“பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைப் பார்த்து சமஷ்டி என்றால் உங்களுக்கு என்ன வென்று புரியுமா என அதிபுத்திசாலியான சுமந்திரன் கேட்கின்றார். அத்தலைவர்களுக்கு வெட்கம், சூடு, சுரணை இருக்கின்றனவா? இருந்தால் இவ்விடயத்தில் அவர்கள் காத்திரமான முடிவுக்குப் போவார்கள்” எனக் கூறியிருக்கின்றார் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன்.
ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்பிறேமச்சந்திரன் யாழ் பருத்தித்துறை வீதியில் கட்டைப்பிராய் சந்தியிலுள்ள தன்னுடைய வீட்டில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதன் போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ஊடகவியலாளர் களால் எழுப்பப்பட்டட கேள்விகளுக்குப் பதில்களையும் வழங்கியிருந்தார். அப்போதே மேற்கண்ட விடயத்தை அவர் கேட்டார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:-
“தென்னிலங்கையில் போய் உரையாற்றிய சுமந்திரன் எமக்கு சமஷ்டித் தீர்வு தேவையில்லை என்று கூறியிருக்கின்றார். ஆனால், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ அது அவரின் சொந்தக் கருத்து என்றும் கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்றும் கூறுகின்றன. அதனால், பங்காளிக் கட்சித் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சித்தார்த்தனை நோக்கி இவர்களுக்கு சமஷ்டி என்றால் என்னவென்று விளங்குமா என்று அதிமேதாவித்தனமாகக் கேள்வி கேட்டிருக்கின்றார் சுமந்திரன்.
அத்தோடு தான் மட்டும்தான் அதிபுத்திசாலி என்றும், பங்காளிக்கட்சித் தலைவர்களுக்கு சமஷ்டி என்றாலே என்னவென்று புரியாது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார். ஆனால், சித்தார்தன் முன்னாள் எம்.பியான தர்மலிங்கத்தின் மகன். நீண்டகாலம் போராட்டத்தில் இருந்து வரும் ஒருவர். அது மாத்திரமல்லாமல் நாடாளுமன்றம் நியமித்துள்ள குழுக்களில் அதிகாரப் பகிர்வு பற்றிய ஒரு குழுவின் தலைவராகவும் சித்தார்த்தன் செயற்பட்டிருக்கின்றார்.
இவ்வாறானவர்களை நோக்கி உங்களுக்கு சமஷ்டி என்பது புரியுமா என்று கேள்வியை அதிபுத்திசாலியான சுமந்திரன் கேட்கின்றார். பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு அவர் கேட்பது புரிகின்றதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கு வெட்கம்,சூடு, சுரணை போன்றன ஏதும் இருந்தால் அவர்கள் இது தொடர்பாக சரியான காத்திரமான முடிவுகளுக்குப் போவார்கள் என்று தான் நான்நம்புகின்றேன்.
சுமந்திரனின் அண்மைக்காலமாக செயற்பாடுகள் அனைத்தையும் பார்க்கையில் அவை ஒட்டு மொத்தமாகத் தமிழ் மக்களுக்கு விரோதமானவை மாத்திரமல்லாமல் அவை கூட்டமைப்பிற்குள்ளும் பங்காளிக் கட்சிக்குள்ளும் மாறுபட்ட சிந்தனை கருத்தைக் கொண்டவையாகவே உள்ளன.
ஆகவே,அவரது சிந்தனை என்பது ஒட்டுமொத்தமாகத் தமிழ் மக்களது சிந்தனை அல்ல, கூட்டமைப்பினுடைய சிந்தனை அல்ல என்று அவர்களே கூறுகின்ற பொழுது இவ்வாறான ஒருவரை எவ்வாறு தமது பேச்சாளராகக் கூட்டமைப்புத் தொடர்ந்து வைத்திருக்கின்றது என்பது பெரியதொரு கேள்வியாக இருக்கின்றது.
