வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒலுமடு கிராமத்தில் இருந்து மூன்று கிலோ மீற்றர் தொலைவில் தமிழரின் பூர்விக பிரதேசமான வெடுக்குநாரி மலை அமைந்துள்ளது.
குறித்த மலைப்பகுதியில் ஆதி லிங்கேஸ்வரர் எனும் சிவனுடைய லிங்கம் காணப்படுவதுடன் தமிழ் மக்களுடைய நாகர்களின் புராதன பிராமிய எழுத்துக்களும் காணப்படுகின்றன . கடந்த ஐந்து தலைமுறையாக அப்பகுதி மக்கள் குறித்த ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் கடந்தவாரமளவில் தொல்பொருள் திணைக்களத்தால் குறித்த மலைக்கு பொதுமக்கள் சென்று வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் இத்தடையினை தற்காலிகமாக தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடன் நெடுங்கேணி பொலிஸார் நீக்கி வழிபாடுகளை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதியளித்துள்ளதுடன் ஆலயத்தினை புனரமைப்பு செய்வதற்கும் புதிய கட்டிட நிர்மாணப்பணிகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆலயத்தினை முழுமையாக மீ்ட்டுத்தருமாறு கோரி வெடுக்குநாரி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையினர் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நிலையிலேயே கடந்த சில வாரங்களாக பல அரசியல்வாதிகள் நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டனர். அந்த வகையில் இன்று (09.09) பாராளுமன்ற உறுப்பினர்களான சார்ல்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன் , வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் , ஜீ.ரி.லிங்கநாதன் , தியாகராஜா , எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.
பாலமோட்டை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு காவடிகள், பால்ச்செம்பு என்பன வருகை தந்தமை சிறப்பம்சமாகும்