சமீப ஆண்டுகளாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து காணப்படுவது அதிகாரப்பூர்வ தகவலின் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
போலீசின் தகவல் அடிப்படையில், 2016ல் கடத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டதாக 18 வழக்குகளும் குழந்தைகள் மீட்கப்பட்டதாக மூன்று வழக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே 12 பெண்களும் 7 பெண் குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளனர். இந்த கடத்தலில் சிக்கிய பெரும்பான்மையானோர் ஹரித்வார், டெஹராடூன், உதம் சிங் நகர் மாவட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் கடத்தப்படுவதாக தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில பெண்கள் ஆணையத்தின் செயலாளர் காமினி குப்தா, “கடத்தப்படும் பகுதிகளை கண்டறியும் முறையான அமைப்பை நாம் உருவாக்க வேண்டும். பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் கடத்தப்பட்ட பெண்களை மீட்க உதவும்” எனக் கூறியுள்ளார்.
குழந்தைகளுக்கான உரிமைகளை பாதுகாக்கும் மாநில ஆணையத்தின் தலைவர் உஷா நகி, “பிச்சை எடுக்க வைக்கவும், குழந்தை தொழிலாளியாக பயன்படுத்தவதற்காகவுமே பெரும்பான்மையாக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதிலும் பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். காணாமல் போன் குழந்தைகள் பற்றிய தகவல்களை வைத்திருப்பதற்கான அமைப்பை உருவாக்கி வருகிறோம். ” எனக் கூறியிருக்கிறார்.
மாவட்டந்தோறும் கடத்தல் வழக்குகளை கண்காணிப்பதற்கான தனிப்படையை அமைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.