சொந்த உழைப்பை சமூக உழைப்பாக மாற்றாத, தன் உழைப்பில் இருந்து சமூகத்துக்கான பங்களிப்பைச் செய்யாதவர்கள், இலங்கையில் புலம்பெயர் உதவியைக் கையாள்வதும் – கோருவதும் நடந்து வருகின்றது. இதுவே சமூக நோக்குக்கு முரணானதாகவும் – இதனாலேயே இது சமூகம் சார்ந்ததாக இருக்க முடியாததாகி விடுகின்றது.
மறுபக்கத்தில் நடைமுறை வாழ்வில் சமூக சிந்தனையையும் அதற்கான உழைப்பையும் வழங்க முடியாதவர்கள் – பணத்தைக் கொடுப்பதையே சமூக உணர்வாக கருதுகின்றவர்களால் கொடுக்கப்படும் பணம், சமூகச் சீரழிவுக்கு இட்டுச் செல்லுகின்றது.
இரண்டு பக்கத்திலும் சமூகம் சார்ந்த சிந்தனையும் – நடைமுறையும் இன்றிய பணச் செயற்பாடுகள் என்பது, சமூக அழிவுக்கு இட்டுச் செல்லும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு வழிகாட்டல் இன்றியும், பணத்துக்கு என்ன நடந்தது என்ற சுயகேள்வியும் இன்றியும், அதனால் அந்தக் குழந்தைக்கு கிடைத்த நன்மை என்ன என்ற கேள்வியும் இன்றி, பணத்தைக் கொடுத்தால் என்ன நடக்குமோ, அதுதான் இங்கும் நடக்கும்.
யுத்தம் கூட கல்வியை இந்தளவுக்கு சீரழித்;தது கிடையாது. யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தை, புலம் பெயர் பணம் சீரழிக்கத் தொடங்கி இருக்கின்றது.
பணத்தைக் கொண்டு புலம்பெயர் சமூகத்தை வழிநடத்த முனையும் சுயநலவாதிகளாலும், பிரமுகர்களாலும், பதவி வேட்டை பேர்வழிகளாலும் புலம்பெயர் உதவியை சமூக நோக்கு உள்ளதாக்க முடியாது. ஆனால் அவர்கள் தான் இன்று இதைக் கையாள்வது நடக்கின்றது.
பணத்தைக் கொண்டே கல்வியின் இலக்கை அடைய முடியும் என்று கூறுவதும், பணத்தை பெறுவதையே இலக்காகக் கொண்டுள்ள கல்வி சமூகத்தால், சமூகத்தை அழிவுக்கே வழிநடத்த முடியும்.
இவ்விரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி, யுத்தத்துக்கு பிந்தைய சமூகத்தின் கல்வியை அழிக்கின்றது.
கல்வி இலக்கை எட்ட பணம் அவசியம் என்ற அளவுக்கு – கல்விச் சமூகம் சீரழிந்துவிட்டது. புலம்பெயர் சமூகம் அதற்கு தாளம் போடத் தொடங்கிவிட்டது. பணத்தைக் கொடுத்தால் போதும், கல்வியைப் பெற்று சமூகம் முன்னேறி விடும் என்றளவுக்கு, சமூகம் குறித்த பொது அறிவு பணமாகி இருக்கின்றது. இந்த சமூக சீர்கேட்டை மறைக்க, பணம் கொடுக்க அளவுகோல்களுடன் அழைக்கின்றவர்கள், சமூக அளவுகோலை கொண்டு அணுகுமளவுக்கு சமூக உணர்வு கிடையாது. தனிநபர்களின் “இல்லாமையை” முன்னிறுத்தி உதவியும் – தனிநபரின் பரீட்சைப்பேறைக் கொண்டு கல்வியை அளக்கும் அறியாமையுமே, பொதுப்புத்தியாகி வருகின்றது.
யுத்தம் நடந்த வரை – கல்வி சார்ந்த உதவிகள் கற்பதை உறுதி செய்யும் உதவிகளாகவே பெரும்பாலும் இருந்தன. யுத்தத்தின் பின்னான உதவிகள், புலம்பெயர்ந்தவன் தங்களை முன்னிறுத்துவதற்கான உதவிகளாக சீரழிந்து வருகின்றது. கிடைத்து வரும் கல்வியை அழிக்கும் வகையில் – சமூக உணர்வு சார்ந்த மனித மாண்புகளை இழந்து போகுமளவுக்கு – பணமே அனைத்துமாகி இருக்கின்றது.
இனவாத யுத்தம் நடந்தவரை – யுத்தத்துக்கு பணத்தைக் கொடுத்து தங்களை முன்னிறுத்தியவர்கள் – இன்று கல்வி சமூகத்திற்கு கொடுப்பதன் மூலம் தங்களை முன்னிறுத்தத் தொடங்கியதன் விளைவு. தங்களை முதன்மைப்படுத்தி பெருமைப்படுத்த யுத்தத்திற்கு பணத்தைக் கொடுத்த அதேநேரம் – மனித தியாகங்களையும் போராட்ட உணர்வுகளையும் போலியாக்கி சிறுமைப்படுத்தினர். இப்படி தங்களை முன்னிறுத்தி போராட்டத்தை அழித்தவர்கள் – யுத்தத்தின் பின் தங்களை முன்னிறுத்த கல்விக்கு உதவி என்ற பெயரில் – கல்வி சமூகத்தை நலமடிக்கத் தொடங்கி இருகின்றனர்.
