்க்கப்பட்ட இனமாக சிங்கள மேலாண்மை சக்திகளால் சிங்கள மக்களுக்கு எடுத்து சொல்லப்படுவதால் எமது உரிமைகளை சிங்கள மக்கள் உணரமுடியாத சூழலுக்குள் வாழ்கின்றார்கள் என்பது நிதர்சனம்.
இந்த நிலையை மாற்ற வேண்டியது கல்விமான்களாகிய எழுத்தாளர்களாகிய மக்களாகிய ஒவ்வொருவரதும் கடமையாகும்.
இதற்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாக மொழிக்கற்றல் அமைகின்றது.இந்த மொழிக்கற்றலை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
வேற்று மொழியை கற்றுக்கொள்ளும் நாம் சகோதரமொழியான சிங்களத்தை கற்றுக்கொள்வதன் மூலம் எமது பாரம்பரியத்தை தொன்மையை இழந்துவிடுவோம் என்று கூறுவது சுத்த அபத்தமான ஒன்றாகவே என்னால் நோக்கப்படுகின்றது.
மக்கள் மனநிலையை மாற்றுவது என்பது பாரிய சிக்கலான விடயமாக நாம் நோக்காமல் எமக்கு அருகில் உள்ள சிங்கள மக்களிடமே எமது உணர்வுகளை வெளிப்படுத்தும் போது ஏதோ ஒரு நிலையில் அவர்கள் எம்மை புரிந்துகொள்ளக்கூடிய நிலை தோன்றும் என்று ஆழமாக நம்புகின்றேன்.
ஆகவே எழுத்தாளர்களே கல்விமான்களே நாம் செய்யவேண்டிய முக்கிய கடமையாக எது இப்போது காணப்படுகின்றது என்றால் எமது சிக்கல்களையும் வலிகளையும் சிங்கள கீழ்த்தட்டு மேல்தட்டு மக்களுக்கு எடுத்துச்செல்வதேயாகும்.எமது எழுத்துக்கள் மூலமும் இது சாத்தியப்படும் ஒன்றாக இருக்கும். இந்த கடமையையை சரியாக நாம் செய்வோமானால் எமது நிலையானது சிங்கள மக்களால் புரியப்பட்டு எமக்கான உரிமையினை விரும்பியோ விரும்பாமலோ சிங்கள பேரினவாதம் எமக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.
இந்த மாற்றமானது இந்த தலைமுறையில் சாத்தியம் என்று வாதாடுவது முட்டாள்தனமான வாதமாக இருக்கும். ஆனாலும் எதிர்கால தலைமுறையில் இது சாத்தியமான ஒன்றே…ஆகவே இன்றைய இனஅழிப்பின் உச்சக்கட்ட நாளில் எமது உணர்வுகளை
எமது உரிமையை வென்றெடுக்கும் நோக்கில் நகர்த்துவோம்.