விடுதலைக்குப்போராடும் ஈழத்து தமிழ் மக்கள் பாகம் – 8
இந்த உலகமும், அங்கு இயங்கிக்கொண்டிருக்கும் நடைமுறைகளும் மிகவும் நகைக்சுவைக்கு உரியதும், ஏற்றுக்கொள்ளமுடியாததும் ஆகும். இதனை இப்புவியில் வாழும் எல்லோரும் சரிவரப்புரிந்து கொண்டுள்ளார்கள் என்று கூறமுடியாது. இவ்வாறு உலகியல் இயக்கத்தை சரிவரப்புரிந்து கொள்ளாத மக்களை மூலதனமாக வைத்தே இவ்வுலகு நகர்ந்து செல்கின்றது. இச்செய்தி புரிந்துகொள்ள சற்றுக்கடினமாக இருந்தாலும் உண்மை அதுதான். சற்று புரியும்படியாக இச்செய்தியை பார்ப்போம். ஆரம்ப உலகில் மக்கள் வாழ்வு அமைதியானதாக, நிம்மதியானதாக, சமாதானமானதாக, மனிதம் நிறைந்ததாக இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் உலக மக்களின் வாழ்க்கை என்பது நிலம், சொத்து, எனது, உனது என்று மோதல்களினால் வலுப்படுத்தப்பட தொடங்கப்பட்டுவிட்டது. பொதுவாகவே இந்த உலகில் நடைபெறும் மோதல்களைப் பொறுத்தவரை ஒருபலம் இன்னொரு பலவீனத்துடன் மட்டுமே மோதுவதனை எமது நாளாந்த வாழ்வில் அவதானிக்க முடியும். இலகுவாக சொல்வதெனில் நல்ல வலுவுள்ள ஒரு சண்டியன் தன்னிலும் வலுக்குறைந்தவர்களே அடித்துக்கொண்டிருப்பான். தன்னிலும் வலுவான ஒருவரைக் கண்டால் சமாதானத்தில் இறங்கிவிடுவான் அல்லது பின்வாங்கிவிடுவான். இது ஒரு அடிப்படை உதாரணம். இந்த மோதல்களில் வலுவானவர்கள் வெற்றிகொள்ள இயலாதவர்கள் தோற்றது மட்டுமல்ல உலகிலிருந்து அருகி அல்லது வென்றவர்களுக்குள் கரைந்து காணாமல் போகின்றனர்.
உலகியல் வாழ்வின் மேலுள்ள மோகம், ஆடம்பரத்தில் ஆர்வம், பிறர் முன் பெருமையாக வாழ்ந்து காட்டவேண்டும் என்ற ஆசை இவற்றுடன் குடும்பபாரம் என்பன ஒன்று திரண்டு எங்கள் தேவைகளை அதிகரிக்கச் செய்து, கடன் சுமைக்குள் தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முதன்மையானதாக மாற்றிவிட்டதால், பணம், அந்த பணத்தை தேடுவதற்கான வழிமுறைகள் தொடர்பாக மட்டுமே மனிதர்கள் சிந்திக்கின்றார்களே தவிர மற்ற எதையும் சிந்திப்பதுமில்லை, சிந்திக்க தயாராகவுமில்லை. எந்தவிதமான கவனச் சிதைப்புக்கும் ஆளாகாமல் பணத்தை நோக்கி மட்டும் ஓடிக்கொண்டிருக்கின்றோம். எங்கள் உழைப்பை விற்றுத்தான் பணம் தேடுகின்றோம். ஆனால் எனது உழைப்புத்தான் இன்னொருவனுக்கு மூலதனமாக அமைகிறது அதற்காகத்தான் முதலாளி அல்லது வேலை கொள்வோன் பணம் தருகின்றான் என்ற எண்ணமும் இல்லாமல், போட்டி நிறைந்த உலகில் நான் சிறப்பாய் வாழ்கின்றேன் என்று நினைத்து, எமக்குள் பெருமைப்பட்டு நாம் எல்லாம் அடிமைத்தனமாய் வாழவும் கற்றுக்கொண்டோம். அடுத்தவர்களுடன் பேசும் நேரத்தை கூட வீணான நேரம் என்று கணக்கிட்டு கதைப்பதையும் குறைத்துவிடுகின்றோம். இதேவேளை நாம் நன்றாக வாழ்வதாக மகிழ்வும் அடைகின்றோம். இதற்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று