2016 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மியான்மரில் உள்ள ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான வன்முறை மற்றும் பிற குற்றங்கள் தொடர்பாக மியான்மர் நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) அமைப்பு அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கடந்த ஆண்டு மியான்மரில் இருந்து வெளியேறிருப்பதாக கூறும் மனித உரிமை அமைப்புகள், ஆயிரக்கணக்கோனோர் இறந்துவிட்டதாக கூறுகின்றன.
நூற்றுக்கணக்கான நேர்காணல்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில் ரோஹிஞ்சா இன மக்களுக்கு எதிராக இதுவரை நடைபெற்ற வன்முறைகளுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மிக மோசமான அச்சுறுத்துல்களை விடுத்ததற்கு இணையான நடவடிக்கைகளை மியான்மர் ராணுவம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ள ஐ.நா அறிக்கை, குறிப்பிட்ட ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளது.
வன்முறைகளைத் தடுக்க தலையிட தவறிய, மியான்மர் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ள ஐ.நா அறிக்கை, ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மர் நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
தனது நடவடிக்கைகள் அனைத்தும், தீவிரவாதத்திற்குக்கும் ஊடுருவலுக்கும் எதிரானது என மியான்மர் அரசு தொடர்ந்து கூறிவருகிறது.
ஆனால், ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் குற்றச்செயல்கள் அதிர்ச்சியூட்டுவதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
“கண்மூடித்தனமாக செய்யப்பட்ட கொலைகளையோ, கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான தாக்குதல், கிராமங்களை எரித்தல் போன்ற ராணுவத்தின் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியாது” என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.
2016 முதல் 2017 ஆம் ஆண்டில் ரக்கைன் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையால் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு ஏறத்தாழ ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் தங்கள் உயிரை காத்துக் கொள்ளவும், வன்முறையிலிருந்து தப்பிக்கவும் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.
வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தவர்களில் 40 சதவீதம் பேர் 18 வயதிற்கும் உட்பட்டவர்கள் என்கின்றன சர்வதேச உதவி அமைப்புகள். இவர்கள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாகவும் கூறுகின்றன அந்த அமைப்புகள்.
ரோஹிஞ்சா மக்கள் மீதான மியான்மரின் நடவடிக்கைகளை தெளிவான இன சுத்திகரிப்பு என்று ஐ.நா. குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது, ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மர் நாட்டை, ஐ.நா. பாதுகாப்புக் குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த 130 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் ஐ.நாவை வலியுறுத்தினார்கள்.
ஐ.நா. முகமை பல ராணுவ உயரதிகாரிகளை பட்டியலிட்டுள்ளது.
பொதுவாக, மியான்மர் ராணுவம் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாகவே கருதப்படுகிறது.
அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ், ராணுவத்தின் மீது சிவிலியன் அதிகாரிகளுக்கு குறைந்த அளவிலான அதிகாரமே உள்ளது. . ஆனால், சிவிலியன் அதிகாரிகள் தங்களுடைய செயல்கள் மற்றும் நடவடிக்கைகளால் லும், ரோஹிஞ்சாக்கள் மீதான குற்றங்களைக் நடத்தினார்கள் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.
மியான்மர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கட்டுப்பட்டதில்லை என்றபோதிலும், வங்கதேசம் அந்த நீதிமன்றத்தில் உறுப்பினர் என்பதால், இந்த விவகாரத்தை அது விசாரிக்கமுடியும்.