அனைத்து இனமக்களும் சமமாக வாழும் தீர்வொன்று வழங்கப்படாமல் தேசிய நல்லிணக்கமோ, நிரந்தர சமாதானமோ ஏற்படாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று(16) மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது.
இந்த நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினரின் விஷேட உரை இடம்பெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பத்து இலட்சம் மக்களின் குடியுரிமையை பறித்ததில் இருந்து தமிழினத்தின் மீதான படுகொலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
1956ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பமான படுகொலைகள் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் படுகொலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட தேசிய விடுதலைப் போராட்டம் மிகவும் கொடூரமாக ஒடுக்கப்பட்ட அந்த நிகழ்வு நடந்தேறியது.
அதனை வைகாசி மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் நினைவேந்தல் வாரமாக அனுஸ்டிக்கின்றோம். 600க்கு மேற்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்ட செம்மணியில் இதன் ஆரம்ப நிகழ்வினை நடத்தினோம்.
1977ஆம் ஆண்டு தொடக்கம் வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான இளம்பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுகொலைகள் தொடர்பான அறிக்கையினை ஐ.நா.வுக்கு வழங்கியுள்ளோம்.
சிவாஜிலிங்கம் சிலருடன் சென்று விளக்கேற்றுகின்றார், படையினருக்கு எதிராக பேசுகின்றார், கவலையளிப்பதாக இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜயவர்த்தன சொல்கின்றார். சிலருடன் விளக்கேற்றுவது உங்களுக்கு கவலையளிக்கின்றது என்றால் அது தாக்கத்தினை கொடுத்துள்ளது.
இது எங்களுக்கு வெற்றியென்றே கூறவேண்டும். பதிலடி வழங்குவேன் என்றும் கூறியுள்ளார். நாங்கள் பதிலடியை கண்டு அஞ்சுபவர்கள் அல்ல, பல பதிலடிகளை நாங்கள் எதிர்கொண்டவர்கள்.
புலம்பெயர் தமிழர்களுடைய பணத்துக்காக இதனைச் செய்கின்றார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தென்னிலங்கை அரசியல்வாதிகள் போன்று நாங்கள் பணத்துக்காக அரசியல் செய்பவர்கள் அல்ல.
மக்களின் பிரச்சினைக்காக போராடும் நாங்கள் இன்று ஆரம்பித்தது அல்ல எங்கள் அரசியல்போராட்டம்.
மகிந்த ஆட்சிக்காலத்திலும் நாங்கள் விளக்கேற்றினோம். அந்த வேளையில் தீபங்களை படையினர் உடைத்த சம்பவத்தினையும் இந்த அமைச்சர் ருவான் விஜயவர்த்தனவுக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
குமுதினி படுகொலை சம்பவம் நடைபெற்றபோது ஏழு மாதம் கொண்ட பெண் குழந்தையொன்றும் கொடூரமான முறையில் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்டது.
இதுதான் உங்கள் படையினரின் இலட்சனத்தை காட்டுகின்றது. விசேட அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் வடக்கு கிழக்கில் வெறியாட்டம் ஆடாத இடமில்லை, படுகொலை செய்யாத இடமில்லை.
ஐ.நா.சமாதான படைஎன்று ஹெய்ட்டிக்கு சென்று அங்கு பாலியல் வல்லுறவுகளில் ஈடுபட்டு நாடு கடத்தப்பட்டதுடன் தண்டப்பணமும் விதிக்கப்பட்டது. அனைத்தையும் செய்துவிட்டு படையினரைப் பற்றி புகழ்கின்றீர்கள்.
ஐந்து பேருடன் விளக்கேற்றுவதாக சொல்கின்றார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் 74ஆம் ஆண்டு பிற்பகுதியில் தமிழின் புதிய புலிகள் என்ற அமைப்பினை ஆரம்பித்தபோது ஐந்து பேருடனேயே ஆரம்பித்தார்.
ஆயுதப் போராட்டத்தின் முன்னோடி இயக்கம் டெலோ இயக்கம் 1969ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டபோது ஏழு பேருடனேயே ஆரம்பித்தது.
ஐந்து பேருடன் ஆரம்பித்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராட்டம் முப்படைகளையும் கொண்டு நடைமுறை அரசாங்கத்தினை கொண்டு இயங்கியதை இலங்கை அரசாங்கமும் உலக நாடுகளும் புரிந்துகொள்ளவேண்டும், ஆகவே எண்ணிக்கை பெரிதல்ல.
நாங்கள் அஹிம்சை ரீதியாக போராடுகின்றோம். ஐந்து ஐந்தாயிரமாகலாம், ஐம்பதாயிரம் ஆகலாம். எங்களை நீங்கள் கொச்சைப்படுத்த வேண்டாம், எச்சரிக்கை செய்யவேண்டாம், புலம்பெயர் மக்களின் பணம் என்று சொல்லவேண்டாம்.
அமைச்சர் ருவான் விஜயவர்த்தன கோடீஸ்வரர் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் மருமகன் ரணில் விக்ரமசிங்க, ரணிலின் மருமகன் அமைச்சர் ருவான் விஜயவர்த்தன.
உங்களின் பாரம்பரியங்கள் எங்களுக்கு தெரியும். நீங்கள் எங்களுக்கு கதைவிட வேண்டாம். நாங்கள் அனைத்தையும் எதிர்கொள்ள தயாராகவேயுள்ளோம்.
நாளைய தினம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் ஓரத்தில் நினைவேந்தல் நிகழ்வு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ளது. இது தமிழர்களின் தேசிய துக்கநாளாகும்.
இந்த நிகழ்வில் கட்சி, சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பால் நாங்கள் ஓரணியாக நின்று இந்த செய்தியை உலகுக்கு சொல்வதன் மூலமே ஒரு சர்வதேச நீதிவிசாரணை மூலம் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதுடன் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் தங்களை தாங்களே ஆளும் வகையில் ஒரு தீர்வினை வென்றெடுக்க வேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் என்ற ஒற்றுமை வலுப்படுத்தப்பட வேண்டும். இன்று கிழக்கின் பல முஸ்லிம் பகுதிகளில் பிக்குகளின் அட்டகாசங்கள் நடைபெற்றுவருகின்றது. சிங்கள மக்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்தாலும் நாங்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்.
எனினும் அனைத்து இனமக்களும் சமமாக வாழும் தீர்வொன்று வழங்கப்படாமல் தேசிய நல்லிணக்கமோ, நிரந்தர சமாதானமோ ஏற்படாது என்ற செய்தியை இந்த நினைவேந்தல் மூலம் இலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் தெரிவித்துக்கொள்கின்றோம் என அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.