யோசிக்கத் தோன்றும். மக்களின் இந்த போக்குத்தான் அரசியலின் மூலதனம். இன்றைய காலகட்டத்தில் உலகம் யாவும் ஒன்றுபட்ட அரசியலால் கட்டமைக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை. முந்தைய காலங்களில் உலகம் யாவையும் ஒன்றுபடுத்துதல் என்பது உடனடியாக செய்ய முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. இலத்திரனியல் யுக வருகையின்பின் மிகவேகமாக செய்திகளை பரிமாறமுடியும். அதிலும் நல்ல செய்திகளின் தொடர்பாடல்களிலும் தீய செய்திகளே விரைவாகவே பரவுகின்றது. அது மனிதனை வாழவைப்பதிலும் அவன் மூலம் நன்மை பெறுவதையும், அல்லது அவனை அழித்து நன்மை பெறுவதையுமே நோக்காக கொண்டு இயங்குகின்றது. உதாரணமாக விளம்பரம் ஒன்றினை சிந்தியுங்கள். மக்களால் விரும்பப்படும் ஒரு சமூகநட்சத்திரம் மூலமே அநேக வியாபார விளம்பரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒரு விளம்பரத்தில் முகம் காட்ட அவர்களுக்கு நல்லதொரு பணத்தொகையும் வழங்கப்படும். இந்த பணத்திற்காக ஒரு பொருளை மிக நல்லது என்று விளம்பரப்படுத்துவார்கள். அவர்கள் ஒருநாள் கூட அப்பொருளை பயன்படுத்தாதவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. என்றாவது அவர்கள் சிந்திக்கின்றார்களா இந்த மக்கள் என்மீது நேசம் கொண்டவர்கள். உண்மை தெரியாமல் நான் அவர்களுக்கு எதையும் விளம்பரப்படுத்தக்கூடாது. அவர்கள் என்மீது உள்ள பாசம் காரணமாகத்தானே என்னை நம்புகின்றார்கள். நான் அவர்களை ஏமாற்றக்கூடாது. இல்லவே இல்லை, அதேவேளை புவியில் வாழும் மக்களும் நன்மை எது தீமை எது என்று சிந்திக்க முடியாமல் இந்த உலகின் வேகத்திற்கு ஏற்ப தம்மை நகர்த்திச் செல்ல போராடிக்கொண்டிருக்கின்றனர். இது அரசியல் உலகிற்கு வாய்ப்பாக அமைய அதையே அவர்கள் பயன்படுத்துகின்றார்கள். அரசியல் நகர்ந்து செல்ல வியாபாரம் உதவுகின்றது. அரசியலும் வியாபாரமும் எப்போதும் இணைந்தே பயணிக்கும். இதனை தடுக்கவே சமவுடமையை போதிக்கின்றார்கள். ஆனால் முதலாளித்துவம் ஒருநாளும் சமவுடமையை முந்திச் செல்ல விடுவதில்லை. இதற்கு மேலும் வலுக்கொடுக்க கல்வி என்ற ஆயுதம் துணை நிற்கின்றது. .
பொதுவாக மக்கள் படித்தவர்களை நம்புகின்றார்கள். படித்தவர்களோ தங்கள் படிப்பினை பயன்படுத்தி மக்களை ஏமாற்ற துணிந்து நிற்கின்றனர். அதாவது கல்வி என்பது மனிதத்தை போதித்த அளவிலும் கூடுதலாக சுயநலத்தை போதிக்கின்றது. இதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லமுடியும். படித்தவர்களை நம்பி மக்கள் மோசம் போகும் ஒரு செயல்பாட்டினை சொல்கின்றேன். குறிப்பாக மருத்துவம். எந்த ஒரு மனிதனும் சாக கூட தயாராக இருப்பான் ஆனால் நோய்தாங்கி வாழ மிகவும் துன்பப்படுவான் அல்லது பயப்படுவான். இதனால் மருத்துவர்களை நம்பி நாடிச்செல்வான். அவர்கள் படித்தவர்கள் மனிதனை