தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டது ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தெலங்கானா மாநிலத்தின் முதல் சட்டப்பேரவைக்கான தேர்தல், அப்போதைய நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்டது. சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஜூன் 2, 2004இல் ஆட்சியமைத்தது.
அரசின் ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், சட்டப்பேரவையை கலைக்கக்கோரி முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் (கே.சி.ஆர்) பரிந்துரை செய்ததை ஏற்றுக்கொள்வதாக அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். தெலங்கானாவில் சட்டப்பேரவையை நடந்தும் முடிவு தேர்தல் ஆணையத்தின் கையில் இருந்தாலும், அதில் மத்திய அரசும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும். சந்திரசேகர ராவ் பிரதமர் நரேந்திர மோதியை அவ்வப்போது விமர்சித்தாலும், பொதுவாக அவருடன் நல்லுறவை கடைபிடிப்பதற்கே முயற்சித்து வருகிறார்.
சட்டப்பேரவையை கலைக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பு, டெல்லிக்கு வந்த கேசிஆர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார். வரும் டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களுடன் சேர்த்து தெலங்கானா மாநிலத்திற்கான தேர்தலும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டம் என்ன?
பதவிக்காலத்திற்கு 9 மாதங்கள் முன்னதாகவே ஆட்சியை கலைப்பது பொது மக்களின் பணத்தை வீணாக்கும் செயல் அல்லவா?
சட்டப்பேரவையை கலைப்பதற்கான முதன்மையான காரணங்களாக கேசிஆர் கூறும் அனைத்துமே முற்றிலும் அரசியலே தவிர வேறேதுமில்லை. கேசிஆர் நாடு தழுவிய அரசியலில் ஈடுபட விரும்புவதாக பரவலாக நம்பப்படுகிறது. அதாவது, மத்தியில் தான்ஆட்சியில் அமர்வதற்கும், தனது மகன் தரக்க ராமா ராவ் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்கும் கேசிஆர் விரும்புகிறார்.
தெலங்கானாவில் தனக்கான இடத்தை பிடிப்பதற்கு காங்கிரஸ் கட்சி தடுமாறி வரும் நிலையையும், மோதியின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையையும் பயன்படுத்திக்கொள்ள அம்மாநில கட்சிகள் ஆர்வம்காட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தேசிய அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க விரும்பும் கேசிஆர் ஆட்சியை முன்னதாக கலைப்பதன் மூலம் மாநிலம் முழுவதும் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பேசப்படுவோம் என்று கருதுகிறார்.
தேர்தல்களுக்கான வரையறைகளும், திட்டங்களும் மாநிலத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் இருப்பதில்லை. நான்கு மாநிலத் தேர்தல்களும் ஒன்றாக நடத்தப்படும் பட்சத்தில் அதில் கிடைக்கும் முடிவுகள் எதிர்மறைவான விளைவுகளை கூட ஏற்படுத்தலாம். குறிப்பாக, தெலங்கானாவை தவிர்த்து மற்ற மூன்று மாநிலத்தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடையும்பட்சத்தில், தற்போது எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் தெலங்கானாவில் எழுச்சி பெற்று பலமடையலாம்.
இந்நிலையில், சட்டப்பேரவை கலைப்பு நடவடிக்கைக்கும், கேசிஆரின் சோதிடம், முகூர்த்தம் மீதான நம்பிக்கைக்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது பிரதான காரணமாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானாவின் பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று மத்தியில் ஆதிக்கம் செலுத்துவதற்கு கேசிஆர் விரும்புகிறார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலங்கானாவிலுள்ள 17 தொகுதிகளில் 16ஐ கைப்பற்றுவோம் என்று அவரது மகன் கேடிஆர் ஏற்கனவே கூறியுள்ளார். காங்கிரஸ் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவிப்பதற்கு தயாராகி வருகிறது.
நலத்திட்டங்களை முன்னிறுத்தி பிரச்சாரம்
தங்களது நான்காண்டு கால ஆட்சியில் செயற்படுத்தியுள்ள மக்கள் நலத்திட்டங்களை தோற்கடிக்கவே முடியாது என்று நம்பிக்கையுடன் இருக்கும் கேசிஆர், அதை முன்னிறுத்தி வாக்குகளை பெறுவதற்கு ஆயத்தமாகி வருகிறார். குறிப்பாக மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களால் பாராட்டப்படும் “ரைத்து பந்து” என்ற விவசாயிகளுக்கு பலனளிக்கும் திட்டம் தங்களது அரசை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் என்று கேசிஆர் பெரிதும் நம்புகிறார்.
