பிறப்புடனேயே உப்புமூட்டை விளையாட்டைப் போல் இறப்பையும் தூக்கி வருகிறோம். எப்படி உப்புமூட்டையை இறக்கிவைக்கிறோம் என்பது பிறந்த மண்ணையும், மண் சார்ந்த பண்பாட்டையும் அதன் அரசியலையும் பொறுத்திருக்கிறது. கலைச்செல்வியின் கதைகளில் இது பல வகைகளில் நேர்கிறது. சாதித் திருமணங்களால், ஆண்மையற்றவனின் ஆண் திமிரால், விளை நிலங்களில் நீ வற்றிப் போனதால், மனித உயிர்களுக்குச் சேதம் வருவதைப் பொருட்படுத்தாமல் நீர்நிலைகளில் எழும் கட்டிடங்களால், கனிமம் தேடும் வியாபார வேட்டைகளால், சிறு வயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட மனச்சிதைவால், முதுமையால், விட்டில் பழுத்த கனிகள் இருக்கும்போது பிஞ்சுகள் பறிக்கப்படுவதால் என்று பல வகைப்பட்ட மரணங்கள்.
இன்னும் சில இறூதியை எட்டும் நிலையில் உள்ள மனச்சோர்வும், வேதனையும், நினைவு மங்குவதால் விட்டு விட்டுத் தாக்கும் கடந்தகால நிகழ்வுகளின் குத்துவலியுமாய். மரணத்தைச் சுற்றி வியூகங்களாய் நிற்கும் வாழும் பெண்கள், ஆண்கள், குழந்தைகள், வீட்டு மிருகங்கள், பழங்கால வீடுகள், அதிலுள்ள சாமான்கள், காய்கள், கனிகள், தெய்வங்கள், காய்ந்த விளை நிலங்கள், வரண்ட ஆறுகள், கட்டுவிரியன்கள் டமாடும் ஊற்றுகள், ஊளையிடும் நாய்கள், மரணமும் வாழ்வும் இணையாய் ஓடும் கதைகள் இவை.
மரணம் வராமல் படுக்கையில் கிடப்பவர்களின் கதைகளோடு அவர்களைப் பேணுகை செய்பவர்களின் கதைகளும், இறப்பு வராமல் வாழ்பவர்களின் தனிமையும், பசியும், மொழியும் மெளனமுமாய் போகும் கதைகளும் எனச் சாவும் வாழ்வும் ஒன்றோடொன்று மாறி மாறிப் பின்னப்பட்ட கதைகள் இவை. பெரும் வலியையும் தனிமை உணர்வையும் ஏற்படுத்துபவை.
கதைகளினூடே வரும் மனித உறவுகளும் அவற்றின் ஆழங்களும் திடீரென்று வீசும் வாசமாய வரும் பெண்களின் ஒட்டுறவும் மனக்கிடக்கையும் கனக்கும் இக்கதைகளின் மரண அழுத்தத்தைத் தாங்க உதவும் தென்றலாய் வீசப்போகின்றன. அந்தத் தென்றலை உருவாக்குவதுதான் கலைச்செல்வியின் எழுத்தின் பலம்.
பல வகைகளில் வருகிறது இந்தத் தென்றல். வருடலாயும் வருடும்போது சிறு நோவை உண்டாக்குவதாயும் இருக்கிறது. மருமகள் சிறு வயதில் விதவையாகிவிட்டதால் அவள் முன் பூ வைக்காமல் இருக்கும் மாமியார். மகன் இறந்துவிட்டபோதும் என் மருமகளை நாசமாக்கிவிடாதீர்கள் என்று கதறியழுமவள் அன்பு, வயது காலத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்துக் கிடக்கும்போது அந்த மாமியாரைத் தன்னைக் காத்தக் குலதெய்வமாக நினைக்கும் ஓருயிர்.
பயிர்களை அணைத்துக்கொண்டு உங்களுக்குத் தண்ணீர் தராத பாவியாகிவிட்டேனே என்று அழும் மனிதர். அவர் இலையில் சூடாக விழும் மணக்கும் புழுங்கலரிசி. சொத்துக்காக நச்சும் பெண்கள் நடுவே எதையும் பேசாத நடு மகள், அவள் கையில் விஷேசங்களின்போது தந்தை அழுத்தி வைக்கும் பணம். அந்தத் தந்தையை நிலத்தை விற்கச் சொல்லித் தூண்டும்போது வயக்காட்டுக் கிளம்பும் அவர் போகும் முன் மாப்பிள்ளைகளுக்காகச் செய்த அதிரசத்தை எடுத்துவைக்கும் மனைவியிடம் விடைபெறும்போது அவர்கள் கண்களில் சந்திப்பு. கவச குண்டலமாக உள்ள அவர் தோள் துண்டு திண்ணையில் கிடக்க அவர் வயக்காட்டுக்குக் கிளம்புவது தற்கொலைக்குத்தான் என்று காட்டும் சூசகம்.