படைத்தவன் கடவுள் என்று சொன்னாலும் தாய் தந்தையரால் படைக்கப்பட்ட எம்மை காக்கின்ற நற்பணியை செய்பவன் கடவுள் அல்ல மருத்துவன் என்று முழுமையாக நம்பி அவனிடம் செல்கின்றனர். ஆனால் இன்றைய மருத்துவம் வெறும் இலத்திரனியல் இயந்திரங்களையும், விளம்பரங்களையும் நம்பி நடக்கின்றதே தவிர அவர்களின் சொந்த திறமையாலோ அல்லது மனித நேசத்துடன் மனிதனை காப்பாற்றவோ நடைபெறுவதாக இல்லை. விஞ்ஞானம் வளர்ந்து மருத்துவம் உயர்ந்து மனிதகுலம் நன்மை பெறுகின்றது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்று வெறும் வியாபாரமாக மாறி எங்களை சிரமப்படுத்துகின்றது. மருத்துவருக்கு பணம், மருத்துவ இயந்திரங்களுக்கு பணம், மருந்துக்கு பணம், இதுமட்டுமல்ல ஒரு நாளுக்கு இவ்வளவு பணம் இலக்காகவும் நிர்ணயிக்கப்படும். அந்த அடிப்படையில்தான் மருத்துவம் நடக்கும். இது ஒரு உதாரணம் தான். இதுபோன்று இன்னமும் நிறைய உண்டு. வியாரிகளின் உதவிதான் அரசியலின் விருத்தி, எனவே வியாபாரிகளை பயன்படுத்தி அரசியல் நகரும், இந்த வியாபாரிகளின் நலனை பாதுகாப்பது அரசின் கடமையாகும். இதனை சுலபமாக புரிந்து கொள்ளவேண்டும் எனின் ஒரு அரசியல்வாதி பணமுள்ள ஒருவரை/ அல்லது வளமான வியாபாரியை மதிக்கும் அளவிற்கு அவருக்காக பேசுகின்ற அல்லது வாக்களிக்கின்ற சாதாரண மக்களை மதிக்கின்றார என்று சிந்தித்துப் பாருங்கள். அப்போது புரியும். மக்களின் வாக்குச்சீட்டு அரசியல்வாதிக்கு வாழ்கையை கொடுக்கின்றது. ஆனால் வியாபாரிகளால்தான் அரசியல்வாதிகள் வளமடைகின்றார்கள்.
வெளிநாட்டுப்பொருள்களை வருவித்து எம்மை எவ்வளவு மகிழ்ச்சியாக வாழவைக்க அரசு முயற்சிக்கின்றது என்று மகிழும் நாங்கள், எங்கள் முன்னேற்றத்திற்காக என்ன செய்தார்கள் என்று சிந்திப்பதில்லையே. வெளிநாட்டுப் பொருட்களினை ஊருக்குள் விடக்காரணம் எம்மீது உள்ள பாசம் அல்ல அந்த பொருள்களால் கிடைக்கும் தனிப்பட்ட வருமானம். இப்போது சிந்தியுங்கள், வடக்கினை சூழ்ந்துள்ள போதையும் அரசியல் விளைவே தவிர தற்செயலானது அல்ல. இந்தப்போதை இப்போது ஆண்களையும் பெண்களையும் தன்வசம் கூட்டு சேர்த்து விட்டது. உண்மையில் அரசு என்பது ஒரு வலுவான கட்டமைப்பு. ஆனால் அக்கட்டமைப்பானது காவல்துறை, நீதிமன்று, இராணுவம் என்று தன்னை பாதுகாக்கும் அதிக துணை அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்தக்கட்டமைப்புகள் குடிமக்களின் பாதுகாப்பிற்கானது என்று சொல்லப்படுகின்றது. இந்தக்கட்டமைப்புகள் தமிழரை எந்தளவுக்கு பாதுகாத்தது/ பாதுகாக்கின்றது என்பது தமிழர் நன்கு அறிந்த செய்தி. பலமான அரச கட்டமைப்பு அல்லது அமைப்புகள் வலுவற்ற தனி மனிதனை அல்லது சிறிய மனித குழுமத்தினை தனது பலம் முழுவதையும் பயன்படுத்தி தாக்கினால் அவர்கள் எவ்வாறு தங்களை பாதுகாக்க முடியும்.
