அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற் கொண்டு அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் தாய், மனைவி மற்றும் சகோதரி கேட்டுக் கொண்டுள்ளனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் 6 வது நாளாகவும் ஈடுபட்டுக் கொண்டுள்ள 8 அரசியல் கைதிகளில் சூ.ஜெயச்சந்திரனின் தாய், ம. சுலக்சனின் சகோதரி, ஆகியோரே இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடாத்தி மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
இதில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஜெயச்சந்திரன் போரில் காயமடைந்து நடக்க முடியாதவராக உள்ளதாகவும், ஏனையோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் ஆகவே இந்த முறையாவது இது தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எந்தவித சாட்சியும் இன்றி புலனாய்வு துறையினால் சித்திரவதைக்குட்படுத்தி பெறப்பட்ட வாக்குமூலத்தை மாத்திரம் கொண்டே இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது என அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.