நெடுஞ்சாலைத்துறையில் 4800 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப் பணிகளை உறவினர்கள், பினாமிகளுக்கு வழங்கி ஆதாயம் அடைந்ததற்காக முதல்வர் பழனிசாமிக்கு எதிரான புகாருக்கு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை செப்டம்பர் நான்காம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
திமுக அமைப்பு செயலரும், ராஜ்யசபா எம்பியுமான ஆர்.எஸ்.எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவில் முதல்வர் பழனிசாமி வசம், நெடுஞ்சாலை துறை உள்ளது. ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. திட்டப் பணிகளை மேற்கொள்ள, ‘ராமலிங்கம் அண்ட் கோ’ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.இந்த நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர், முதல்வர் பழனிசாமிக்கு உறவினர்.
திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்கு வழி சாலை திட்டம், ‘வெங்கடாசலபதி கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர், முதல்வர் பழனிசாமியின் சம்பந்தி.
மதுரை ரிங் ரோடு,வண்டலுார் – வாலாஜாபாத் ஆறு வழி சாலை, ராமநாதபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர் மாவட்டங்களில் நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, முதல்வர் பழனிசாமியின் உறவினர்கள், பினாமிகளுக்கு, ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு, 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஒப்பந்தப் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் வழங்கியதில், முதல்வர் பழனிசாமி ஆதாயம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் அளித்த புகாரை, பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுந்தார்.
நேற்று இம்மனு மீதான விசாரணையில், இப்புகார் மீதான விசாரணை அறிக்கை இரண்டு மாதங்களாகியும் ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக பதில் அளிக்க உத்தரவிட்டார் .