இன்னுமொரு அப்பட்டமான ஏமாற்றையும் நாம் பார்க்கலாம். இது நீதி மன்றங்கள் தொடர்பானது. ஒரே நீதி மன்று, ஒரே தீர்ப்பு என்பது கிடையாது. வேறுபட்ட தரங்களிலான நீதிமன்றங்கள் இருக்கும். ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மேல்நீதிமன்றம் செல்லமுடியும். அங்கு மேன் முறையீடு செய்யவும் முடியும். அதில் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு. இது மிகவும் கோமாளித்தனமானது என்று நாம் யோசிப்பதே இல்லை. காரணம் நீண்ட ஒரு வழக்கு நடந்து, சம்பந்தப்பட்டவர்கள் யாபேரும் விசாரிக்கப்பட்டு அந்த அடிப்படையில் நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்படும். ஆனால் மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு மாற்றம் காணுமானால் இது சரியான நடை முறையா என்று நாங்கள் யாரும் சிந்திப்பதில்லை. இன்னோர் செய்தியையும் அவதானிக்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற படத்தில் சொல்லப்படும் செய்தி. இது அநேக மக்கள் சந்தித்த அவலம் ஆனால் கட்டப்பொம்மன் என்றவகையில் பெரிதாக சொல்லப்படுகின்றது. அதிலே கட்டபொம்மனை பிடித்துவந்து நீதி விசாரணை நடைபெறும். அதன்போது நீதி விசாரணை நடத்துபவர் சொல்வார் நாங்கள் ஒரு நாயை கொல்வதானாலும் சட்டப்படி குற்றம் காணாமல் கொல்லமாட்டோம். உண்மையில் நாடு யாருடையது. யாருக்கு எதிராக வழக்கு நடக்கின்றது என்பதை எல்லாம் சிந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு வரவில்லை. அதாவது கட்டப்பொம்மன் ஆட்சியில் இருந்த நிலத்தை பிடித்து அவனைக் குற்றவாளி என்று இனம் கண்டு, அவன் மீது குற்றம் சுமத்தி தூக்கிலிடுகின்றார்கள். அவர்களே ஏமாற்றுத்தனமாக தேடிப்பிடித்து, அவர்களே நீதி மன்றம் வைத்து விசாரித்து, அவர்களே சரி பிழை கண்டு பிடித்து, அவர்களே தீர்ப்பு வழங்கும் நல்லவர்கள், நியாயவாதிகள். எவ்வளவு ஏமாற்றுத்தனம். இது சரியா தவறா என்று நாம் சிந்திக்கின்றோமா?. நாம் சிந்திப்பதே இல்லை. வாழ்வின்மீது கொண்ட ஆசை பயத்தின் பக்கமாக எம்மை தள்ளுகின்றது. அதனால் நான் தப்பினால் போதுமடா சாமி என்ற நினைப்பு எங்களை முற்றாக உள்வாங்குகின்றது. ஆனால் கட்டபொம்மனை கோபத்தின் பக்கமாக தள்ளுகின்றது. தனக்கான சமூககடனை ஆற்றவேண்டும் என்ற நிலைக்கு இழுத்துச் செல்கின்றது. அங்கேயே இன்னும் சிலரை காட்டுவார்கள், பணிந்தோம் பயனடைகின்றோம். எதிர்த்தாய் சாவினை சந்திக்கின்றாய் என்பதாக கூறி அமைந்திருப்பார்கள். ஆனால் அவர்களிடம் தங்களை நம்பிய மக்களைப்பற்றிய எந்த ஒரு கவலையும் இல்லை. தாங்கள் தப்பிவிட்டோம் என்ற பெரும் மகிழ்ச்சி. இந்த வகையில் நாம் சிந்திக்க ஆரம்பித்திருந்தால் நிறைய உண்மைகளை கண்டறிந்திருப்போம். அங்கு பெரியதொரு பிரித்தானிய அதிகாரம், ஒப்பீட்டளவில் அவர்களிலும் சிறிய ஒரு மன்னனை தாக்கி வெற்றி கொள்கின்றது. இதுதான் சரி என்று இந்த உலகமும் எம்மை நம்பவைக்கின்றது. நாமும் கைகளை கட்டியபடி வேடிக்கை பார்க்கின்றோம், முழுமையாக நம்புகின்றோம். மட்டுமல்ல கட்டபொம்மன் பணிந்திருந்தால் தூக்கில் போட்டிருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கின்றோம். காரணம் பலத்தை எதிர்ப்பது என்பது பலவீனத்தால் முடியாத ஒன்று என்று நாம் முழுமையாக நம்பவைக்கப்படுகின்றோம். அதிலேயே சொல்லப்படும் இன்னொரு செய்தி ஏனைய பாளையகாரர்கள் எல்லாம் பணிந்தார்கள். பயன்பெறுகின்றார்கள். சமூக நேசமும் வீரமும் வழிகாட்டும் திறனும் எல்லோரிடமும் விளையாது. அவ்வாறு அமைந்தவர்களுக்கு தங்களை நம்பிய மக்களின் நல வாழ்வு மட்டும்தான் பெரிதாக தோன்றும். அவ்வாறான மனிதர்கள்தான் மனித நேசர்கள். அவர்களின் பெயர்கள் மக்களால் உலகு உள்ளவரை உச்சரிக்கப்படும் ஒன்றும்கூட.