அன்று போராட்டத்தை நடத்திய தலைவர்களுக்கு பணத்தையும் – அன்பளிப்புக்களையும் கொடுத்து தங்கள் எடுபிடியாக்கியதுடன் – அவர்களைச் சுகபோக வாழ்க்கைக்குள் சீரழிந்து போராடும் உணர்வை அழித்தவர்கள், புலம்பெயர் பணப் பிரமுகர்கள். அதேபோல் இன்று கல்வி சமூகத்தை தங்கள் பணத்துக்குள், சீரழிய வைத்திருக்கின்றனர்.
மாலை மரியாதைக்கும், பெயர் விளம்பரத்துக்கும், விருந்தினர் அந்தஸ்துக்கும் பணத்தை வாரிவழங்குகின்றனர், அதேநேரம் இதற்காக பிறரிடம் பணத்தைத் திரட்டுகின்றனர். பணத்தை அடைவதையே குறிக்கோளாகக் கொண்ட கல்விச் சமூகம் – மாலை மரியாதையைச் செய்வதும், பிரதமவிருந்தினர் அந்தஸ்து கொடுப்பதுமாக – கல்விச் சமூகம் பண உறவுகளாக சீரழிந்திருக்கின்றது. முன்பு அறிவு மற்றும் சமூகச் செயல் சார்ந்து கல்வி சமூகத்தால் வரவேற்கப்பட்ட கல்வி சார்ந்த நிகழ்வுகள், இன்று பணம் சார்ந்ததாக குறுகிவிட்டது.
புலம்பெயர் சமூகம் தங்களை முன்னிறுத்த அதிபர்கள் – ஆசிரியர்களுக்கு விருந்துகளை கொடுப்பதும், அன்பளிப்புக்களைக் கொடுப்பதுமாக… புலம்பெயர் சமூகம் கல்வி சமூகத்துக்குள் ஊடுருவி அமர்களப்படுத்துகின்றது. வெட்கம் மானமின்றி தன்மானத்தை இழந்து வரும் அதிபர்கள் -ஆசிரியர்கள், புலம்பெயர் சமூகத்துடன் சேர்ந்தும் – தனித்தும் விருந்துகளை நடத்துவதற்காக, தங்கள் நேரத்தை செலவிடுவதுடன் – புலம்பெயர்ந்தவனின் உழைப்பிலான பணத்தைப் பயன்படுத்துகின்றனர்.
புலம்பெயர்ந்தவன் கொடுக்கும் பணத்துக்கு விபரமான கணக்கும் – ரசீதும் கிடையாது. விருந்துகளை நடத்துவதும், ஊழல் செய்வது தொடங்கி கைநீட்டி வாங்கும் பணத்துக்கு முழுமையான விபரங்கள், பகிரங்கமாக பொதுவில் முன்வைப்பதும் கிடையாது. பணத்தை கேட்கும் போது விபரமாகவும் – பகிரங்கமாகவும் கோரும் கல்விச் சமூகம், கிடைத்த பணத்தையும் – அதன் செலவுகளையும் ரசீதுடன் (பில்;லுடன்) முன்வைப்பது கிடையாது. கணக்கு கேட்டால் ஒரு வரியில் இதற்கான செலவு அதற்கான செலவு என, மொட்டைக் கணக்கு கொடுக்கின்றனர். லஞ்சம், ஊழல், மோசடிகள் தொடங்கி முன்னாள் மாணவர்கள் தங்கள் பொழுதுபோக்குக்கு நடத்தும் தடல்புடலான விருந்துக்களில் பங்குபற்றுவதும், அவர்களிடம் பரிசில்களை வாங்குவதிலும் – கல்விச் சமூகம் மண்டியிட்டு கிடக்கின்றது. கல்விச் சமூகம் பணத்திற்குள் சீரழிய – பாடமாக்கும் பரீட்சைக் கல்விக்குள் மாணவர்களை முடக்கி, ஒரு சில பரீட்சைப் பேறுகளை கல்வி இலக்காக்கிக் காட்டுவதன் மூலம் – பணத்தை அடையும் மூலதனமாக கல்வியைக் குறுக்கி வருகின்றனர்.
கல்வியும் – கல்வியின் இலக்கு என்பதும், பணம் காய்க்கும் துறையாகிவிட்டது. கல்வி என்பது சமூக சேவை என்ற கல்வி சமூகத்தில் எஞ்சிக் கிடந்த சமூக மனப்பாங்கை, புலம்பெயர் பணம் அழித்து வருகின்றது. எதிர்கால தலைமுறையை அழிக்கும் மற்றொரு முள்ளிவாய்காலாக மாறி இருக்கின்றது புலம்பெயர் பணம். இது குறித்து சமூகமும் – சமூக நோக்குள்ளவர்களும், அவசரமாக சிந்திக்கவும் – செயற்பட வேண்டிய காலமிது.