ந.லெப்ரின்ராஜ்
1930 தொடக்கம் 1950 வரை தமிழ்சினிமாவின் மிக உச்சத்திலிருந்தவர் நகைச்சுவை கலைஞர் கலைவாணர் என் எஸ். கிருஷ்ணன். தன்னுடைய நகைச்சுவையால் மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கலைவாணர், தான் சினிமாவூடாக உழைத்த பணம் அனைத்தையும் இல்லையென்று வருவோருக்கு வாரி இறைத்த ஒரு கொடைவள்ளல்.
இவருடைய நகைச்சுவைகளில் சமூக சீர்திருந்தக் கருத்துகள் அதிகளவில் பொதிந்து கிடந்தது. நகைச்சுவை என்ற பெயரில் அவர் பெண்களைக் கொச்சைப் படுத்தவில்லை, மனிதனின் உடல் ஊனத்தை, நிறத்தை, தோற்றத்தை கிண்டல் செய்யும் வகையிலோ, மனிதர்களைக் குறைத்து கொச்சைப்படுத்துகின்ற வகையிலோ ஒரு காட்சியில் கூட நடித்திருக்கவில்லை. இவ்வாறு மனிதத்தை நேசித்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட கலைவாணருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவருடைய சிந்திக்கத் தூண்டும் திரையிசைப்பாடல்களையும்
நகைச்சுவைத் துணுக்குகளையும் இன்றைய தலைமுறையினரிடம் இசைப் பேருரை மூலம் கொண்டு சேர்ந்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த சோழ. நாகராஜன்.
சோழ நாகராஜன், எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர், பாடகர் எனப் பல தளங்களில் பயணித்துவரும் ஒரு கலைஞர்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சோழ நாகராஜன், வவுனியா மற்றும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் கலைவாணர் என். எஸ் கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய சிந்திக்க வைக்கும் திரைப்படப் பாடல்கள், நகைச்சுவைகளை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கியிருந்தார்.
அவரை ஞாயிறு தினக்குரல் சார்பாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்ட பொழுது அவருடன் உரையாடிய விடயங்களை இங்கு கேள்வி பதில் வடிவில் வழங்குகிறேன்.
கேள்வி : கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் புகழ் பரப்பும் இசைக் கச்சேரிகளை நடத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதன் பின்னணி என்ன?
பதில் : நான் சிறுவனாக இருந்த காலம் இலங்கை வானொலி தமிழகத்தையே கட்டிப்போட்டிருந்த காலம். வீடுகள், கடைகள், தெருக்கள் என்று எங்கும் இலங்கை வானொலிதான் இசையை வழங்கிக் கொண்டிருந்தது. அன்று கலைவாணர் அவர்களுடைய பாடல்களும் அவருடைய நகைச்சுவை துணுக்குகளும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும். அவ்வேளையில் அவருடைய பாடல்களின் அர்த்தம் எனக்கு புரியவில்லை. வளர்ந்த பிறகுதான் அவர் தன்னுடைய பாடல்களிலும் நகைச்சுவைக் காட்சிகளிலும் எவ்வளவு நல்ல விடயங்களையெல்லாம் கூறியிருக்கிறார் என்று புரிந்தது.
கலைவாணர் தன்னுடைய படங்களில் நகைச்சுவைக் காட்சி என்ற பெயரில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருந்தார். அத்தோடு அவருடைய பாடல்களும் நகைச்சுவை உணர்வோடு நல்ல சமுக சீர்திருந்தக் கருத்துகளை உள்ளடக்கியிருந்தது.
பெண்ணடிமைக்கு எதிரான கருத்துகள், மூடநம்பிக்கைக்கு எதிரான கருத்துகள், பெண் விடுதலைக்கான கருத்துகள், சாதி ஏற்றத்தாழ்வுக்கான கருத்துகளை அவர் தன்னுடைய நகைச்சுவைக் காட்சிகளிலும் பாடல்களிலும் முன்வைத்திருந்தார்.
