ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரின் வான்வழி தாக்குதலில் 26 குழந்தைகள் பலியாகி உள்ளனர்.
ஏமன் நாட்டில் கடந்த 3 வருடங்களாக அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே போர் நடந்து வருகிறது. தீவிரவாதிகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இலக்கான பொதுமக்களில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள ஹொடெய்டா பகுதிக்கு தெற்கே அல் துரேஹிமி என்ற இடத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக சென்றவர்களில் 22 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் சிக்கி பலியாகினர்.
இதேபோன்று அந்த பகுதியில் நடந்த மற்றொரு வான்வழி தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகி உள்ளனர். இந்த தகவலை ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏமன் நாட்டின் வடக்கே கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதியில் கடந்த 9ந்தேதி பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த நிலையில் சவூதி தலைமையிலான கூட்டு படையினர் அதன்மீது வான்வழி தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் பலியாகினர். 56 குழந்தைகள் உள்பட 79 பேர் காயமடைந்தனர்.
வடக்கு ஏமனில் 40 குழந்தைகள் உள்பட 51 பேரை கொல்வதற்கு அமெரிக்காவால் விற்பனை செய்யப்பட்ட வெடிகுண்டு பயன்பட்டுள்ளது என குற்றச்சாட்டு கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.