போருக்குப் பிறகு வடக்கு கிழக்கில் உருவாகியுள்ள வன்முறைச் சூழல் தமிழ் மக்கள் எதிர்கொண்ட போர் கால அச்சத்தை இன்றும் நீங்கிவிடாமல் வைத்திருக்கிறது. இன்றும் யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் வாள்வெட்டுக்கள் நடைபெறுகின்றன.
“யுத்தம் முடிஞ்சதுக்கு பிறகு எங்கட பகுதியில ராணுவத்த வைச்சிருக்க தேவையில்ல.., வடபகுதிய விட்டு ராணுவத்த வெளியேற்றினால் அரசாங்கத்துக்கு அவர்களை பராமரிக்கிறது கஷ்டம். வட பகுதியின் அமைதிய குழப்பத்தான் ராணுவத்த அரசாங்கம் வைச்சிருக்குது… இந்த வாள் வெட்டு பாலியல் வல்லுறவு போன்ற குற்றங்களும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள ராணுவத்தின் பார்வைக்கு கீழ் தான் நடக்குது. இத சாதகமாக்கி தங்களுடைய தனிப்பட்ட விரோதங்களை தீர்த்துக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றது” என இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையை விபரிக்கின்றார் அங்கு இருக்கும் ஆசிரியர் ஒருவர்.
நவம்பர் மாத நடுப்பகுதியில் யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஒரு வாள் வெட்டு சம்பவத்தை பற்றி பகிர்ந்து கொண்ட ஒரு நபர்,”எனக்கு என்ன நடக்குதென்றே தெரியல, உண்மையில் என்ட அக்காவை தான் அவர்கள் வெட்டியிருக்க வேணும், என்ட அக்காவ யாரோ ஒருவர் காதலிச்சு இருக்கிறார். அதுக்கு அக்கா ஒத்துக்கொள்ளாத படியால எங்களை சிலர் வாள்களைக்கொண்டு தாக்கினர். நான் தான் காயப்பட்டன். பிறகு அவர்கள் ஓடிவிட்டனர். போலீசில சொல்லியிருக்கிறம், சம்பவம் நடந்த பிறகு போலீஸார் எங்கட பகுதியில குவிக்கப்பட்டாங்கள். ரெண்டு நாள் தொடர்ந்து அவர்களின்ற கட்டுப்பாட்டிலதான் எங்கட வீட்டுப் பகுதி இருந்தது. ஆனால் யாரையும் கைது செய்யல. நாங்க சரியா பயந்து போய் இருக்கிறதும். வேறு எங்கையாவது போகலாம் என இப்ப முடிவு எடுத்திருக்கிறம். ஆனால் எமக்கு அவர்களினால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் இருக்கு. இங்குள்ள எந்த அரசியல் கட்சிகளும் இந்த சம்பவம் தொடர்பாக எதுவும் விசாரிக்கல. இத இரு நபர்களுக்கு ஏற்படும் தனிப்பட்ட பிரச்னையாக பாக்கினம். அதனால அவர்கள் யாரும் தலையிடுவதில்ல. தேர்தல் வந்தால் தான் அவர்கள் மக்களிடம் வருவார்கள். அதுவும் எங்கட வாக்குறுதிகளின் பெறுமதிகளை கருத்தில் கொண்டுதான். ஆனால் இது எங்கட சமூகத்தோட உயிர் சார்ந்த பிரச்னை. ஆனால் அவர்கள் எதுவும் செய்வதாக தெரியவில்லை” என்றார் மிகுந்த வேதனையுடன்.
கடந்த நவம்பர் 16ம் தேதி வாள் வெட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறும், வாள்வெட்டு கலாச்சாரத்தை உடன் கட்டுபடுத்துமாறு அவசர உத்தரவை பிறப்பித்திருந்தார் நீதியாளர் இளஞ்செழியன்.
நீதியாளரின் இந்த உத்தரவையடுத்து அன்றைய தினமே வடக்கு சிரேஷ்ட பிரதிப் போலீஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் எஸ்.ரி.எப். படைப்பிரிவு கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டன. அதன் நடவடிக்கையில் இரண்டு மூன்று நாட்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஏற்கனவே வடக்கில் ஐந்து பொதுமக்களுக்கு ஒரு ராணுவ வீரர் காவல் காத்து வரும் நிலையில், இந்த படைப்பிரிவும் அங்குள்ள மக்கள் இயல்பு வாழ்க்கையை தொடர முடியாத அளவிற்குப் பதற்றத்தில் வைத்துள்ளது.
இந்த வன்முறைகளை ஒடுக்க அரசு நேரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வட மாகாணத்தில் செயற்பட்டு வருகின்ற ”ஆவா” குழுவினரை அழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கடந்த 18ம்தேதி தெரிவித்திருந்தார்.
