திருகோணமலையில் காணாமல்போன பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு
கிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் அவரின் சடலம் சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா-ஆசிக்குளம் இலக்கம் 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர் முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் இன்று காலை (21), திருகோணமலை சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக, திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில், திருகோணமலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் வன்னியூர் செந்தூரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன. எனது மனைவி விரிவுரையாளர் என்பதால் கிழமையில் ஐந்து நாட்கள் திருகோணமலையில் இருப்பார்.
நான் கிளிநொச்சியில் வேலை பார்ப்பதால் கிளிநொச்சியில் இருப்பேன். வார இறுதி நாட்களில் நான் திருகோணமலை செல்வேன் அல்லது எனது மனைவி கைச்சிலை மடுவில் உள்ள எமது வீட்டுக்கு வருவார்.
கடந்த வாரம் கூட அவர்தான் இங்கு வந்திருந்தார். அவர் கர்ப்பிணியாக இருப்பதனால் பதிவுகள் மாற்றப்பட வேண்டிய தேவை இருந்தது.
கடந்த புதன் கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார். இரண்டு நாளும் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன் எங்கள் பதிவுகளையும் மேற்கொண்டு எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என.
அதன் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை. சில வேளை வேலைப்பளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என நான் நினைத்தேன்.
பின்னர் தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை காணவில்லை எனச் சொன்னார்.
பின்னர் அவரது கைப்பை திருகோணமலை நகர கடற்கடைப் பகுதியில் இருப்பதாகவும் சடலம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவள் அல்ல. அதற்கான எந்த தேவையும் இல்லை. இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.