அமெரிக்காவில் அறுவை சிகிச்சையின் போது மறந்து ஊசியை வைத்து தைத்த மருத்துவரால் 74 வயது நோயாளி வலியால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அமெரிக்காவின் டென்னிசே பகுதியைச் சேர்ந்தவர் ஜான் பர்ன்ஸ் ஜான்சன் (74). இவர் அமெரிக்காவின் ட்ரைஸ்டார் செண்டேனியல் மருத்துவனையில் திறந்த இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர் உதவியுடன் இதய மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்த நிலையில் மருத்துவர் ஸ்ரீ குமார் சுப்ரமணியன் தவறுதலாக ஊசியை மார்பில் வைத்தபடியே அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்து முடித்த பிறகு மருத்துவர் தன்னிடம் இருந்த ஊசியை காணவில்லை என்று கூறியுள்ளார். இதில் பதற்றமான மருத்துவர் ஸ்ரீகுமார் ஜான்சனின் மார்பில் இருந்த ஊசியை நீக்க முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. இதையடுத்து ஊசியை அப்படியே வைத்து தைத்து விட்டனர். இதையடுத்து ஒரு மாதத்திற்குப் பிறகு ஜான்சனுக்கு மறுபடியும் இதயத்தில் வலி ஏற்பட அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் ஜான்சனின் இறப்பு குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ஜான்சனின் இறப்பிற்கு மருத்துவமனை எந்த பொறுப்பும் இல்லை என்று செய்தி வெளியிட்டதோடு வழக்கிற்கு பதிலளிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும்படியான செய்தியினை மருத்துவமனை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.