இந்த திட்டத்தின் மூலம் தெலங்கானா மாநில விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், ஒவ்வொரு ஏக்கர் நிலத்திற்கும் வருடத்துக்கு 8000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இதேபோன்று மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டம், ஆதரவற்றவர்களுக்கு ஆடைகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு சேலைகள் வழங்கும் திட்டம் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டம் ஆகியவை மாநிலம் முழுவதும் கேசிஆருக்கு நற்பெயரை பெற்றுத்தந்துள்ளன.
பகுதிவாரியாக வாழும் குறிப்பிட்ட சாதியினரின் தகவல்கள் உள்ளிட்ட பல தரவுகள் தெலங்கானா அரசாங்கத்தால் வெளியிடப்பட்டன. இது நலத்திட்டங்களை எளிதாக செயற்படுவதற்காக வெளியிடப்பட்டதாக கூறப்பட்டாலும், இது அரசியல் காரணங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. சாதிரீதியிலான தகவல்களின் அடிப்படையில், திட்டங்களை செயற்படுத்திய கேசிஆர் அரசாங்கம் அதன் முன்னோடிகளை விஞ்சியது.
ஆட்சியை நடத்தும் பாணியிலும், மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்தும் விதத்திலும் என்டிஆர் மற்றும் ஒய்எஸ்ஆர் ரெட்டி ஆகிய இருவரின் கலவையாக கேசிஆர் செயல்படுகிறார்.
எந்த ஒரு விடயமென்றாலும் மற்றவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதை விட, தன்னிச்சையாக சிந்தித்து முடிவெடுப்பதையே கேசிஆர் தனது பாணியாக கொண்டுள்ளார். எப்போதாவது மட்டுமே தலைமைச்செயலகத்துக்கு வருவதை பழக்கமாக கொண்டுள்ளன கேசிஆர், தனது விவசாய பண்ணைக்குள்ளிருந்தே ஆட்சியை நடத்துவதாக வல்லுநர்கள் விமர்சிக்கின்றனர்.
தனது அரசின் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை என்ற குற்றச்சாட்டுகளை அவர் ஒருபோதும் கண்டுகொண்டதே இல்லை. தனது மகன், மகள் மற்றும் மருமகன் வாயிலாக குடும்ப ஆட்சியை முன்னெடுப்பதாக எழும் கேள்விக்கும் இதுவரை கேசிஆர் பதிலளிக்கவில்லை.
அதிகரிக்கும் கடன் சுமை
கேசிஆரின் அரசாங்கம் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை செயற்படுத்தி வரும் அதே நிலையில், அரசின் கடன் சுமையும் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அரசின் நிதிநிலை அறிக்கையில், தெலங்கானா அரசாங்கம் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடிகள் கடனில் சிக்கியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 119 இடங்களில் 65 இடங்களில் மட்டுமே வென்ற டிஆர்எஸ் கட்சியின் இன்றைய பலம் 90.
மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கே.சி.ஆருடன் இணைந்தனர். குறிப்பாக, ஆந்திரப்பிரதேசத்தில் தற்போது ஆட்சியிலுள்ள தெலுங்கு தேசம் கட்சி பெயரளவிற்கே தெலங்கானாவில் உள்ளது.
கட்சிகளிலுள்ள ஒவ்வொருவரும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள விரும்பும் தெலங்கானாவில் தலைமைக்கான வெற்றிடம் அடிக்கடி உணரப்படுகிறது. முதல்வர் பதவிக்கு 10 பேர் போட்டியிடும் சூழல் நிலவுவதாகவும், மக்கள் ஆதரவைப் பெறக்கூடிய ஒரு தலைவருக்கான பஞ்சம் நிலவுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், கேசிஆரின் குடும்பத்தில் அரசியலை மையப்படுத்தி பிரச்சனை வருமா என்பதை எதிர்பார்த்து எதிர்க்கட்சிகள் ஆவலோடு காத்திருக்கின்றன. கேடிஆர் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்புவரை, கேசிஆர் தனது மருமகன் ஹரிஷ் ராவை கட்சிப்பணியில் ஈடுபடுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கேடிஆருக்கு கட்சியில் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில், ஹரிஷ் எப்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் பலர் உள்ளனர்.