இரத்தினபுரி – பாமன்கார்டன் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிராக போராடிய இளைஞன் படு கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இப் பேரணி பிற்பகல் 1.30 மணியளவில் இரத்தினபுரி பொலிஸ் நிலையம் சென்றடைந்தது.
மலையக மக்கள் முன்னனி உபதலைவர் உள்ளிட்ட பிரதேச தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த இவ்வார்ப்பாட்டத்தில் கொலுவாவல விகாரையின் பிரதம விகாராதிபதி சீவலி தேராரூபவ், இரத்தினபுரி பிரதேச சபையின் இ.தொ.கா உறுப்பினர்களான தம்பிராஜாரூபவ் உதயகுமார்,ஐ.தே.க. உறுப்பினரான மோகன்ரூபவ், இரத்தினபுரி மாநகர சபை உறுப்பினர் வசன்பிள்ளை உள்ளிட்ட சுமார் 2000 பேர் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டனர்.
இவ்வாறான நிலையில் கொலை செய்யப்பட்டவரின் உடல் பிரேத பாரிசோதனையின் பின்னர் 20 ஆம் திகதி மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன போது எவ்விதமான ஆர்ப்பாட்டமும் செய்யக்ககூடாது என்று குடும்பத்தாரின் உறுதி மொழிக்கமையவே சடலம் கையளிக்கப்பட்டது.
இது இவ்வாறிருக்க பாது காப்பு கடமையிலிருந்த பொலிஸாரும் கொலையின் பிரதான சூத்திரதாரியும் தலை மறைவாகியுள்ளவரின் உடைகளை அவர்களின் வீட்டிலிருந்து எடுத்து சென்றதாக கூறியே பொது மக்கள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்கு செய்ததாக கூறப்படுகின்றது.
ஆர்ப்பாட்ட முடிவில் மலையக மக்கள் முன்னணியின் உபதலைவருக்கும் பேரணியில் கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றதுடன், இறுதியில் கொலையை கண்ட சாட்சி இருக்கும் பட்சத்தில் தாம் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இதே வேளை ஆத்திரமுற்ற தோட்ட தொழிலாளர்கள் சிலர் சந்தேக நபர்களின் இரு வீடுகளை தாக்கி சேதமாக்கியுள்ளனர். அத்துடன் 3 முச்சக்கர வண்டிகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாருக்கெதிராக கோசமிட்டதுடன் கொலையாளியை கைது செய், கசிப்புக்கு துணை போகாதே, போன்ற பதாதைகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் போதைப்பொருளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்த தனபால் விஜேரத்னம் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வசமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் பயனப்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கரவண்டியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், படு கொலைக்கு நீதி கோரியே மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.