கிழக்கு மாகாணத்தில் தமிழ்மக்களிடம் அதிகாரம் இல்லை. அது சிங்கள தரப்பிடமும், முஸ்லீம் தரப்பிடமுமே இருக்கின்றது. இரு தரப்புகளும் கிழக்குத் தமிழ் மக்கள் மீது ஒரு ஆக்கிரமிப்பு யுத்தத்தை தொடுத்துள்ளன. தாயக ஒருமைப்பாட்டை சிதைத்து அரசியல் நீக்கம் செய்யப்பட்ட ஒரு சிதறிய மக்கள் கூட்டமாக மாற்றுவதே இதன் நோக்கமாகும். இவ் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு எதிராக ஒரு தற்காப்பு யுத்தத்தைக் கூட நடாத்த முடியாத நிலையிலேயே கிழக்குத் தமிழர்கள் உள்ளனர்.
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டமே சற்றுப் பலமான மாவட்டமாகும். இது பலமாக இருக்கும் போதே திருகோணமலை மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் எஞ்சியிருக்கின்ற தமிழ்ப் பிரதேசங்களை பாதுகாக்க முடியும். இன்று மட்டக்களப்பு மாவட்டம் தன்னையே பாதுகாக்க திராணியற்றுத் திணறிக்கொண்டிருக்கின்றது. இயற்கையாக மட்டக்களப்பு வாவி இருப்பதனால் படுவான்கரை சற்றுத் தப்பிப் பிழைத்துள்ளது. எழுவான்கரை நாளுக்கு நாள் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றது.
பெயருக்கு பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும், மாகாண அமைச்சர்களும், உள்ளுராட்சிச்சபை உறுப்பினர்களும் இருக்கின்ற போதும் அவர்கள் எதுவும் செய்ய முடியாத கையாறு நிலையில் உள்ளனர். மாகாண தமிழ் அமைச்சர்களை ஏனைய இரு இன அதிகாரிகளும் கணக்கெடுப்பதில்லை என்றும் செய்திகள் வருகின்றன.
இலங்கையுடன் தொடர்புடைய சர்வதேச சக்திகள் இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் முடக்க விரும்புகின்றன.
கிழக்கையும் சேர்த்தால் வடகிழக்கு இணைப்பை ஏற்க வேண்டிவரும். சிங்கள தரப்புடன் பகைக்க வேண்டிவரும் என்பதே இதற்கு காரணமாகும். இதனால் வெளிநாட்டு இராஜதந்திரிகள் வடக்கிற்கு மட்டுமே வருகை தருகின்றனர். கிழக்கிற்கு செல்வதில்லை.
செல்லுமாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் கேட்பதில்லை. தாங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது கிழக்குப் பிரதிநிதிகளை அழைத்துச் செல்வதில்லை. தாமும் கிழக்குப் பிரச்சினைகளை வெளிநாடுகளில் பேசுவதில்லை. மொத்தத்தில் கிழக்கு இருட்டுக்குள் விடப்பட்டுள்ளது.
கிழக்கைக் கையாள்வதில் தமிழ் அரசியல் வரலாற்று ரீதியாகவே தோல்வியடைந்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று கிழக்கில் தமிழ் – முஸ்லீம் முரண்பாடு கூர்மையாக உள்ளது என்பது போதிய கவனத்திற்குள்ளாக்கப்படவில்லை. அவ்வாறு எதுவும் பெரிதாக இல்லை எனக் கூறி அவ்விவகாரத்தை நிலவிரிப்புக்குள் தள்ளுகின்ற நிலையே காணப்பட்டது. இது விடயத்தில் “தமிழ் பேசும் மக்கள்” என்ற கோட்பாடு படு தோல்வியடைந்து விட்டது. அது தமிழ் மக்களுக்கு ஒரு கைவிலங்காகியது. தமிழ் மக்களுக்கு பொறுப்பையும், முஸ்லீம்களுக்கு பொறுப்பின்மையையும் விதித்தது. இம் முரண்பாட்டை கையாள்வதற்கான மூலோபாயங்களும், தந்திரோபாயங்களும் வகுக்கப்படவில்லை. தாயக ஒருமைப்பாட்டைக் குறிக்கும் வட – கிழக்கு இணைப்பிற்கு முஸ்லீம் மக்கள் தயாரில்லை என்றால் கிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத்தொடர்ச்சியற்ற வகையில் வடக்குடன் இணைத்தல், என்ற மாற்று யோசனையை முன்வைத்திருக்கலாம். அதுவும் முன்வைக்கப்படவில்லை.
இரண்டாவது வடக்கின் அதிகாரத்தை கிழக்கில் திணித்தலாகும். இது பிரதேசவாதத்தை கிழப்பியதோடு வடக்கில் தங்கியிருக்க வேண்டிய நிலையை கிழக்கிற்கு ஏற்படுத்தியது. கிழக்கில் வலிமையான சுயாதீன தலைமை ஒன்று வளர்வதையும் தடுத்தது.
தமிழ்;த்தேசிய அரசியலின் எதிர்காலச் செயற்பாடு இந்த இரண்டு குறைபாடுகளையும் களைந்து கிழக்கைப் பாதுகாப்பதற்கு விசேட திட்டங்களை கொண்டதாக இருக்க வேண்டும். இதற்கு நான்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை. ஓன்று கிழக்கில் வடக்கில் தங்கியிராத சுயாதீன தலைமை ஒன்று கட்டியெழுப்பப்படல் வேண்டும். கிழக்கின் விவகாரங்களை கிழக்குத் தலைமை கையால் அளக்கக் கூடியதாகவும்மொத்தத்தேசிய விவகாரத்தை வடக்கும், கிழக்கும் இணைந்து கையாளக்கூடியதாகவும் பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். இரண்டாவது கிழக்கைப் பாதுகாக்கும் இரண்டாவது சுற்றுமதிலாக வடக்கு இருக்க வேண்டும். மூன்றாவது சுற்றுமதிலாக உலகத் தமிழர் இருக்க வேண்டும். நான்காவது சுற்றுமதிலாக உலகின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் இருக்க வேண்டும்.
தமிழ்த்தேசிய அரசியல் கிழக்கைப் பாதுகாப்பதற்கு புதிய மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்படாவிட்டால் தாயக ஒருமைப்பாடு சிதைவதை எவராலும் தடுக்க முடியாத நிலை ஏற்படும்.