போர்க்குற்றச்சாட்டுக்களில் இருந்து படையினரை பாதுகாக்கும் நோக்கத்துடன் ஐ.நாவில் புதிய யோசனையொன்றை ஶ்ரீலங்கா ஜனாதிபதி முன்வைத்தால், அதனை ஒரு அங்குலம் கூட முன்னகர அனுமதிக்க போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, இவ்வாறு பதிலளித்தார்.
நேற்று முன்தினம் கொழும்பில் ஊடக பிரதானிகள், பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த ஜனாதிபதி பல விடயங்களை பேசியிருந்தார். இலங்கையின் இறுதிப்போரில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படும் மனித உரிமைகள் மீறல்கள், யுத்தத்தின் பின்னரான நிலவரங்களிற்கு தீர்வாக, ஐ.நாவில் யோசனையொன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இம்மாதம் 25ம் திகதி நியூயோர்க் நகரில் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவிருக்கிறார். அப்பொழுதே இந்த யோசனை முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது- “பாதுகாப்பு படையினரை பாதுகாக்க ஐ.நாவில் ஶ்ரீலங்கா யோசனையொன்றை முன்வைக்கிறதெனில், , இது ஶ்ரீலங்காவின் இணக்கத்துடன் ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றிய 30ஃ1, 34ஃ1தீர்மானங்களிற்கு அரசாங்கம் மாறுபடுவதாக அமைந்து விடும். இலங்கையின் இணை அனுசரணையுடனேயே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனால் அரசு பொறுப்புகூறலில் இருந்து தப்பிக்க முடியாது.
யுத்தம் முடிந்ததும் ஶ்ரீலங்காவுக்கு வந்த அப்போதைய ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கும் இது மாறானது.
ஜனாதிபதி முன்வைக்கும் புதிய யோசனைக்கு நாம் எதிர்ப்பை வெளியிடுவோம். அதனை ஒரு அங்குலம் கூட நகர இடமளிக்க மாட்டோம்“ என்றும் தெரிவித்தார்.