இப்படிப்பட்ட ஒரு மகத்தான மனிதரைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று மனதில் தோன்றிய எண்ணத்தின் அடிப்படையில் அதற்கான பணிகளை பத்து வருடங்களுக்கு முன்னர் கலைவாணருடைய நூற்றாண்டில் ஆரம்பித்தேன்.
அதற்கிணங்க கலைவாணரைத் தேடத் தொடங்கினேன். அவருடைய வாழ்க்கை வரலாறுகளை தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அவரைத் தேடிப் படிக்கும் பொழுது அவருடைய வாழ்க்கை என்னை வியப்படைய வைத்தது.
எந்தவொரு கலைஞனுக்கும் அமையாத வாழ்க்கை அவருக்கு அமைந்திருந்தது. கலைவாணருடைய சினிமா வாழ்க்கையும் வெளியுலக வாழ்க்கையும் ஒரே மாதிரியாகவே இருந்ததை அறிந்து நான் வியப்படைந்தேன். அவர் சம்பாதித்த பணத்தையெல்லாம் இல்லையென்று வருபவர்களுக்கு வாரி இறைந்திருக்கிறார். ‘நான் சம்பாதிப்பதே இல்லையென்று வருபவர்களுக்கு கொடுப்பதற்காகவே’ என்று கூறிகொண்டு அதற்கேற்ப வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் கலைவாணர்.
இப்படிப்பட்ட ஒரு கலைஞரை மனிதரைப் பற்றி, நான் தேடிப் பெற்றுக் கொண்ட விடயங்களை வைத்துக் கொண்டு அவருடைய வாழ்க்கை வரலாற்றை இசைப் பேருரை என்ற வடிவில் 2008 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடங்களாக மக்களுக்குச் சொல்லி வருகிறேன்.
கேள்வி: கலைவாணருடைய சிந்தனைகளை சமூகத்தில் விதைக்க வேண்டும் என்ற தேவை ஏன் ஏற்பட்டது?
பதில்: இன்று சமூக நெருக்கடிகள், சமூகச் சீரழிவுகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இளந் தலைமுறையினரை தவறான வழிகளுக்குக் கொண்டு செல்வதற்கு பல வழிகள் தேங்கிக்கிடக்கின்றன. இவ்வாறானதொரு சூழலில் இளந்தலைமுறையினர் அறிந்திராத ஒரு கலைஞர் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்; தன்னுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் அமைத்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறார் என்பதை இளந்தலைமுறையினரிடம் கொண்டு செல்கின்ற பொழுது அது இளம் தலைமுறையினரின் மனதைத் தூய்மைப்படுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்ல வழிசமைக்கும் என்று நான் நம்புகிறேன். அதேபோல் ஆரோக்கியமானதொரு கலைச்சூழல் உருவாகும் என நம்புகிறேன்.
மேலும் கலைவாணர் போன்ற மகத்தான கலைஞர்களின் வாழ்க்கையை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பொழுது நல்ல கலாரசனையை உருவாக்க முடியும்; தரமான சினிமாக்களை உருவாக்க முடியும் எனவும் நம்புகின்றேன்.
கேள்வி: உங்களுடைய 10 வருடப் பயணத்தில் நீங்கள் எதிர்பார்த்த நம்பிக்கை சாத்தியமானது எனக் கருதுகிறீர்களா? இந்தக் காலகட்டத்துக்குள் கலைவாணருடைய சீர்திருத்தக் கருத்துகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த திருப்தி இருக்கிறதா?
பதில்: கலைவாணர் என்றால் யார்? என்று தெரியாத இன்றைய இளம்
சந்ததிகள் கூட நான் நடத்துகின்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசிக்கிறார்கள். இவ்வளவு பெரிய மனிதரா? இவ்வளவு பெரிய சாதனையாளரா? இவ்வளவு சிந்தனைகளை விதைத்துவிட்டுச் சென்றாரா? என்று என்னிடம் இளம் சந்ததியினர் வியந்து வந்து கேட்கிறார்கள்.
என்னுடைய 10 வருட கலைவாணருடனான பயணத்தில் இயன்றளவு கலைவாணருடைய வாழ்க்கையை, சிந்தனையை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருக்கிறேன். அந்த எண்ணிக்கை கோடிக்கணக்கில் இல்லாவிட்டாலும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் சேர்ப்பித்திருக்கிறேன்.
