உமா மிஸ் வகுப்பறையே வித்தியாசமாக இருந்தது. நான் அவரிடம் ஒருசில புத்தகங்களை வாங்க வந்திருந்தேன். மிஸ்ஸுடைய வகுப்பறை கீழ்த்தளத்தில் பெரிய பெரிய மரங்களுக்கு அருகில் இருந்ததால், நல்ல நிழல், நல்ல காற்று. நீண்ட மேஜைகளும் நாற்காலிகளும் வெளியே இழுத்துப் போடப்பட்டிருந்தன.
என்ன நடக்கிறது என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். வகுப்பறையா அது? ரொம்ப வித்தியாசமாக இருந்தது. உயரமான இருக்கைகள் ஒருசில, நடுவே காபி வைத்துக் குடிப்பதற்கு வட்டமேஜை. இன்னொரு பக்கம் மெத்தைகள், திண்டுகள், குஷன் சேர்கள்…
சின்ன வகுப்பு பையன்கள் நின்றுகொண்டும், சாய்ந்துகொண்டும் எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் ஒரே ஜாலியாக இருந்தார்கள். இது எங்கள் பள்ளியா என்ற ஆச்சரியமே ஏற்பட்டுவிட்டது.
“என்ன மிஸ் இது? கிளாஸே வேற மாதிரி இருக்கு…?”
மிஸ் முகத்தில் மாறாத புன்னகை. பெருமித உணர்வு மாதிரிகூடத் தோன்றியது.
“இந்த ஆண்டு, சும்மா இதை முயற்சி செஞ்சு பார்க்கப் போறேன். பிரின்சிபலுக்கு என் ஐடியா பிடிச்சு இருந்ததால, ஓகே சொல்லிட்டார்… அதான் செஞ்சு இருக்கேன்.”
வகுப்பறைக்குள் போனால், முற்றிலும் வேறு மாதிரி இருந்தது. அவ்வளவு விசாலமான இடம். சின்ன நீச்சல்குளமே கட்டலாம் போலிருந்தது. மேஜை, நாற்காலிகளை வெளியே எடுத்துப் போட்டுவிட்டதால், அப்படியொரு அகலமும் நீளமும். ஓர் ஓரத்தில் குட்டி, குட்டியாக முக்காலிகள். சுவரில் உயரமான பின்போர்டுகள், சார்ட்டுகளைத் தொங்கவிடுவதற்காக கயிறுகள்…
“என்ன ஐடியா மிஸ் இது?”
“இதுக்கு ஃப்ளெக்சிபிள் சீட்டிங்னு பேரு. அதாவது செளகரியமான இருக்கை முறை. ஒண்ணும் புதுசான விஷயம் இல்லை. ஆனால், நாம் இதனுடைய முக்கியத்துவத்தைத் தொலைச்சுட்டோம். அதைத்தான் இப்போ மீட்டெடுக்கிறோம்…”
வகுப்பறை, மாணவர்களுக்கு அன்னியமாக இருக்கக்கூடாது. அது அவர்களை அரவணைக்கும் விதமாக, ஈர்க்கும் முறையில் இருக்க வேண்டும். வடிவமைப்பு, வண்ணம் போன்ற விஷயங்களை உமா மிஸ் போன முறை சொன்னார்கள். இதற்கு அடுத்த இடம் இருக்கைகளுக்குத்தான்.
பல மாணவர்களுக்கு பல அசெளகரியங்கள் உண்டு. முக்கியமாக இருக்கைகள். பல பள்ளிகளில் இருக்கைகள், மரப்பலகையிலும் இரும்பிலும் உள்ளன. இவை நீண்டகாலம் உழைக்கும் என்பது நியாயம்தான். அதற்கென்று தனி வாசனையும் தேய்ந்து தேய்ந்து மழமழப்பும் வந்துவிடும் என்பதும் உண்மைதான்.
ஆனால், கூடவே அது ஓர் ஒழுங்கோடு இருக்கிறது. உயரமானவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால், குள்ளமானவர்களுக்கு வேறு பிரச்னை. காலை மடித்து உட்கார முடியாது. நீட்டிக்கொள்ளவும் முடியாது. அதுவும் 4 பாடவேளைகள் வரை தொடர்ச்சியாக உட்கார்ந்திருக்க வேண்டும். அதன் பின்னர்தான் இடைவேளை.
வீட்டில் இருக்கும் செளகரியம் பள்ளிகளில் கிடையாது. பள்ளிக்கூடம் சொல்லித்தரும் வாழ்க்கைத் திறனான ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த உட்காரும் முறையும் இருக்கிறது. ஆனால், இதனை மாற்றவேண்டும் என்ற சிந்தனை பல நாடுகளில், பல ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஒழுக்கம் எவ்வளவு முக்கியமோ, அதேஅளவுக்கு கட்டுப்பாடும் கூட. கட்டுப்பாடு, அழுத்தத்தைத் தரும். நெகிழ்ச்சியைத் தராது.
