ராஜுவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகியோர் மத்திய அரசு தொடர்ந்த இந்த வழக்கையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
கடந்த 2014-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட், ஜெயக்குமார், உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவிக்கை வெளியிட்டார். அதை தொடர்நது 7 பேரையும் விடுதலை செய்வதற்கான உத்தரவையும் தமிழக அரசு பிறப்பித்தது. இந்த நிலையில் 7 பேரின் விடுதலையை தமிழக அரசு முடிவு செய்ய கூடாது என்ற அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு வழக்கை தொடர்ந்தது.
அதில் ராஜுவ்காந்தி கொலை வழக்கு சிபிஐ விசாரித்தது. எனவே சிபிஐ விசாரணை மேற்கொண்டதால் மாநில அரசுகள் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும், மத்திய அரசுக்கு தான் 7 பேரின் விடுதலை தொடர்பான முடிவை எடுக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் விசாரணைக்கு வந்தது. 7 பேரின் சார்பில் ஏற்கனவே நாங்கள் 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கிறோம் என்றும், எங்களுக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக 2014-ம் ஆண்டு குறைக்கப்பட்டது.
இருந்த போதிலும் நாங்கள் 25 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறோம் எனவே எங்களது சிறைதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் எங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர். மேலும் 7 பேரின் விடுதலை பற்றி தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.