“கலா நீ முழு நேரத் தொழில் செய்யும் ஒரு பெண். நீ வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் யாருடைய உதவியையும் எடுப்பதில்லை. ஆனாலும் உனது வீடு எந்த நேரமும் துப்பரவாக இருக்கிறது. உனது குடும்பத்தவர்கள் வீட்டில் சமைத்த உணவையே உண்ணுகிறார்கள். உனது கணவரும் பிள்ளைகளும் எல்லா வேலைகளையும் உரிய நேரத்தில் செய்து முடிக்கின்றார்கள். இதை எல்லாவற்றையும் உன்னால் எப்படி செய்ய முடிகிறது?” என சுகந்தி கேட்டாள்.
“அது ஒரு பெரிய விடயமே அல்ல” என சிரித்தபடியே கூறிய கலா “நான் எனது வேலைகளைத் திட்டமிடும்போது எனது குடும்பத்தவரையும் அதில் இணைத்துக் கொள்வேன்” எனக் கூறினாள்.
நீண்ட வேலை நேரம் காரணமாகவும், நேரம் போதாமையாலும், அதிக வேலைப்பளு காரணமாகவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன், குடும்பத்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதில்லை. இதை நீங்கள் கூட உணர்ந்திருப்பீர்கள். அதாவது நேரத்துடன் போராடி களைப்படைந்து நீண்ட வேலை நேரத்துக்குப் பின் வீட்டுக்கு வரும்போது உங்கள் 6 வயது மகன் தூங்கியிருப்பான்.
இலங்கையிலுள்ள பல பிசியான தாய்மார்கள் தங்கள் குடும்பங்களுடன் நல்லதொரு பாசப்பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு இதோ சில வழிமுறைகள்.
வேலைகளை சேர்ந்து செய்யுங்கள்: சமைக்கும் போதும், வீட்டைச் சுத்தம் செய்யும் போதும், பாத்திரங்களைக் கழுவும் போதும் உங்கள் கணவரதும் பிள்ளைகளதும் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பைக் கொடுங்கள். இவ்வாறு வேலை செய்யும் நேரத்தில் பல விடயங்களையு பகிர்ந்து கொள்ளலாம்.
ஒன்றாக உடற் பயிற்சி செய்யுங்கள்: வேலைக்குப் போய் வீட்டிற்கு வருகின்ற நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் உங்கள் பிள்ளைகளுடன் இருப்பதற்கு நீங்கள் இருவரும் முயற்சி செய்யுங்கள். அனைவரும் சேர்ந்து ஏன் நடைப் பயிற்சி செய்யக் கூடாது? விதம் விதமான இடங்களுக்குச் செல்லுங்கள். நீங்கள் செல்கின்ற இடங்களுக்கு உங்கள் நண்பர்களையோ உறவினர்களையோ அழையுங்கள். ஆகவே நீங்கள் உடற் பயிற்சி செய்யும் நேரத்திலேயே சில குடும்பப் பிணைப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். அத்தோடு உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியமானவர்களாகவும் மாறுவார்கள்.
ஒன்றாக உணவருந்துங்கள்: குடும்ப உறவுகள் வலுப்படுத்துவதற்கும், வளம் பெறுவதற்கும் குடும்பத்திலுள்ள அனைவரும் சேர்ந்து ஒரே நேரத்தில் உணவருங்கள். தொலைகாட்சி மற்றும் கைபேசிகளை நிறுத்திவைத்து விட்டு குடும்பத்துடன் உணவருந்துங்கள். அன்றைய நாளில் நடந்தவற்றைப் பற்றி கலந்துரையாடுங்கள்.
குடும்பச் சுற்றுலாவை ஏற்பாடு செய்யுங்கள்: ஒன்றாக சுற்றுலா செல்வது இலங்கையில் குடும்பங்களை இணைக்கும் ஒரு சிறந்த பாலமாகும். ஒரு சுற்றுலாவைத் திட்டமிடும் போது உங்கள் குழந்தைகளின் உதவியையும் பெறுங்கள். சுற்றுலாவினை மேலும் மகிழ்ச்சியாக்க பல நிகழ்ச்சிகளையும் உள்ளடக்குங்கள்.
ஒன்றாக சேர்ந்து விளையாடுங்கள்: செஸ், கரம் போன்ற விளையாட்டுக்களை நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுங்கள். நேரம் கிடைக்கும் போது வெளியில் சென்று பந்தடித்தல், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம்.
ஒன்றாக வாசியுங்கள்: பிள்ளைகள் கதை கேட்பதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு கதைகளை வாசித்துக் காட்டுங்கள். அவர்களுடன் சேர்ந்து வாசியுங்கள். அதற்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் நேர அட்டவணையில் வாசிப்பிற்கும் நேரம் ஒதுக்குங்கள். இரவு படுக்கச் செல்லும் நேரம் இதற்கு பொருத்தமாகும்.
உங்கள் துணைவருக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்: குடும்பத்துடன் நேரம் ஒதுக்குவது முக்கியமானது. உங்கள் துணைவருக்காக நீங்கள் நேரம் ஒதுக்குவது அதைவிட மிக முக்கியமாவதுடன் உங்கள் குடும்ப மகிழ்ச்சி அதிலேயே தங்கியுள்ளது. பிள்ளைகள் வளரும் போது இலங்கையில் உள்ள தாய்மார்கள் இதை மறந்து விடுகிறார்கள். உங்கள் இருவரது பிணைப்பை வலுப்படுத்துவற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பிள்ளைகள் பாடசாலையில் இருக்கும் தருணங்களில் ஒரு லீவைப் போட்டு விட்டு இருவருமாக படம் பார்க்கச் செல்லலாம். அல்லது ஒரு டின்னருக்குச் செல்லலாம்.
சிறந்த பிணைப்பு மிக்க குடும்பங்கள் எவ்வளவு வேலைப் பளு இருந்தாலும் எப்போதும் தங்கள் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவார்கள். இது பற்றி நீங்கள் வேறு ஏதேனும் ஐடியா வைத்திருக்கின்றீர்களா? இவற்றை மற்ற அம்மாக்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்