சிடுசிடுக்கும் அப்பாவுக்கு பேணுகை செய்யும் மகள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக அவன் உதாசீனத்தை நாடும் அப்பாவுக்கு அதைத் தராமல் அவர் ஆணுடம்பை நிதம் துடைத்துவிடும் திருமண வாழ்வு முறிந்த மகன். சிறுவனாக எதிர்கொண்ட பாலியல் பலாத்காரத்தை மாயநதியில் கரைக்கும் சிறுவன். ஒரு பெரிய வீட்டின் வர்ணனை. அந்தப் பெரிய வீட்டில் சோற்றுக்கு அலைந்து, பிரிக்கப்பட்ட வீட்டின் அடுத்தப் பகுதியின் சோற்றுப் பானையிலிருந்து சோறு எடுத்துக் குழம்பு ஊற்றிப் பரபரவென்று திருடித் தின்னும் ஒரு கிழவி. முடக்கிப் போடப்பட்டு வெக்கையில் வாடும் கணவன் நன்றாகக் குளித்துவிட்டு நிம்மதியாக உறங்க விடிகாலையில் ஊற்றில் ஊறும் நீரை எடுக்கும்போது மனைவியின் கண்ணில் படாத கட்டுவிரியன். அவள் வருவாள் வெக்கை தனீயும் என்று காத்திருக்கும் கணவன்.
தெள்ளிய நீரில் அடி மணல் தெரிவதுபோல் கதைகள் வாழ்க்கையையும் அதில் பொதிந்திருக்கும் மரணத்தையும் துல்லியமாகக் காட்டுகின்றன. எல்லாக் கதைகளும் கச்சிதமாகப் புள்ளிகளை லாவகமாக இணைக்கும் கோலங்களாய் அமைந்திருக்கின்றனவா என்றால் இல்லை. சில யதார்த்த கொடுமைகளைக் கூறும் கதைகள் கோபச் சிதறல்களாகவே அமைந்துபோகின்றன.
சினம் வெளிப்படுத்த வேண்டியதுதான். முலையைத் திருகி எறிந்து மதுரையை எரித்த சினத்தைக் கூட லகானிடாமல் கூற அதைக் கையாளப் பழகவேண்டியிருக்கிறது. அதற்கான மொழி மற்றும் மனப் பயிற்சிகளைக் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இல்லாமல்போகும்போது புள்ளிகள் கலைந்த கோலம் கையிலிருந்து கொட்டும் வெறும் மாவாகிவிடுகிறது.
பூ கட்டும்போது நாரின் நீளம் குறைந்துபோவது நேர்வதுதான். அப்போது கட்டப்படாமல் சில பூக்கள் விடுபட்டுப்போகும். கலைச்செல்வியில் எழுத்தின் திறன் அந்த விடுபட்டப் பூக்களையும் நாரின் நீளத்தையும் நம் கண்ணில்படாமல் மறைப்பதுதான். அதை அவர் வலிந்து செய்யாமல் வெகு இயல்பாகச் செய்கிறார்.
அவர் கதைகளைப் படிக்கத் தூண்டுவது அவர் தேடி எடுக்கும் பூக்கள்தாம். சில பூக்களின் வாசத்தையும், இதழ்களின் மென்மையையும், பிய்க்கப்பட்ட சில மொட்டுகளையும் வாடித் தொங்கும் சில பூவிதழ்களையும் நம் மனம் உள்வாங்கும்போது மற்றவை மறைந்துபோகின்றன.
வாழ்வும் சாவும் வலியால் பின்னப்பட்ட இத்தொகுப்பின் கதைகளில் இருப்பது வன்முறை, ஏய்ப்பு, நயவஞ்சகம், அவலம், ஏமாற்றம், ஆற்றாமை இவை நிறைந்த வாழ்வு மற்றும் சாவு. இவற்றின் ஊடே பாசமும் வாஞ்சையும் அன்பும் காதலும் நட்பும் அவற்றிலிருந்து பிறக்கும் ருசியான உணவும், மொழியும் மெளனமும் இதயமும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தாலும் கடைசியில் ஊமைக்காயமான ஒரு வலி மனத்தை நிறைக்கிறது. அது நீர் காணாத பயிர்களின் வலிபோன்ற உணர்வு. அதற்கு வெகு அருகாமையில் நின்றுகொண்டு கதைசொல்கிறார் கலைச்செல்வி. அதுதான் அவரின் சாதனை என்று சொல்லலாம்.
– அம்பை