ஒரு மருத்துவ போராளியின் கதை இது .- கவிமகன்.இ
மருத்துவம் என்றாலே ஒரு புனிதமான பணி அதிலும் கள மருத்துவம் என்பது போர் காலங்களில் போரணியை காக்கும் மிக முக்கிய பணி. சர்வதேச நாடுகிளின் இராணுவங்களில் மருத்துவ அணி தனித்தனியாக செயற்பட்டு வரும் களமுனை மருந்துவர்கள் போரணியை மட்டும் காக்கும் பணியையும் மக்கள் பணியில் இருக்கும் அணியினர் மக்களை பாதுகாக்கும் பணியிலும் செயற்படுவர் ஆனால் எங்கள் மண்ணில் சண்டை இறுதி நிலைக்கு வந்திருந்த தருணங்களில் எங்கள் மருத்துவ அணி வளங்கள் எதுவும் அற்ற நிலையில் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையே போராடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் போராளிகள் என்ற பாகுபாடின்றி மருத்துவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள் அப்படியான ஒரு இரவில் தான் அந்த மருத்துவனும் முழித்ததிருந்தான்.
இரவு முழுவதும் பயங்கர செல் தாக்குதல் முன்னணி அரண்கள் வீட்டு முற்றத்துக்கு வந்து போராளிகளும் இராணுவமும் கைகலப்பு செய்ய கூடிய தூரத்தில் மோதிக்கொண்டிருந்த அந்த பொழுதுகள். விடுதலைப்புலிகளின் மருத்துவ போராளிகளும் தூக்கமின்றி உணவின்றி தங்களால் ஒரு உயிரை காக்க முடியுமா என்ற ஏக்கத்தோடு பனைக்குற்றிகளின் அடுக்குகளுக் கிடையில் பணி செய்து கொண்டிருந்த கடுமையான நினைவுகள்.
அவர் ஒரு மூத்த மருத்துவ போராளி நீண்ட நாட்கள் தூக்கமின்மை தொடர் சத்திர சிகிச்சைகள் என அவர் ஓயாது ஓடிக்கொண்டுருந்தார். எதிரித் தாக்குதலில் காயப்பட்ட ஒரு சிறுவனுக்கு சத்திர சிகிச்சை அழித்த பின் சிறு ஓய்வு கிடைக்குமா? அவர் எதிர்பார்ப்போடு அந்த பனைக்குற்றிகளை விட்டு வெளி வர “டொக்டர் கொஞ்சம் தூங்குங்கோவன்… காயங்கள் தொடர்ந்து வருகுது ரெஸ்ட் எடுத்தால் தான் நல்லது களப்படப்பிடிப்பு போராளி ஒருவன் வினவுகிறான். ” ம்ம்… சாப்பாடு எதாவது இருக்காடா…? தெரியல்ல டொக்டர். அங்கே உணவு வைப்பதற்காக இருந்த தறப்பாள் கொட்டிலுக்குள் போன மருத்துவ போராளி அங்கே எதுவும் இல்லாதது கண்டு பசியுடன் திரும்புகிறான். ஆனால் அவன் விழிகளில் அந்த பொதி தட்டுப்படுகிறது. யாரோ எப்ப உண்டார்கள் என்று தெரியாத நிலையில், பழுதடையாத நிலையில், கசக்கி வீசப்பட்ட ஒரு பொலித்தீன் (shopping bag) பையில் இருந்த ஒரு திரளை சோற்றையும் அதற்குள் கிடந்த பருப்பு கறியையும் உண்டு விட்டு வாளியில் இருந்த தண்ணீரில் கையை அலம்பிக் கொண்டு நகர்கிறார் அடுத்த காயத்தை பரிசோதிக்க….
எங்கள் போராளிகள் குப்பையில் இருந்தவற்றை கூட உணவாக்கி தங்கள் உயிர்களை தாய் மண்ணுக்காக குடுத்து சென்ற வீரத்தையும் உணர்வுகளையும் நாமும் எமது இளையவர்களும் மறந்திட முடியுமா? அந்த புலி வீரன். அந்த மருத்துவ போராளி ஆண்டுகள் பல களமுனைகளை வாழ்வாக்கி வாழ்ந்தவன். தன்னிலை மறந்து மக்களின் வாழ்வுக்காக தம்மை அர்ப்பணித்த இந்த மறவர் தியாகங்கள் முள்ளிவாய்ககால் மண்ணில் எருவாகிடலாமா…?
மீள்பதிவு கவிமகன்.இ
14.05.2016