பள்ளி மாணவர்களுக்கு, பிஞ்சு பருவத்திலேயே எதற்குக் கட்டுப்பாடும் அழுத்தமும்? வேண்டாமே என்று நினைக்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்.
மாணவர்களுக்கு அணுக்கமான, இயல்பான சூழ்நிலை அமையுமானால், அவர்களுடைய கற்றல்திறன் அதிகரிக்கும் என்பது ஆய்வுரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த இயல்பான சூழலை பள்ளி வகுப்பறையில் உருவாக்கினால் என்ன?
“இதுக்கு இன்னொரு பேரும் இருக்கு. ‘ஸ்டார்பக்ஸ் கிளாஸ்ரூம்ஸ்’ (Starbucks Classrooms) என்றே இதைச் சொல்றாங்க. ஸ்டார்பக்ஸ் என்பது அமெரிக்காவுல இருக்கிற பிரபலமான காபிஷாப். நம்ம ஊர் ஓட்டல்கள் மாதிரி. அங்கே உயரமான டேபிள்கள், இருக்கைகள் இருக்கும். ரொம்ப தளர்வா, பெரிய அழுத்தம் இல்லாமல், மணிக்கணக்கில் உட்கார்ந்து பேசுவதற்கும், விவாதிப்பதற்கும் காபிஷாப் தான் உகந்த இடம். அதே மாதிரியைப் பின்பற்றி, வகுப்பறைகளை உருவாக்க முயற்சி செஞ்சு வெற்றியும் பெற்றிருக்காங்க.”
“சீட்டை மாற்றினால், நல்லா கத்துக்க முடியுமா மிஸ்?”
“முடியும்ங்கறது பல ஆய்வுகள்ல தெரியவந்திருக்கு. வகுப்பறைங்கறது கறாரான இடமாக இருக்கக்கூடாது. படிக்கறதுக்குத் தூண்டவே தூண்டாத உணர்ச்சியற்ற இடமாகவும் இருக்கக்கூடாது. அதுல ஓர் உத்வேகம், ஈடுபாடு, கொண்டாட்டம் எல்லாம் இருக்கணும். அதுக்கு இருக்கைகளுக்கு முக்கியத்துவம் உண்டு. அதை மாற்றி மாற்றிப் பார்த்தால், ஏதாவது வித்தியாசம் ஏற்படுதான்னு பார்க்கத்தான் இங்கே முயற்சி எடுத்திருக்கேன்.”
“யார் எங்க உட்காரணும்னு போட்டி வருமே மிஸ்?”
“முதல் நாள் தான் அப்படி இருக்கும். அதுக்குப் பின்னாடி, வேற இடங்களிலேயும் உட்கார்ந்து பார்க்கலாமேன்னு ஆசை வரும். இடத்தை மாத்திப்பாங்க. ஒவ்வொரு இடமும், ஒவ்வொரு இருக்கையும் ஒவ்வொரு அனுபவத்தைக் கொடுக்கலாமே!”
“அப்படின்னா, ஒவ்வொரு நாளும் சீட் மாத்துவீங்களா மிஸ்?”
“நான் மாத்த மாட்டேன். நான் வேற ஒரு விஷயத்தை மட்டும் மாத்தணும்னு நினைக்கறேன். கிளாஸ்னாலேயே போர் அடிக்கும், அங்கே ஜாலியா இருக்க முடியாதுன்னு நினைக்கற எண்ணத்தை மாத்தறதுதான் என் நோக்கம்.”
நான் புத்தகங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தேன். இருக்கைகள் மாற்றத்துக்காக உமா மிஸ் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பார் என்று யோசித்துப் பார்த்தேன். வகுப்பறைக்குள் இருக்கும் பல அளவு இருக்கைகளை வேறு எங்கெங்கிருந்தோ கொண்டுவந்திருக்க வேண்டும். பல பேர்களின் துணையோடு, உள்ளே இருந்த மேஜை, நாற்காலிகளை வெளியே எடுத்துப் போட்டிருக்க வேண்டும்.
இத்தனை முயற்சிகளும் பயனற்றுப் போய்விடவில்லை. நான் என் வகுப்பறைக்கு வந்தபோது, எங்கள் கிளாஸின் இயல்பற்ற, நெருக்கமற்ற, அன்னியோன்யமற்ற தன்மை புரிந்தது.
சின்னப் பையனாக, உமா மிஸ் வகுப்பிலேயே இருந்திருக்கலாம்!
நன்றி : பட்டம் மாணவர் இதழ்