வவுனியா, கனகராயன்குளம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்று தமது காணியின் ஒரு பகுதியில் ஹோட்டல் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு வாடகைக்கு இடத்தை வழங்கியிருந்தனர். தாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் குறித்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றில் குறித்த ஹோட்டலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து குறித்த காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார். ஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளராகிய எனது கணவரிடம் தெரிவித்தார். அதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி எனது கணவருடன் தாவீது ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர் காவல்துறையினரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து எனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்தார். இதன்போது எனது கணவர் எமது காணி வேலியருகில் சென்ற போது அங்கு சிவில் உடையில் காவல்துறை வாகனத்தில் வந்த கனகராயன்குளம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி எனது கணவரை கடுமையாக தாக்கினார். இதை அவதானித்து தடுக்க சென்ற எனது மகனையும் கழுத்தை நெரித்து தாக்கினார். இச்சம்பவத்தை அவதானித்த நான் கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது என்னையும் தள்ளி விழுத்தி கனகராயன்குளம் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரி தாக்கினார். இதன்போது நான் அணிந்திருந்த சட்டை காவல்துறையினரால் கிழிக்கப்பட்டுள்ளது.
எனக்கு காவல்துறை தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது அவளது வயிற்றில் எட்டி உதைத்து காவல்துறையினர் தாக்கியதில் எனது மகள் வயிற்று வலியால் துடித்து தற்போது இரத்தப் பேக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து எனது கணவரையும், வீட்டிற்கு வந்த இளைஞர் ஒருவரையும் கனகராயன்குளம் காவல்துறை கைது செய்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் எனது கணவர் பே.வசந்தகுமார் (வயது 42) பொலிசாரின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளார். பிள்ளைகளான கிருபாகரன் (வயது 16), சர்மிளா (வயது 14) ஆகியோர் காவல்துறையின் தாக்குதலில் காயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நான் மாங்குளம் காவல்துறையில் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போது அவர்கள் நீண்ட நேரம் இழுதடித்துடித்து விட்டு முறைப்பாட்டை பதிவு செய்யாது திருப்பி அனுப்பினர். இதன்பின் வவுனியா இளைஞர்களின் ஒத்துழைப்புடன் மீண்டும் அதிகாலை 1.30 மணியளவில் மாங்குளம் காவல்துறை நிலையம் சென்று முறைபாட்டை பதிவு செய்ததுடன், வவுனியா பிரதி காவல்துறை மா அதிபர் காரியாலயத்தில் உள்ள தமிழ் மொழி மூலமான முறைப்பாட்டு பிரிவுக்கும் முறைப்பாடு செய்துள்ளேன். கனகராயன்குளம் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு எதிரான முறைப்பாடு என்பதால் தாம் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது உதவிப் காவல்துறை அத்தியட்சகரிடமே முறைப்பாடு செய்ய வேண்டும் என காவல்துறையினர் இழுத்தடிக்கின்றனர். இதனால் அச்சத்துடனேயே நேரத்தை கழிக்க வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.