யாழில் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் நீங்கள் சமஷ்டியைக்கைவிட்டு விட்டீர்களே என்று ஒரு கேள்வியைக் கேட்டதற்காக அவர் அந்தக் கேள்வியையே திசைதிருப்பிப் பதில் கூறியுள்ளார். தான் உயர் நீதிமன்றில் ஒரு வழக்கில் சமஷ்டி கோரிக்கை என்பது தனிநாட்டுக்கோரிக்கை அல்ல என்று ஒரு தீர்ப்பை வென்றார் எனவும் அதனை முதலமைச்சர் ஒரு தபால் காரனாக எடுத்துக்கொண்டு ஓடிப் போய் கண்டியிலுள்ள தலதா மாளிகையில் கொடுத்தார் எனவும் சொல்லுகின்றார்.
உண்மையில் அவர் வாதாடி வென்றாரா, இல்லையா என்பதுவல்ல இப்போது இருக்கின்ற பிரச்சினை. அவ்வாறு வென்ற ஒரு வர் இப்போது என்ன செய்கின்றார் என்பதே கேள்வி. உண்மையைப் பொய்யாக்குவதும் பொய்யை உண்மையாக்குவதுமான விடயங்களையும் செய்வது ஒரு சட்டத்தரணி வேலை. அவர்கள் ஒரு விடயத்திற்காக வாதாடுவது அவர்களுடைய தொழில். அவர்கள் அந்தத் தொழிலைச் செய்கின்றார்கள் என்பதற்காக அந்தக் கருத்தில் உடன்பாடாக இருக்கின்றார்கள் என்றுகூறமுடியாது. தான் அந்தக் கருத்தில் உடன்பாடாக இருப்பவராக அவர் இருந்தால் நிச்சயமாக சமஷ்டி பற்றி தெளிவான புரிதலை அவர் கொண்டிருப்பார். ஆனால் அவ்வாறு அவற்றை அவர் கொண்டிருக்கின்றாரா என்று பார்க்க வேண்டும்.
அண்மைக்காலத்தில் அவர் முதலமைச்சர் பற்றிக் கூறி வரும் கருத்துக்கள் மிக மிக இழிவானவை. அதுவும் உயர் நீதிமன்ற நீதியரசராக இருந்த ஒருவரை மிக மிக இழிவாக- தபால்காரனிலும் விட மிக மோசமாக – சித்திரிக்கின்றமை என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாதது. முதலமைச்சர் சில வேளை மீண்டும் கூட்டமைப்பிற்குள் வந்து விடுவாரோ என்ற ஐயப்பாடு சுமந்திரனுக்கு இருக்கலாம். அவர் வந்து விடக் கூடாதென்பதற்காகவே இவரது சிந்தனைகள், செயற்பாடுகள் இப்படி இருக்கின்றனவோ தெரியவில்லை. அத்தனை தூரம் அவரை இழிவாக விமர்சிக்கின்றார்.
ஒரு கல்விமான் அல்லது நீதியரசர் மேல் வைக்கக் கூடிய விமர்சனத்தையே சரியான மொழியில் முன்வைக்க முடியாத சுமந்திரன் ஒரு கீμத்தரமான வார்த்தைகளில் முதல்வர் மீது விமர்சனத்தை முன்வைக்கின்றமைஏற்புடையதல்ல. அதனை அவர் சொல்வதற்குக் காரணம் உண்டு. தானே சமஷ்டியை வென்றார் எனவும், தான் இன்னமும் சமஷ்டியில் பிடிவாதமாகவே இருக்கிறார் எனவும் காட்டுவதற்காகவே. ஆனால் அவர் தாமே சமஷ்டியைக் கைவிட்டு தமிழ் மக்களும் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற தொனியில் பேசுவது எல்லோருக்கும் தெரியும்” என்றார் சுரேஷ் பிறேமச்சந்திரன்.