ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் 2 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தேசிய அரசாங்கத்தில் பிளவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளதாக அரச சார்பற்ற நிறுவனமான சர்வதேச நெருக்கடிக் குழு (ICG) தெரிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் முரண்பாடுகளைத் தடுப்பது தொடர்பாக இயங்கும் இந்த அரசசார்பற்ற அமைப்பினால் இலங்கையின் நிலைமை தொடர்பாக, 34 பக்கங்களைக் கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவோ அல்லது தேசிய பாதுகாப்பு நிலைமையைச் சீர்படுத்தவோ குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுக்கவில்லை. அத்தோடு, இந்த அரசாங்கம் குறுகியகால கட்சி, தனிநபர் அரசியல் கணிப்புகளை விடுத்து சீர்திருத்தம் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அரசியலில் இறங்க வேண்டும்.
பொருளாதாரத்தை உயர்த்துதல், ஊழலை இல்லாது செய்தல், சட்டத்தின் ஆட்சியை மீளக் கொண்டு வருதல், போரின் பிரச்சினைகளைத் தீர்த்தல், புதிய அரசியலமைப்பை உருவாக்குதல் ஆகியன பரந்தளவில் அடையப்படாதவையாகவே உள்ளன.
வடக்கிலும் கிழக்கிலும் பாதுகாப்புப் படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் புத்தரின் சிலைகள் வைக்கப்படுவதுடன், இராணுவத்தின் நடவடிக்கைகளைக் குறைக்காமை காரணமாக வடக்கில் வாழும் தமிழ் மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான ஆதரவைப் பலவீனமாக்கி வருகின்றது” எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.