நான் நடத்துகின்ற நிகழ்ச்சிகளைப் பார்வையிட விருப்பமில்லாது ஏனோ தானோ என்று வந்தாலும் நிகழ்ச்சி முடிந்து செல்லும் பொழுது ஒவ்வொரு பார்வையாளனும் மனமகிழ்ச்சியோடும் மனத்திருப்தியோடும் என்னிடம் வந்து என்னைப் பாராட்டிச் செல்கிறார்கள். இது எதனை உணர்த்துகிறது என்றால், கலைவாணருடைய செய்திகளை நான் வழங்கியபின் அவர்களிடத்தில் ஒருவித மாற்றம் ஏற்படுத்துவதையே உணர்த்துகிறது. அந்த அடிப்படையில் என்னுடைய எதிர்பார்ப்பு நம்பிக்கை ஓரளவுக்கு நிறைவேறி வருவதாகவே கருதுகிறேன்.
கேள்வி : கலைவாணருடைய நகைச்சுவைக் காட்சிகளையும் இன்று வருகின்ற திரைப்பட நகைச்சுவை காட்சிகளையும் நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில் : இன்று திரைப்படங்களில் வருகின்ற நகைச்சுவை காட்சிகள் அருவருக்கத்தக்கவை . மனிதனின் உடல் ஊனத்தை, நிறத்தை, தோற்றத்தை கிண்டல் செய்கின்ற காட்சிகளையும் மனிதர்களைக் குறைத்து கொச்சைப்படுத்துகின்ற பெண்களை கொச்சைப்படுத்துகின்ற காட்சிகளையும் தான் சிரிப்பு என்ற பெயரில் நகைச்சுவைகளாக இன்றைய திரைப்படங்கள் காட்சிப்படுத்துகின்றன. ஆனால் கலைவாணர் ஒரு படத்தில் கூட பெண்களை இழிவாக வைத்து ஒரு நகைச்சுவைக் காட்சியை அமைத்தது கிடையாது. அதேபோல் ஒரு படத்தில் கூட மனிதர்களை இழிவாக நடத்தி காட்சிகளை அமைத்ததில்லை.
தன்னுடைய நகைச்சுவை காட்சிகளில் ஒரு நேர்மை இருக்க வேண்டும்; அதில் ஒரு செய்தி இருக்க வேண்டும்; அந்தக் காட்சி சமூகத்துக்குப் பயன்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இறுதிவரை அதைக் கடைப்பிடித்தார்.
சினிமாவில் ஒரு தத்துவார்த்தக் கலைஞனாகவும், சமூக அக்கறையுள்ள கலைஞனாகவும் அந்த சமூக அக்கறையை நகைச்சுவையுடன் மக்களிடம் கொண்டு சேர்த்த ஒரேயோரு கலைஞன் கலைவாணர் மாத்திரமே.
கேள்வி: தொழில்நுட்பக் காலத்தில் இன்று மக்களுடைய இரசனைகள், பார்வைகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் மாற்றமடைந்திருக்கின்ற சூழ்நிலையில், கறுப்பு வெள்ளை காலத்தில் வாழ்ந்த நடித்த ஒரு கலைஞனின் வாழ்க்கையை நீங்கள் கையில் எடுத்திருக்கிறீர்கள். நிச்சயமாக இது சவால் மிக்க ஒரு விடயம். அது பற்றி கூறுங்களேன்.
பதில்: இளம் சினிமா நட்சத்திரப் பட்டாளங்களை இறக்கி கோடிக்கணக்கில் செலவு செய்யும் நிகழ்ச்சிகளுக்குத் தான் மக்கள் அலையலையாக திரளுவார்கள். அதுதான் இன்றைய நிலைமை. இவ்வாறான ஒரு காலகட்டத்தில் கறுப்பு வெள்ளை காலத்தில் வாழ்ந்த ஒரு கவர்ச்சி இல்லாத கலைஞனைப் பற்றிய நிகழ்ச்சியை கொண்டு நடத்துவது என்பது சவால் மிக்க ஒன்றுதான். ஆனால் என்னுடைய நிகழ்ச்சிக்கும் பல ஆயிரம் இரசிகர்கள் இருப்பதன் காரணத்தினால் தான் 10 ஆண்டுகளாக எந்தத் தடையுமின்றி என்னால் இந்தப் பயணத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடிந்திருக்கிறது.