புவியில் மனித வளர்ச்சி ஒருகட்டத்தில் தலைமைத்துவ சமூக கட்டமைப்பை உருவாக்கிவிட்டது. இது குடும்பத்துக்கு தலைவன், கிராமத்துக்கு தலைவன் இப்படிச்சென்று மன்னர் ஆட்சி என்று மலர்ந்தது. இந்த மன்னர் ஆட்சி தவறானது. மக்களை கொடுமைப்படுத்துவது என்ற விளக்கம் வழங்கப்பட்டு மன்னர் ஆட்சிகள் மக்களைப் பயன்படுத்தி அல்லது மக்களின் எழுச்சியை பயன்படுத்தி வீழ்த்தப்பட்டது என்பது உலகம் அறிந்த உண்மை. மன்னர் ஆட்சிகள் வீழ்ச்சி கண்டபின் அதனிலும் மோசமான ஆட்சிகளை மக்கள் சந்தித்தது தானே புவியின் வரலாறாக இருக்கின்றது. அதிலும் சில மன்னர்கள் மக்களுக்கு மிகுந்த நன்மைகளை தரும் ஆட்சிகளை நடாத்தியிருக்கின்றனர். மக்கள் நல்ல வாழ்வு வாழ வழி செய்திருக்கின்றனர். சண்டைகளில் கூட சண்டைக்கு பயந்தவர்களை ஓடுங்கள் என்று துரத்திவிட்டு, வீரர்களை மட்டும் அழைத்துச் சென்று தமக்கென்று ஒதுக்கப்பட இடங்களில் மட்டும் நின்று கொண்டு, சண்டையிட்டு முடிவுகளைபெற்றனர். இன்று அப்படியா? அப்பாவிகள், குழந்தைகள் ,பெண்கள் , வயது முதிர்ந்தோர், நோயாளிகள், பயந்து ஓடுவோர் என்று யாரையும் விட்டுவைக்காமல் அவர்களை துரத்தித் துரத்தி அடித்து, சுட்டு, குண்டுவீசி கொல்கின்றார்களே. அதிலும் பெண்களின் மீது வன்முறை செய்தால் பெருமை என்று நினைத்து அவர்கள்மீது வீரத்தை காட்டுகின்றார்களே. சக மனிதனின் ஆடைகளை களைந்து விட்டால் அது தமக்கு வீரம் என்கின்றார்களே. இவை எல்லாம் பெருமையாகவே பார்க்கப்படுகின்றதே தவிர தரம் தாழ்ந்த செயலாக ஏன் கருதப்படவில்லை. குற்றமிழைக்கும் பெண்களை புறக்கணிக்கும் சமூகம் இந்த குற்றங்களுக்காக ஏன் கிளர்ந்தெழவில்லை. ஆதாரம் வேண்டும், நீதி விசாரணை வேண்டும் என்று ஏன் காலங்களை இழுத்தடிக்கின்றது. மனிதநேசம் பேசுவோரால் ஏன் மாற்று சிந்தனைகளை முன்வைக்கமுடியவில்லை. பெண்கள் மீது வன்முறை செய்பவன் தனி மனிதனாக இருந்தாலும் சரி, இராணுவமாக இருந்தாலும் சரி விசாரணை இன்றி வீதியில் அடித்தே கொல்லப்படவேண்டும் என்று முடிவெடுத்திருந்தால் யுத்தம் பெண்களை கொடுமைப்படுத்தியிருக்காதே. இவை எல்லாமே அரசியல்தானே. பலம் பலவீனத்துடன் மட்டுமே மோதும். ஆயுதபாணி நிராயுதபாணியுடனே மோதுவான். ஆற்றாதவன் அடிவாங்குவதை தவிர வேறு வழி இல்லையே. பலவீனமானவன் ஒருவனின் ஆடைகளை களைவது பலமானவனின் திறமை அல்ல , மாறாக பலமானவனின் கோழைத்தனம் என்றுதான் நான் சொல்வேன். அடுத்தவனின் ஆடைகளை களைபவனை ஒரு கீழ்த்தரமானவன் என்றே