இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களையும் ஒரு சிங்களவரையும் அந்நாட்டு அரசு நாடு கடத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 11ம் அன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்திலிருந்து தனி விமானம் மூலம் இவர்கள் அனைவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இதில் சிலர், சுமார் 6 ஆண்டுகளுக்கு முகாமில் தடுப்பு முகாமில் இருந்துள்ளனர். மேலும் சிலரின் தஞ்சக்கோரிக்கை வழக்கு நிலுவையில் இருந்த வந்த நிலையில் இவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நாடுகடத்தல் தொடர்பாக ஆராய்ந்துள்ள கார்ட்டியன் ஊடகம், இப்போது நாடுகடத்தப்பட்ட பலர் தாங்கள் இலங்கை படைகளினால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டதையும் கடத்தப்பட்டதையும் ஆஸ்திரேலியா அதிகாரிகளிடம் தெரிவித்திருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
அதே சமயம், இவ்வாறான நாடுகடத்தல் நடவடிக்கைகள் சர்வதேச விதியின் கீழே எடுக்கப்படுவதாக தன்னுடைய நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து நியாயப்படுத்தி வருகின்றது. ஆஸ்திரேலிய அரசு தரப்பிலிருந்து தற்போது நாடுகடத்தியவர்கள் குறித்து எந்த விரிவான தகவலும் வெளியிடவில்லை.