“உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தினை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும்” என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உறுதி வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கருக்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுக்கும் இடையேயான சந்திப்பொன்று நேற்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் கருத்து வெளியிட்ட இரா. சம்பந்தன், முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில் இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது எனினும் மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை என்பதனை வலியுறுத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த இரா. சம்பந்தன், காணாமல் போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாது எனவும் மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தினார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாது என்பதனை வலியுறுத்திய சம்பந்தன், அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம் என்பதனையும் சுட்டிக்காட்டினார். அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கையானது நியாயமானது மட்டுமன்றி அது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது என்பதனையும் எடுத்துக்கூறினார். மேலும் தமிழ் மக்கள் கடந்தகால தேர்தல்களில் ஒருமித்த பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவிற்குள் அரசியல் தீர்வொன்றினை அடைவதற்கு தமது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளமையையும் மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பினை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளதனையும் சுட்டிக்காட்டினார்.
தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று எட்டப்படாதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தின் நிமித்தம் இலங்கையை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள் அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் தற்போது இலங்கையை விட பன்மடங்கு முன்னேறியுள்ளதனையும் ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் இலங்கை நாட்டினை பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளமையையும் சம்பந்தன் எடுத்துக் கூறினார்.
புதிய அரசியல் யாப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள் ஒரு சாதகமான முடிவினை எட்டவேண்டும் என்பதனை வலியுறுத்திய சம்பந்தன், அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தினை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டிற்கு எதிர்காலம் இல்லை என்பதனையும் வலியுறுத்தினார். இதன்போது கருத்து தெரிவித்த எம். ஏ சுமந்திரன், புதிய அரசியல் யாப்பொன்று நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை என்றும் அவர்களிடையையே அதிகாரப்பகிர்வின் நன்மைகளை எடுத்து சொல்லவேண்டியதன் அவசியம் உள்ளதனையும் எடுத்துக்கூறினார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த சம்பந்தன், இலங்கை அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தினையும் கோரியிருந்தது. ஆகவே இந்த பிரேரணையை முழுமையாக நிறைவேற்றவேண்டிய கட்டாய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு என தெரிவித்தார். மேலும் பிரேரணையில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதனை அங்கத்துவ நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளதனையும் சம்பந்தன் எடுத்துக்கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஓத்துழைப்புடன் செயற்படும் எனவும் இலங்கை விவகாரம் தொடர்பில் தொடர்ந்தும் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் வலியுறுத்தினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட பிரதிநிதி உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தினை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என உறுதி வழங்கினார்.