முன்னாள் பிரதமர் ராகுல் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை மாநில அரசின் கைகளில் உள்ளது என சமீபத்தில் வெளியான தீர்ப்பை அடுத்து, அவர்களது விடுதலை குறித்த பரபரப்பு அதிகமானது.
இதையடுத்து இன்று மாலை அமைச்சரவை கூட்டப்பட்டு இதற்கான நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அறிவித்து இருந்தது. கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பாக இயக்குனர் பாரதி ராஜா, அமீர் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதி ராஜா, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் மன்னித்து, விடுதலை செய்யலாம் என கூறிய ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு நன்றி என தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இவர்கள் விடுதலைக்காக போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து தங்களது இளமையும், வாழ்வையும் இழந்த இவர்கள் 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அனைத்து துன்ப பூட்டுகளையும் திறக்கும் திறவுகோல் ஆட்சி அதிகாரம் மட்டுமே என்ற அம்பேத்கரின் கருத்தை உண்மையாக்கி, அவர்கள் 7 பேரின் துன்ப பூட்டை உங்கள் ஆட்சி அதிகாரம் மூலம் திறந்து விடுமாறும், அவர்கள் சுதந்திர காற்றை சுவாசித்து, குடும்பத்துடன் எஞ்சிய வாழ்வை அனுபவிக்க வழிசெய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.