உச்சநீதிமன்ற உத்தரவினை அடுத்து மஹாராஷ்டிராவின் எல்கார் பரிஷத் மற்றும் பீமா கோரேகான் வன்முறை தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை வீட்டுக்காவலுக்கு புனே நீதிமன்றம் அனுப்பியுள்ளது.
தெலங்கானாவின் இடதுசாரி கவிஞர் மற்றும் விமர்சகரான வரவர ராவ், மும்பையின் வழக்கறிஞர் செயற்பாட்டாளர்கள் அருண் பெரேரா மற்றும் வெர்னோன் கொன்சால்வேஸ் ஆகியோரை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே டி வதனே வீட்டுக் காவலுக்கு அனுப்பி வைத்தார்.
அதே போல ஹரியானாவின் சுதா பரத்வாஜ், டெல்லியின் கவுதம் நவ்லகா ஆகிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் சம்பந்தப்பட்ட போலீஸாரால் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இந்த 5 பேரும், அவர்களது வீடுகளிலேயே காவலில் வைக்கப்படுவார்கள்.
ஆனால், அதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் ஒரு நாடகமே அரங்கேறியது.
புனே காவல்துறை சார்பாக ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் உஜ்ஜவலா பவார், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 3 பேரும் மாவோயிஸ்டுகள் என்றும் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று நடந்த எல்கார் பரிஷத் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது தொடர்பான சதி குறித்து விசாரிக்க அவர்களை காவலில் எடுக்க வேண்டும் என்று கோரினார்.
இதே சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் மாதம் கைது நடவடிக்கை மேற்கொண்ட போது கைப்பற்றிய கடிதங்கள் மற்றும் ஆவணங்களை போலீசார் காண்பித்தனர். மேலும், அந்த ஆவணங்களில் ராவ், பெரேரா மற்றும் கொன்சால்வேஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
எனினும், எந்த கடிதங்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டவர்கள் இடையே பரிமாற்றிக் கொள்ளப்படவில்லை.
“தீவிரவாத அமைப்புகளுக்காக நேபாள் மற்றும் மணிப்பூரிலிருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு வரவர ராவ்தான் பொறுப்பாக இருந்தார் என்றும் பெரேரா மற்றும் கோன்சால்வஸ் ஆகிய இருவரும் மாணவ அமைப்பினரோடு தொடர்பு கொண்டு, சிலரை தேர்ந்தெடுத்து நக்சல் பகுதியில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சி செய்தனர்” என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தெரிவித்தார்.
“இவர்கள் அனைவரும் சேர்ந்து அனைத்து இந்திய ஐக்கிய முன்னனி என்ற ஒன்றை உருவாக்கி வருகின்றனர். அதனை அவர்கள் பாசிச எதிர்ப்பு முன்னனி என்று கூறிக் கொள்கின்றனர். இது மாவோயிஸ்ட் அமைப்பின் முன்னனியாக செயல்படும். சுதிர் தாவ்லே நடத்திய எல்கார் பரிஷத் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் இதன் ஒரு பகுதிதான். இவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம்” என்றும் வழக்கறிஞர் பவார் தெரிவித்தார்.
கபிர் காலா மன்ச் என்ற கலாசாரக்குழு புனேவில் எல்கார் பரிஷத் நிகழ்ச்சி நடத்தியதன் முக்கிய நோக்கம், மாவோயிஸ்ட் கொள்கைகளை நகர்ப்புற பகுதிகளில் பரப்ப வேண்டும் என்பதுதான் என்று காவல்துறை கூறுகிறது.
இந்நிலையில், இவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறை முடிவெடுத்தது எவ்வாறு என்று வரவர ராவ் தரப்பு வழக்கறிஞர் ரோஹன் நஹார் கேள்வி எழுப்பினார்.
மேலும் கொன்சல்வேஸின் வழக்கறிஞர் ராகுல் தேஷ்முக் வாதிடும்போது, எல்கார் பரிஷத் திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சி என்றும் அதில் எவ்வாறு சதி நடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
காவல்துறை ஒரு கதையை சொல்கிறது. கடிதங்களில் அவர்கள் பெயர்கள் இருந்ததினால் அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று அர்த்தம் கிடையாது என்றார்.