இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கை சோகம் நிறைந்தது. முல்லைத்தீவு மாவட்டம் பேரழிவைச் சந்தித்து இது முதல் முறையல்ல.
2009ஆம் ஆண்டிற்கு முன்னரும் 2004ஆம் ஆண்டு இந்த நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தால் மிகவும் மோசமாக பாதிப்படைந்த இடங்களில் முல்லைத்தீவு மாவட்டமும் ஒன்று.
இதன்போது வெகுவாக பாதிப்படைந்த, இழப்புக்களை சந்தித்த செல்வபுரம், வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களை 2005ஆம் ஆண்டு குடியேற்றிய இடமே முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி.
அவர்கள் மீள்குடியேறி தமது வாழ்வை கட்டியெழுப்ப முன்னர் மீண்டும் ஒரு இடப்பெயர்வை 2009 இல் சந்திக்க நேரிட்டது.
இதன்போது அவர்கள் மட்டுமல்ல, வன்னி மண்ணில் வாழ்ந்த அத்தனை மக்களும் வந்து தங்கியிருந்த இடமாகவும், இந்த இடம் விளங்கியது.
தற்போது அந்த பகுதியில் வாழந்து வரும் மக்களின் வாழக்கை கவலைக்குரியதாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வட்டுவாகல் உள்ளடங்கலாக 464 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றோம். யுத்தம் முடிவடைந்த பின்பு நாங்கள் 2012ஆம் ஆண்டு மீள்குடியேற்றப்பட்டோம்.
ஆனாலும் எங்களுக்கான அடிப்படை வசதிகளான போக்குவரத்து, வீட்டுத்திட்டம், குடிநீர் என்பன முழுமை பெறாத நிலையில் எமது வாழ்நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றோம்.
எங்களின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் கடல் வளம் கூட தென்னிலங்கை மீனவர்களால் அரச இயந்திரங்களின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த நிலப்பகுதி தாழ் நிலமாக உள்ளதால் மழை காலங்களில் இந்த பகுதியும் கடலுடன் இணைந்து நீர்ப்பரப்பாகவே காட்சியளிக்கிறது.
பிரதான வீதிகள் காபற் வீதிகளாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தின் வெளிப்புறத் தோற்றம் சிறப்பாகவும், அபிவிருத்தி அடைந்தது போன்று காணப்பட்டாலும் போரின் தடயங்களையும், அடையாளங்களையும் கொண்டதாக இன்றும் காணப்படும் முள்ளிவாய்க்கால் மண் எங்களின் வாழ்வில் துன்பத்தையே தொடர்ந்தும் கொடுத்து நிற்கின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.