கூறமுடியும். நாங்கள் நம்பிக்கை ஊட்ட வேண்டியது பலவீனமாவனுக்கு மட்டும்தான். பலமாக உள்ள ஒருவனின் பின் கைகட்டி நிற்க வேண்டும் என்று சிந்திப்பது மிகவும் முட்டாள்தனமானது. காரணம் எம்மைவிட பலமான ஒருவனைக்கண்டால் அவன் யாரை விரும்புவான். நலிந்தவனுக்குக்கு துணை இருக்கவேண்டுமே தவிர வலிந்தவனுக்கு துணை போக கூடாது. இந்த உலகம் வலிந்தவனுக்கே துணை போகும். அடிவாங்கி, அடிவாங்கி களைத்த எங்களுக்கு முழு உலகமும் வந்துநின்று அடித்ததே/ அடிக்கின்றதே. சரி விடுதலைப்புலிகளை காரணம் காட்டும் உலகம், அதன் பின்னர் தமிழரின் நிலையை திரும்பிப்பார்த்ததா? இல்லையே ஏன்? எவனால் பாதிக்கப்படுகின்றோமோ அவர்களிடமே சொல்லப்பட்டுள்ளது விசாரித்து நீதியை வழங்குங்கள். அப்படியே கட்டபொம்மனின் நீதிமன்றமாக இல்லையா?
இன்னொரு செய்தியும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இன்றும் மன்னர் ஆட்சி நடைபெறும் நாடுகள் உண்டு. அந்த நாடுகள் தொடர்பாக தவறான செய்திகளும் உண்டு. நாம் அதனை முழுமையாக நம்புகின்றோம் அல்லது நம்பவைக்கப்படுகின்றோம். உதாரணமாக நினைத்துப்பாருங்கள். கிட்லர் மோசமான ஒருவராக சொல்லப்படுகின்றார். நாங்கள் கிட்லரின் ஆட்சியின் கீழ் வாழவில்லை, அவரது நாட்டில் வாழவில்லை. ஆனாலும் கிட்லர் கொடுமையான மனிதர் என்று நம்புகின்றோமே. இப்படியாக எங்களுக்கு தெரியாத மனிதர்கள் தவறானவர்கள் அல்லது நல்லவர்கள் என்று நம்பவைக்கப்படுவதும், நாங்கள் வசிக்காத ஒரு நாடு தவறான ஆட்சியுள்ள நாடு அல்லது சிறந்த ஆட்சியுள்ள நாடு என்று நம்பவைக்கப்படுதும் எப்படி நடக்கின்றது. மனிதர்கள் முழுமையாக சிந்திக்க ஆரம்பித்தால் அதிகமான நடைமுறைகள் மாற்றங்களுக்கு உள்ளாகும். இதற்காகவே அவர்களை சிந்திக்கவிடாது அரசியல் நடாத்தப்படுகின்றது. பணத்தின்பின் மக்கள் துரத்தப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழர் விடுதலைக்கும் இக்கருத்துக்களுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் எண்ணுவீர்கள். நிறைந்த தொடர்புகள் உண்டு. ஈழத்தமிழர்களை பொறுத்தவரை ஆயுதப்போராட்டம் ஆரம்பிக்க முன்னர் இலங்கைக்குள் பணம் தேடி அலைந்தனர். ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த பின்னர் உலகம் முழுவதும் பணம் தேடி அலைகின்றனர். இவை மட்டுமல்ல வரலாறுகள் சொல்லித்தந்த பாடங்கள் இன்னும் நிறைய உண்டு. இப்போது எங்கள் போராட்ட பக்கமாக திரும்பி இவற்றை ஆராய்வோம்.
