வாள்வெட்டு, போதைபொள் விற்பனை, கடத்தல் சம்பவங்களை தொடர்புடையவர்களை கைது செய்வதைவிட பயங்கரவாத சட்டத்தின் பெயரால் நடக்கும் கைதுகள் நீண்டு கொண்டேயிருக்கின்றன. போர் காலத்து போன்றே பலர் கடத்தப்பட்டும் உள்ளனர். அவர்கள் தாம் ஏன் கடத்தப்படுகிறோம் என்ற விபரமே தெரியாமல் பல சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதிலிருந்து தப்பிய சிலர், பெரும் அளவிலான பணத்தை செலவழித்து வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த பயங்கரவாத சட்டத்தின் அடிப்படையிலும் இன்னமும் கைது நடவடிக்கைகள் தமிழர் பிரதேசங்களில் தொடர்கின்றன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சுமார் 50 பேர், தாம் 2016ம் ஆண்டு தொடக்கம் முதல், இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையில் இலங்கை போலீஸ் மற்றும் ராணுவத்தினரினால் குரூர சித்திரவதை, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி உள்ளதை அசோசியேடட் பிரஸ் என்ற ஊடகத்தின் மூலம் உலகிற்கு கூறியுள்ளனர்.
அதில் ஒருவர், தன்னை 21 நாள்கள் ஓர் அறையில் வைத்து 12 முறை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்துள்ளார். மற்றொரு 22 வயது இளைஞன், “இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை இவ்வுலகிற்கு தெரிய வேண்டும். தமிழர்களுக்கு எதிரானப் போர் இன்னும் முடியவில்லை” என வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இலங்கை ராணுவத்தின் லெப். ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, “ராணுவம் இதில் ஈடுபடவில்லை. நான் உறுதியாக சொல்கிறேன் காவல்துறையும் இதில் ஈடுபடவில்லை. இப்போது இதை செய்வதற்கான காரணம் எங்களுக்கு எதுவுமில்லை” என்கிறார்.
பாதுகாப்பு படையினரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்த சம்பவங்களின் விசாரணை முடிவுகள் பற்றிய முழுமையான விபரங்களை வெளியிடுமாறு இலங்கையை வலியுறுத்த வேண்டும் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா அறிவுறுத்தி உள்ளார். சான்றுகள் எவ்வளவு இருப்பினும் மறுப்பதை மட்டுமே பதிலாக கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.
1958ல் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப்படுகொலையை ‘எமர்ஜென்சி 58’ என்ற நூலில் பதிவு செய்த சிங்கள இனத்தவரான ஆங்கில பத்திரிகையாளர் தார்சி வித்தாச்சி (Tarzie Vitachi ), ஒரு தமிழ் தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்த சிங்களவர்கள் சுற்றி நின்று கூத்தாட, அதை சுவரில் அடித்துக் கொன்றான் ஒரு சிங்களவன் என அந்த ரத்த தோய்ந்த வரலாற்றை குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது போன்ற சம்பவங்களின் வடிவங்கள் தான் இன்று மாறியுள்ளதே தவிர தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள அரசின், அரச வடிவங்களின் அத்தனை மையத்திலும் கலந்திருக்கின்றது.
தொடரும்….