காஷ்மீர் மாநில எல்லைக்கோடு பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் இன்று நான்காவது நாட்களாகவும் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த தாக்குதலானது பொதுமக்களை இலக்கு வைத்து நடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனால் எல்லைப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், இதுவரை சுமார் ஆயிரத்து 700இற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அப்பகுதியில் நிலைமை சீராகும் வரை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்துமீறலுக்கு இந்தியா தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகிறது.
அந்தவகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் வீரர்கள், காஷ்மீரில் ரஜோரி பகுதிகளில் உள்ள எல்லைப் பகுதியில் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சிறிய ரக பீரங்கிகளால், இந்திய எல்லையோர கிராமங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை சுமார் இருவர் உயிரிழந்துள்ளனர்.