என்னதான் ஈழத்தின் தமிழ் அரசியல் தலைவர்கள் அறவழிப்போராட்டத்தை தேர்ந்தெடுத்து போராடினார்கள் என்று சொன்னாலும், அது ஆற்றாமையின் விளைவே தவிர ஆதிக்கத்தின் முடிவு அல்ல. தமிழர் தரப்பு பலமாக இருந்து கொண்டு, நாம் அறவழியில் கேட்கின்றோம் எங்கள் உரிமைகளை தரவேண்டும் என்றால் மட்டுமே அது பலத்தின் வெளிப்பாடு. சிங்கள இனவாதத்தை பொறுத்தவரை அது சகல அரச அதிகாரங்களையும் ஒருங்கே குவித்து தன்னிடம் வைத்துக்கொண்டு ஆயுதபாணிகளாக களமிறங்கி ஆயுதமற்ற தமிழர்களை தாக்கினார்கள் என்பதுதான் உண்மை. இலங்கை விடுதலை பெற்றபின் நடைபெற்ற அரசியல் குழப்பங்கள்தான் இளைஞர்களையும் அரசியல் பக்கம் இழுத்துவந்தது என்று சொல்லமுடியாது. அதன்பின் வந்த படிப்படியான மாற்றங்கள் வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்புகள், கல்வியில் தரப்படுத்தல் இவைகளும் இணைந்தே இளைஞர்களை ஒருமுகப்படுத்தியது எனலாம். ஆயுதபோராட்டம் என்றதொரு போராட்ட வடிவம் உருவாக்கம் பெற முன்பே தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மகளீர் அணி என்பனவும் இயங்கின. அந்த அமைப்புகளில் இருந்த இளைஞர்கள் வீரமாக விறுவிறுப்பாக பேசும் ஆற்றல் படைத்தவர்கள். தமிழரசுக்கட்சி அல்லது தமிழர் கூட்டணி மேடைகளில் அன்றைய நாட்களில் முழங்கியவர்கள். பின்னர் கொள்கை வேறுபாடுகள், போட்டிகள், தனிமனித வேறுபாடுகள், பணம் , பதவி, சாதி என்ற நேரடி அல்லது மறைமுக காரணிகள் அவர்களை உடைந்து பிரிந்து கலைந்து செல்ல செய்துவிட்டது. இவைதொடர்பான அதிகமான செய்திகள் அகாலம் என்ற நூலில் புஷ்பராணி அவர்களால் ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் என்று எழுதப்பட்டுள்ளது. அதைப்பற்றி விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு ஆழ்ந்த அறிவு இல்லை. காரணம் அவர்கள் தனது நினைவுக்குறிப்பு என்றுதான் குறிப்பிடுகின்றார். ஆனாலும் அங்கு சொல்லப்பட்ட ஒரு முக்கிய செய்தி உண்டு. அதனை தேவைப்படும் வேளையில் குறித்துக்காட்டுகின்றேன் அதேவேளை தமிழ் மக்களின் எழுத்துலக ஆளுமை தொடர்பாகவும் அடுத்த தொடரில் எழுதுவேன்.
அதே போன்று சமூக நாடகங்கள் மூலம் அநேக அரசியல் செய்திகள் சொல்லப்பட்டன. அதிலே நான் பார்த்த ஒரு நாடகம் “ இருட்டினில் குருட்டாட்டம்”. அந்நாடகம் இருட்டு என்றால் பின்பு குருட்டாட்டம் தானே என்று தோன்றும். ஆனால் அந்நாடகத்தில் சொல்லப்பட்ட செய்தி 1977 இனக்கலவரத்தில் தமிழ்க்குழு தொடர்பானது. இக்குழு ஒரு வாகனத்தில் தப்பி வரும்போது வழியில் வாகனம் பழுதடைந்துவிடும். அவ்வாகனம் ஒருவனால் பழுதுபார்க்கப்படும். வாகனம் புறப்படும் சமயம் கலவரக்காரர்கள் தேடி அடிக்க வந்துவிடுவார்கள். பழுது பார்த்தவன் சாதி குறைவானவன். அந்த ஒருகாரணத்தால் அவன் தனித்து விடப்படுகின்றான். பின்னர் என்ன நடக்கும் என்று நான் சொல்லத்தேவையில்லை. இதுதான் நாடகம். தமிழன் மனநிலை என்று மாறும். சொல்லிவிடவே முடியாது. இன்று புலம் பெயர்நாடுகளில் நடைபெறும் கொண்டாட்டங்கள் எம்மை கண்ணீர் சிந்த வைக்கின்றது. அதுபற்றி நான் பேசவிரும்பவில்லை. இவை எல்லாவற்றுக்கும் அரசியலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. அதனை நுட்பமாக மதிப்பிட்டு செயல்பட்டவர்கள் தொடர்பாக பின்னர் ஆராய்வோம்.
