முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவாக நேற்று(16) லண்டனில் குருதிக் கொடை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழ் மக்களின் சரித்திர வரலாற்றில் மாறாத வடுவாய் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவு நாளை தாயகம் உட்பட உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வுபூர்வமாக நினைவுகூற தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் பிரித்தானியாவிலும் அதன் அங்கமாக பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை பிரித்தானியா வாழ் தமிழ் இளைஞர்கள் ஒன்று திரண்டு லண்டனில் நேற்று குருதித்தானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
பிரித்தானியா தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் Edgware Community Hospital, Burnt Oak Broadway, Edgware என்ற இடங்களில் குறித்த குருதித்தான நிகழ்வு இடம்பெற்றிருந்ததோடு இதில் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றிருந்தனர்.
சர்வதேசத்திடம் தமிழர்கள் பயங்கரவாத இரத்த வெறியர்கள் என சித்தரித்துக்காட்ட முயலும் அமைப்புகளிற்கு தமிழ் இளைஞர்களின் இவ்வுணர்வு பூர்வமான குருதித்தானம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தமிழர்களின் இரத்தத்தை கோரமாக முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசுடன் இணைந்து சர்வதேசமே உறுஞ்சிய போதிலும் நாம் குருதியை கொடையளிப்பவர்களே என இளைஞர்கள் எடுத்துக்காட்டியதோடு குருதித்தானத்தில் இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்றமை அங்குள்ள வைத்தியாசலை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.