தமிழின அழிப்பிற்கு பரிகார நீதியை வலியுறுத்தி பன்னாட்டு அரசியல் முற்சந்தி ஜெனீவாவை நோக்கி ஈழத்தமிழரின் அயராத மனிதநேய போராட்டம் பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நோர்வே நாடுகளில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளை ஊடறுத்து தொடர்ந்த வண்ணம் உள்ளது.
பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை 9 மணிக்கு சார்புருக்கன் நகர பிதாவால் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பில் மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொண்டவர்களால் தமிழின அழிப்புக்கு அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி மனு கையளிக்கப்பட்டது.
சார்புருக்கன் நகரத்தில் இருந்து தொடர்ந்த ஈருருளிப் பயணம் France sarreguemines , மாநிலத்தினை வந்தடைந்து sarreguemines நகர முதல்வரை சந்தித்து மனு கையளிக்கப்பட்டது. அத்தோடு mosaïk, Republican Lorraine, போன்ற தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் முக்கிய வானொலி போன்ற ஊடகங்களும் எமது விடயத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டனர்.
Sarreguemines மாநிலத்தை தொடர்ந்து Sarre-Union மாநகரசபை முதல்வரினை சந்தித்து
அவரின் பெரு வரவேற்போடு எமது கோரிக்கை தாங்கிய மனுவும் ஒப்படைக்கப்பட்டது. நேற்றைய தினம் ஈருருளிப் பயணம் 80 km கடந்து phalsbourg மாநிலத்தில் நிறைவு பெற்றது. அத்தோடு பாரிஸ் மாநகரத்தில் இருந்து ஐ.நா நோக்கி ஈருருளிப் பயணம் மேற்கொண்டு வரும் உறவுகளோடு இன்றைய தினம் phalsbourg ல் இருந்து பயணம் தொடரும்.
பாரிசிலிந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் நேற்று காலை மீண்டும் Phalsbourg நோக்கி பயணித்து மதியம் வந்தடைந்தனர். அத்தோடு அந்த பிரதேச முதல்வரிடம் ஈருருளி போராட்டத்தின் மனுவையும் கையளித்துச்சென்றனர்.
பிரித்தானியாவில் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் நெதர்லாந்தை வந்தடைந்து பின்னர் தொடர்ந்து பெல்ஜியம், ஜேர்மனி, பிரான்சு ஸ்ராஸ்புர்க்கை 11.09.2018 மதியம் வந்தடைவதுடன், கடந்த 3ம் திகதி பாரிசிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணப்போராட்ட வீரர்களும் ஒன்றாக சந்தித்து 11ம் நாள் பி.பகல். 3.00மணி முதல் 6.00மணிவரை ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக நடைபெறவுள்ள ஓன்றுகூடலிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
நோர்வே பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பித்த கண்காட்சி ஊர்த்திப் பயணம் “தமிழ் வான்” நேற்றைய தினம் சுவீடன் நாட்டின் தலைநகரத்தில் இடைநிறுத்தி வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டது. இவ் நிகழ்வில் சுவீடன் வாழ் தமிழ் உணர்வாளர்கள் தமது தார்மீக ஆதரவை வழங்கினார்கள்.
இன்றைய தினம் 11/09 – செவ்வாய்க்கிழமை நீதிக்கான கண்காட்சி ஊர்திப்பயணத்தின் கண்காட்சியும் பரப்புரையும் , டென்மார்க் தலைநகரில் Raadhuspladsen – நகரசபை முற்றத்தில் 11.00 – 16.00 மணிவரை நடைபெற உள்ளது!
ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம் செல்லும் வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது.அரசியல்
சந்திப்புகளில் பின்வரும் கோரிக்கைகள் உள்ளடக்கிய மனுவும் கையளிக்கப்பட்டது .
1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
எதிர்வரும் 14.09.2018 அன்று கனடா தேசத்திலும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனும் மாபெரும் கவனயீர்ப்பு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றார்கள்.
இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள ஒரு தேசம், தமது பாதுகாப்பான வாழ்வுக்கு தனி அரசினை அமைப்பதன் ஊடாக நியாயமும் நீதியும் தேடுவதென்பது அனைத்துலக சட்டங்களினிடையே ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அந்தவகையில் எமது சுதந்திர இலட்சியம் நிறைவேறும்வரை எமக்குக் கிடைத்த வழிகளில் நாம் தொடர்ந்து போராடுவோம்.