அரச அடக்குமுறை என்றவகையில் அன்றைய நாட்களில் வடக்கு கிழக்கில் காவல் துறையில் பணியாற்றிய சிங்களரிலும் தமிழ் காவல் துறையினர் மிகவும் மோசமான நவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்பது எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று. மக்களை அடிப்பது, காரணமின்றி இன்றி கைது செய்வது துன்புறுத்துவது, கொலைசெய்வது, கொலைகளுக்கு உடந்தையாக இருப்பது, இப்படி பல சொல்லமுடியும். ஆதாரமில்லாமல் அடுக்காதே என்று நீங்கள் சொல்வது காதில் விழுகின்றது. இது தொடர்பாக பலர் எழுதியுள்ளார்கள், அதனால் நான் தனித்து விளக்கவில்லை. இவை எல்லாம் தமிழர்கள் பயத்தில் ஒடுங்கி வாழவேண்டும் என்பதற்காக நடந்தவை. இன்றைய வாள்வெட்டு போல. எப்போதுமே ஏதாவது செயல்களை அரங்கேற்றியபடியே இருப்பார்கள். இளைஞர்கள் கொலை செய்து வீசப்பட்டனர். நான் அதிகமான செய்திகளை சுருக்கமாக அல்லது மேலோட்டமாகவே சொல்ல விரும்புகின்றேன். காரணம் இவைகள் தொடர்பான செய்திகள் வெவேறு எழுத்தாளர்களால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்டுள்ளது. எனவே அவற்றை நான் மீண்டும் எழுதுவது பயனற்றது. ஆனால் மக்களிடம் தங்களைப்பற்றி, தங்கள் இனம்பற்றி, தங்கள் கடந்த காலம் பற்றி எப்போதும் விழிப்பு இருக்கவேண்டும். எங்களுக்கும் எங்கள் சமூகத்துக்கும் நாம் சார்ந்த சார்ந்த செய்திகள் தெரியவேண்டும். இதற்காக நாம் சில செய்திகளை ஞாபக படுத்தவேண்டும். இது அரசியல் செய்ய அல்ல, வெளிநாடு சென்றோர்கள் எல்லாம் எங்கோ கரைந்து மறைத்துவிடும் நிலை வரலாம். ஆனால் ஒரு இனம் முற்றாக கரைந்து அழிந்து போகக்கூடாது. எந்த ஒரு சமூகத்திலும் சமூக சிந்தனை உள்ளவர்கள் தோன்றுவார்கள். அவர்கள் தெரிந்துகொள்ள செய்திகளை சேர்த்து வைக்க வேண்டும்.
ஈழத்தில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் என்றவகையில் தந்தை செல்வா எனப்படும் சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் வாழ்ந்தபோதும், வாழ்ந்தபின்பும் பெற்ற செல்வாக்கினை வேறு யாரும் பெறவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். தன்னலமற்ற ஒரு தலைவர் என்பது மக்களின் நம்பிக்கை. எந்த வேளையிலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கி எரியும் மனிதர் என்று சொல்லப்படும் அவர் மக்களின் மீது விருப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்திருக்கவேண்டும். அதனால்தான் “ தமிழ் மக்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” ஆற்றாமை வாசகத்தை சொல்லியிருக்கவேண்டும். இந்த வாசகம் அவரால் சொல்லப்பட்ட போது தன்னை சூழ இருந்தவர்கள் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லைப்போலும். எது எப்படியோ அவரின் இந்த வசனம் பிரசித்தமான ஒன்று. ஆனால் நான் அவரை பார்க்கும் காலத்தில் அவரால் சரியாக பேசமுடியாதிருக்கும். கூட்டங்களுக்கு அவர்களுடன் வரும் ஒரு இளைஞரை (இன்றும் சிலர் அரசியலில் இருக்கின்றார்கள்) அழைத்து அவர் பேசுவதை மக்களுக்கு சொல்ல சொல்வார்கள். நாமும் கேட்போம். இவை கடந்துபோன வரலாறுகள்.
நடைமுறை சொல்லிய பாடம் பாராளுமன்ற அரசியல் எந்த விடிவையும் தமிழர்களுக்கு தரமாட்டாது என்ற முடிபு அரசியல் தலைவர்களை தனிநாடு கோர ஊக்குவிக்க, கல்வித்தடை, வேலைவாய்ப்பு புறக்கணிப்பு, தனிமனித விடுதலை, போன்ற காரணிகள் இளைஞர்களை உந்தித்தள்ள எழுபதுகளின் மத்திய காலம் தமிழர்கள் மத்தியில் ஆயுதபோராட்ட குழுக்கள் தோற்றம் பெற்றன.
பரமபுத்திரன்.