அவருடைய கருத்துப்படி பார்த்தால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சே உருவாக்கிய ஆவா குழு இன்னமும் வடக்கில் இயங்கிக்கொண்டு தான் உள்ளது. இந்த சட்டவிரோத செயல்களை அரசே செய்து கொண்டு,வெளியில் வேஷம் போட்டு வருவதை இங்கு காண முடியும்.
”வடக்கில் சமூக விரோத செயல்களை பெருமளவில் நிகழ்த்தி வந்த ஆவா குழுவினரை உருவாக்கியது கடந்த கால ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சே தான்” என்ற இலங்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தினவின் கருத்து பற்றி வடமாகாண சபை முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு, “இவ்விடயம் உண்மையாக இருக்கும் நிலையில், தற்போதைய அரசில் மிகப் பெரிய வலுவுடன் இருக்கக்கூடிய அமைச்சர் ராஜித சேனாரத்தின அவர்கள் அரசின் முழு அனுமதியுடன் இந்தச் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரவும் சம்மந்தப் பட்டவர்களை இனங் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளலாம். ஊடகங்களக்கு மட்டும் இவ்வாறான செய்திகளை வழங்கிவிட்டு செயற்படாமல் இருப்பது, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரைத் தொடர்ந்து அங்கு வைத்திருப்பதற்கும், நீண்ட கால யுத்தத்தின் பின்னர் ஒரு அமைதிச் சூழலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்ற வடக்கு கிழக்கு மக்களை இயல்பு நிலைக்கு செல்லவிடாது குழம்பிய நிலையில் வைத்திருப்பதும் அவர்களை அடக்கி ஆள எத்தனிப்பதற்கான ஒரு தந்திரோபாய செயற்பாடோ? என ஐயப்பட வைக்கின்றது. இருப்பினும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண போலீஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. எம்மிடம் போலீஸ் அதிகாரங்கள் இல்லை என்பதையே மீண்டும் வலியுறுத்துகின்றேன். மத்திய அரசின் தீர்மானங்களிலேயே எமது எதிர்பார்ப்புகள் தங்கியிருக்கின்றன” என்கிறார் வேதனையுடன். வட மாகாண சபைக்கு இலங்கை அரசு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்க மறுப்பது எப்படியான சிக்கலை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
இவ்வாறான ஒரு நிலையில், அங்குள்ள பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் பாவனையின் மூலம் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குடும்ப வன்முறைகள், பாதுகாப்புத்தரப்பில் இருந்து விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள், பாலியல் ரீதியிலான அச்சுறுத்தல்கள் என பெண்களின் பாதுகாப்பு, மற்றும் வாழ்வாதாரம் பல வடிவங்களில் கேள்விக்குறியாகியுள்ளது.
இதில் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருவது பெண் தலமைத்துவக் குடும்பங்கள் தான் என்கிறார் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன். “குடும்ப சீவியம் மற்றும் பிள்ளைகளின் கல்விச் செலவு போன்றவற்றை ஈடுசெய்ய முடியாது அவர்கள் திண்டாடிவருகின்றார்கள். கிடைக்கும் தொழில்களை செய்து தமது வாழ்வை நடத்திவரும் இவர்களை இலக்குவைத்து தனியார் நிதிநிறுவனங்கள் திட்டம் போட்டு மோசடி செய்து வருகின்றனர். பாரிய இனவழிப்பு போரில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் இன்று உயிர்வாழ்வதற்கே போராடும் நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு நலிவடைந்து காணப்படும் குடும்பங்களின் ஆண், பெண் பிள்ளைகளை இனம் கண்டு, அவர்களை இந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கும் ஒரு செயற்பாடும் அங்கு முன்னெடுக்கப்படுகின்றது.
போர் முடிந்து எட்டு வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் முற்று முழுதாக வட கிழக்கில் இருந்து வாபஸ் பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை என்னும் வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், “இராணுவத்தினரும் சிங்கள போலீசாரும் வட கிழக்கில் இருக்கும் வரையில் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த முடியாது. 2009ம் ஆண்டு வரையில் போதைப் பொருட்கள் பாவனை வடக்கில் இருக்கவில்லை என்பதை நாம் மறக்கக் கூடாது” என்கிறார். ஆம், ராணுவத்தின் பெரும் இருப்புக்கிடையேயும் நடக்கும் வாள் வெட்டுகள், போதைப் பொருள் பயன்பாடுகள், பாலியல் வன்முறைகள் தமிழர் வாழ் பிரதேசங்கள் பரவியிருப்பதன் மூலம் முதல்வரின் இச்சொல் மறுக்கமுடியாத வரலாற்று உண்மை அடங்கியிருக்கின்றது.
தொடரும்…