கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு கடந்த வருடம் ஆயுள் தண்டனை விதிக்ப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் பிள்ளை கனிரதன் வரும் 17 .09 .2018 அன்று ஜெனிவா முருகதாசன் திடலில் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு நடைபெறும் பொங்குதமிழ் பேரணியில் எமது அப்பாவை விடுவிக்க வேண்டுகோள் வையுங்கள் என அழைப்புவிடுத்துள்ளார்.
தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிஞ்சுகள் பரிதவித்து நின்றன.
இந்நிலையில், குறித்த பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஆனந்தசுதாகரனை விடுதலை செய்யுமாறு தாயக பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து கையெழுத்துப்பேராட்டம் போன்றவற்றை மேற்கொண்டனர்.
ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இருவரும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான பல கடிதங்களை எழுதியிருந்தனர்.
எனினும் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் விடுவிக்கப்படாத நிலையில் கடந்த வெசாக் பூரணை தினத்தில் ஆனந்தசுதாகரனை விடுவிக்குமாறு சிறிலங்கா ஜனாதிபதிக்கு அனைத்துத் தரப்பினராலும் அழுத்தங்கள் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
ஆயினும் இதுவரையில் ஆனந்தசுதாகரன் விடுதலை செய்யப்படவுமில்லை அவர்களது பிள்ளைகளின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படவுமில்லை.
தனது தந்தையுடன் சேர்ந்து வாழப்போகின்ற நாள் எப்போது என பல்வேறு ஏக்கங்களுக்கு மத்தியில் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் இருவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த பிள்ளைகளின் கோரிக்கைக்கு இதுவரையில் எவ்வித தீர்வுகளும் வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியது என்பதுடன் ஆனந்தசுதாகரனையும் அவரது பிள்ளைகளையும் எம்மில் அதிகமானவர்கள் மறந்து விட்டனர்.