சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் ரஷ்ய போர் விமானங்கள் வெடிகுண்டுகளை வீசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மூன்று வாரங்களில் இம்மாதிரியான தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல்முறை.
சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத், பொறுப்பற்ற முறையில் தாக்குதல்களை நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சிரிய ராணுவம் அங்குள்ள பயங்கரவாதத்தின் தொடக்கத்தை அழிக்க தயாராக இருப்பதாக தெரிவித்த ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கவ் அந்த எச்சரிக்கையை நிராகரித்துள்ளார்.
இட்லிபில் பெரும்பான்மை பகுதிகளை வைத்திருக்கும் ஜிகாதிகளுடன் தொடர்பு கொண்ட அல் கெய்தா குழு, சிரியாவில் உள்ள ராணுவ தளவாடங்களை அச்சுறுத்தி வருவதாகவும், உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர விடாமல் தடுப்பதாகவும் பெஸ்கவ் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஒன்று இட்லிபின் மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் 16 பகுதிகளில் ரஷ்ய ஜெட்டுகள் 30 தாக்குதல்களை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என மீட்புப் பணிகளில் ஈடுபடும் ஒயிட் ஹெல்மெட் குழு தெரிவித்துள்ளது.
இட்லிப் பிராந்தியத்தில் நடந்திருப்பது ‘ஒரு ‘மாபெரும் மனிதாபிமான தவறு’ என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்ட டொனால்ட் டிரம்ப், இந்த தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சிரியாவில் போராளிகள் வசமுள்ள கடைசி பகுதியான இந்த பிராந்தியத்தை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த சிரியா அரசுப்படைகள் திட்டமிட்டு வருகின்றன.
சிரியா அரசுப்படைகளின் இந்த பதில் நடவடிக்கையால் பல ஆயிரக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கைநிலை மிகவும் கவலைக்கிடமாக ஆகும் என்று ஐ.நா. அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.
இட்லிப் பிராந்தியத்தில் நடந்து வரும் மோதலில் சிரியா அரசுப்படைகளோ அல்லது அதன் கூட்டாளிகளோ ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால் அதற்கு எதிராக அமெரிக்கா பதில் நடவடிக்கையில் இறங்கும் என்று திங்கள்கிழமையன்று அமெரிக்க அரசுத்துறை எச்சரிக்கை விடுத்தது.
ஐ.நாவிற்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது டிவிட்டர் செய்தியில், ”இட்லிப் பிராந்தியத்தில் எல்லோரின் பார்வையும் சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத், ரஷ்யா மற்றும் இரான் மீது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என்ற பொருளில் #NoChemicalWeapons என்ற ஹேஷ்டாக்-கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
முன்னதாக, கடந்த மே மாதத்தில், ஏழு வருட போருக்கு பிறகு, ரஷ்ய மற்றும் இரானிய ராணுவப் படை ஆதரவுடன் ஆசாத் அரசு அலெப்போ உட்பட மத்திய சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இந்நிலையில், தற்போது கிளர்ச்சிப் படைகள் மற்றும் சிரியா அரசு ஆகிய இரண்டும் இட்லிப் மீது கவனம் செலுத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் முன்னதாக இருந்த கிழக்கு கூட்டா பகுதியிருந்து ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இட்லிப்பிற்கு வருகை தந்தனர்.