மேலும் என்னுடைய நிகழ்ச்சி வெற்றிகரமாகப் பயணிப்பதற்கு என்னுடைய பக்கவாத்தியக் கலைஞர்களும் ஒரு காரணம். கலைவாணரைப் பற்றிய
செய்தியை மக்களிடம் கொண்டு செல்கின்ற பொழுது, என்னிடமும் ஒரு
சிறியளவிலான மனித நேயமாவது இருக்க வேண்டும் அல்லவா!
என்னுடைய கச்சேரிக்கு இசையமைக்கும் அத்தனை பேரும் பிறவியிலேயே பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள். கிபோர்ட் ராஜதுரை, தபேலா, எபினேசர், மாரிச்சாமி என இவர்கள் அனைவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். இவர்களிடத்தில் பார்வை மாத்திரம் தான் இல்லை. ஆனால் இசையில் மிகப் பெரிய ஆளுமைகள். இவர்கள் அனைவரையும் நான் தான் கைபிடித்து நிகழ்ச்சி நடைபெறும் மேடைகளுக்கு அழைத்துச் செல்வேன். இது பார்வையாளர்களுக்கு அளவில்லா நெகிழ்ச்சியைத் தருகிறது.
கேள்வி: இலங்கைப் பயணம் பற்றி… இலங்கை ரசிகர்கள் பற்றி..?
பதில்: கலைவாணரை எனக்கு அறிமுகப்படுத்திய மண்ணுக்கே வந்து கலைவாணரைப் பற்றிச் சொல்வதற்குக் கிடைத்த வாய்ப்பை எண்ணும் பொழுது மெய்சிலிர்க்கிறது.
நான் சிறுவனாக வாழ்ந்த காலத்தில் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்த வானொலி இலங்கை வானொலி. அந்த வானொலியூடாக ஒலிபரப்பாகிய கலைவாணருடைய பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் நான். காலையில் பொங்கும் பூம்புனல் என்று தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு இரவின் மடியில் என்று முடியும் வரை மக்களைக் கட்டிப் போட்டிருந்தது இலங்கை வானொலி. கலைவாணரை எனக்கு அறிமுகப்படுத்தியது இலங்கை வானொலி. அவருடைய பாடல்களை முதன்முதலாக எனக்கு அறிமுகப்படுத்தியது இலங்கை வானொலி என்ற அடிப்படையில் கலைவாணரை எனக்கு அறிமுகப்படுத்திய மண்ணுக்கு வந்து நிகழ்ச்சியைச் செய்ததில் நான் பெருமையடைகிறேன்.
அதேபோல் இலங்கை ரசிகர்களைப் பார்த்து நான் மெய்சிலிர்க்கிறேன். தமிழ்ச்
சங்கத்தில் என்னுடைய நிகழ்ச்சி நடைபெற்றபோது மண்டபம் நிறைந்து மண்டபத்துக்கு வெளியில் நின்றும் மக்கள் பார்த்து ரசித்தார்கள். குறிப்பாக இளம் சந்ததியினர் நிகழ்ச்சி தொடங்கும் முதல் முடியும் வரை நின்றபடி நின்று நிகழ்ச்சிக்கிறார்கள் பார்வையிட்டதை என்னால் என்றுமே மறக்க முடியாது. ‘இதுவரை காலமும் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுக்குக் கூட
இந்தளவு கூட்டம் வரவில்லை’ என்று அங்கு நின்றவர்கள் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வகையில் இந்த மண்ணும் இங்குள்ள மக்களும் நல்ல கலைஞர்களுக்கும். நல்ல கலைகளுக்கு மிகப் பெரிய கௌரவத்தை கொடுக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.