ஐக்கிய அரபு இராச்சியத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இலங்கைப் பிரஜைகள் 1818 பேர் பொது மன்னிப்பின் அடிப்படையில் நாடு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். தங்கிருந்த இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டது. இம்மாதம் முதலாம் திகதி முதல் 3 மாத காலத்திற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, அந்நாட்டில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகள் நாடு திரும்புவதற்குத் தயாராகியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. விசா இன்றி நாட்டில் தங்கியுள்ள இலங்கை பிரஜைகள், அபுதாபியிலுள்ள தூதுவராலயத்தில் அல்லது துபாயிலுள்ள கொன்சியூலர் அலுவலகத்திற்கு சென்று தற்காலிக கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியும் என பணியகம் தெரிவித்துள்ளது.
சுமார் 1,25,000 இலங்கை பிரஜைகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிந்து வருவதோடு, வருடாந்தம் சுமார் 30,000 பேர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்காக செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.