உங்கள் குழந்தை மிகவும் சோகமான முகத்துடன் காணப்பட்டால்நீங்கள் மிகுந்த வேதனையடைவீர்களா? அல்லது மன அழுத்தத்திற்குள்ளாவீர்களா?. அல்லது குற்ற உணர்வொன்று உங்களுக்கு ஏற்படுமா?
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கவேண்டுமென்றே விரும்புவார்கள். ஆனால் தற்கால உலகத்தில் நாம் விரும்புவது எல்லாமே நடந்து விடுவதில்லை. எல்லோரையும் போல குழந்தைகளும் தங்கள் வாழ்கைப்பயணத்தில் சந்தோசத்தையும் துக்கத்தையும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். உங்கள் குழந்தைகள் கேட்கும் அனைத்துப் பொருட்களையும் அவர்களுக்கு நீங்கள் வாங்கிக் கொடுப்பதால் அவர்கள் மிகுந்த சந்தோசம் அடைகின்றார்கள். எனினும் உண்மையானதும் நிரந்தரமானதுமான மகிழ்ச்சி என்பது அதுவல்ல.
உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்.
- உறவுகளை வலுப்படுத்துதல்–குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமாக, சிறந்த உறவுகளைப் பேணுதல் வேண்டும். அப்போது அவர்களும் பெற்றோருடன் இறுக்கமான உறவுகளைப் பேணுவர். இத்தகைய உறவுகள் மேலோங்கும்போது அது குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். ஆகவே உங்கள் குடும்பப் பிணைப்புக்களை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
- அன்பைப் பொழியுங்கள்– உங்கள் குழந்தைகள்மீது நீங்கள் அன்பைப் பொழியும்போது அது அவர்களது மனதில் ஆழமாகப் பதிந்து விடும். ஆகவே உங்கள் வேலைப் பளுவிலிருந்து கொஞ்சம் விலகி உங்கள் பிள்ளைகள் மீது அன்பையும் அரவணைப்பையும் காட்டுங்கள். அது அவர்களது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
- மகிழ்ச்சியாக இருங்கள்–நீங்கள் உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென்றால் நீங்கள் முதலில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது முக்கியமாகும். ஏனென்றால் நீங்கள் என்னவிதமான மனநிலையில் உள்ளீர்கள் என்பதை உங்கள் பிள்ளைகள் உடனடியாக உணர்ந்து கொள்வார்கள்.
- பாராட்டுங்கள்– சிறியதொரு பாராட்டுக் கூட உங்கள் குழந்தைகளது ஆர்வத்தை வெகுவாக அதிகரிக்கும். உங்கள் குழந்தைகள் புரியும் சின்னச் சின்ன நல்ல செயல்களுக்காக அவர்களை நீங்கள் கட்டாயம் பாராட்ட வேண்டும். அது அவர்களது சந்தோசத்தை அதிகரிக்கும். எம் அனைவரைப் போலவும் குழந்தைகள் எப்போதும் தங்கள் செயற்பாடுகளில் வெற்றியடைய மாட்டார்கள். ஆனால் அவர்கள் எடுத்த முயற்சிக்காக அவர்களைப் பாராட்டுதல் வேண்டும்.
- சமநிலையைப் பேணுதல்– வாழ்க்கைக்கு பணம் முக்கியம். ஆனால் பணத்தினால் மட்டுமே சந்தோசத்தை வாங்கிவிட முடியாது. நீங்கள் பணம் சம்பாதிப்பதிலேயே அதிக நேரத்தைச் செலவழிக்கும்போது அது உங்கள் பிள்ளைகளது சந்தோசத்தையும் பறித்துவிடக் கூடும். ஆகவே சிறிது நேரத்தை ஒதுக்கி உங்கள் குழந்தைகளுடனும் செலவிடுங்கள்.
- நேர்மாறான சிந்தனைகள்–நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம்? எவ்வாறு செயற்படுகின்றோம்? என்பதிலேயே மகிழ்ச்சி தங்கியுள்ளது. எனவே வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளின்போது நாம் எவ்வாறு செயற்பட வேண்டும்? எத்தகைய உறுதியுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும் என்பது பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
- உடல் ஆரோக்கியம்– உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் ஆரோக்கியமான குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பர்.
- அர்த்தமுள்ள வாழ்க்கை– சிறந்த வாழ்க்கை விழுமியங்கள் அதாவது, கருணை, இரக்கம், பகிர்ந்து கொள்ளுதல், என்பன உங்கள் குழந்தையின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வரும். ஆகவே இத்தகைய சிறந்த விழுமியங்களை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்லவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதை குழந்தைகளுக்குக் கூறுங்கள்.
- எதையும் தானாகச் செய்வதற்கு இடமளியுங்கள்–பிள்ளைகள் புதிய விடயங்களைப் பார்ப்பதிலும் செய்வதிலும் ஆர்வமாய் இருப்பார்கள். “இதைச் செய்யாதே; அதைச் செய்யாதே;” என்று கூறுவதை அவர்கள் விரும்புவதில்லை. அவர்கள் செய்ய விரும்புவதைச் செய்ய விட்டுவிட்டு நாம் சிறிது தள்ளியிருந்து கவனிக்க வேண்டும். இத்தகைய சிறந்த அனுபவங்கள் அவர்களது வாழ்க்கையில் தொடர்ச்சியாக நிலைத்திருந்து சந்தோசத்தை அளிக்கக் கூடும்.
- வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்–எப்போதும் நீங்கள் சொல்வதையே செய்யுங்கள். செய்வதையே சொல்லுங்கள். நீங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் உங்கள் குழந்தைகளது மனது வெகுவாகப் பாதிப்படையும்.உங்களுக்கு இருக்கும் வேலைப்பளு காரணமாக சில வேளைகளில் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குறுதிகளை நீங்கள் மறந்து விடலாம். நீங்கள் அவற்றை மறக்க முன்னர் அதனால் உங்கள் குழந்தை எவ்வாறு பாதிப்படையும் என்பதைச் சிந்திக்க வேண்டும்
- ஆர்வத்தை ஊட்டுங்கள்– உங்கள் குழந்தைகளுக்கு எந்த விடயத்தில் ஆர்வம் உள்ளது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப அவர்கள் அதனைவளர்த்துக் கொள்ள உதவுங்கள். நாங்கள் விரும்பியதைச்செய்யும் போது நாம் அதிக மகிழ்ச்சியாக இருப்போம் என்பது பொதுவான உண்மையாகும்.
குழந்தைப் பருவ அனுபவங்கள் உங்கள் குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை உருவாக்கும். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான உடல்உள நலத்தை உருவாக்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.
சிறந்த பெற்றோர்களாக இருப்பதற்கு எமது வாழ்த்துக்கள்!