பெண்மொழி என்பதைப் பெண்ணுக்கே உரிய தனித்தன்மை வாய்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழி என வரையறுக்கலாம். இலக்கியக் கொள்கைகள் வெளிப்படுத்துகிற மரபுகள் யாவும் ஆணின் கருத்தாக்கங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டவையே. இத்தகு மரபுகளை மாற்றி இலக்கிய வெளிக்குள் பெண்ணுக்கான அங்கீகாரத்தைக் கொண்டுவரப் பெண்ணுக்கென தனித்தன்மை வாய்ந்த மொழி தேவையாகிறது.
இன்றைய சமூகத்தின் பொதுமைப் பண்பாடாகப் பாலின வேறுபாடு அமைகின்றது. அதாவது ஆண், பாலினத்தில் உயர்ந்தவனாகவும் பெண், பாலினத்தில் தாழ்ந்தவளாகவும் கருதும் போக்கு அமைந்திருக்கிறது. மேலும், இது சமூகப் பார்வையில் பலவகைப்பட்ட தளங்களைத் தன் கூறுகளாக வைத்திருக்கிறது.
பண்பாடு
‘சமூகத்தில் மனிதன் பெறக்கூடிய ஆண், பெண் உறவுகளால் கட்டப்பட்ட பண்பாட்டுப் பாரம்பரிய மனப்பாங்கின்வழி ஏற்பட்ட அறிவு, நம்பிக்கை, கலை, சட்டம், ஒழுங்கு, வழக்காறுகள் மற்றும் பிற பகுதிகள், பழக்கவழக்கங்கள் பற்றிய வாழ்க்கை முறையே பண்பாடு’ என்று எட்வர்ட் பர்னட் டைலர் என்னும் மானுடவியல் அறிஞரின் கூற்று உற்றுநோக்கத்தக்கது. சமூகத்தில் பெண், ஆண் பற்றிய கருத்தாக்கங்கள் சிறுவயதிலிருந்து அதாவது அவர்களின் வளர்ப்பிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பெண் குழந்தைகளுக்குக் கற்றுத் தரப்படும் விளையாட்டுகளும் ஆண் குழந்தைகளுக்குக் கற்றுத்தரப்படும் விளையாட்டுகளும் வேறுவேறாய் அமைகிறது. மேலும் அவர்களுக்குச் சமூகச் சிந்தனையோடு கற்றுத் தரப்படுபவை, குழந்தைகளுக்கு வாங்கித் தரும் பொருட்கள் என அனைத்திலும் இவ்வேறுபாடுகள் உள்ளன.
“ பேருந்திலேறி நீ ஊரில் சிறந்த பள்ளிக்குச் செல்ல
அடுத்த தெரு பள்ளிக்கு நான் ரிக்~h ஏறினேனே
……
உனக்கு பந்தும் கேப்புத் துப்பாக்கியும்
எனக்கு பொம்மைக் குழந்தையும் மத்தாப்பும் தரப்பட்டதே
……..
தொட்டிலில் துயிலுகையில் மூடப்பட்ட கதவுகள்
கர்ப்ப வாசத்தில் சூழ்ந்த இருள்” (மகராசன், பெண்மொழி இயங்கியல்,பக்.245-246).
என்று பெண்ணுக்கான வெளியையும் விளையாட்டையும் ஆணிலிருந்து பிரித்து வைத்திருந்தனர். பெண்கள் தங்களைப் பற்றித் தாழ்வாகவும் ஆண்களைப் பற்றி உயர்வாகவும் சிந்திக்க இந்த அடிப்படையே காரணம்.
“பெண்ணின் அடையாளத்தையும் நடத்தை முறைகளையும் வேலைகளையும் ஆண்வழிச் சமூகப் பண்பாடுகள் தீர்மானிக்கின்றன. பெண்ணுக்கென்று எதுவும் இல்லை. ஆணுக்கானவரே பெண் என்ற வகையில்தான் பெண் நடத்தப்படுகிறார். ஆணின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கவும், அத்தேவைகளை நிறைவு செய்வதற்குமான வகையில்தான் பெண்ணைப் பற்றிய பண்பாட்டுப் புனைவுகள் அமைந்திருக்கின்றன.”
மேற்சொன்ன கருத்துப்படி பெண் என்பவள் ஆணுக்கு வேலை செய்யும் ஒரு கருவி. அவளுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இங்கு இடமில்லை. பெண்ணின் சிந்தனைகளுக்கு மதிப்பில்லை. பெண் என்பவள் வெறும் உடல்தான் என்கிற எண்ணம் ஆணாதிக்கவாதிகளின் மனதில் பதிந்திருக்கிறது. பண்பாட்டுப் புனைவுகளும் பெண்ணை அப்படியே உருவாக்குகிறது. சிமொன்தி பொவாயர் என்ற அறிஞரின் கூற்றுப்படி ‘பெண் என்பவள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள்’ என்பதில் பொதிந்திருக்கும் உண்மை தெளிவாகிறது.
“ எனக்கு
முகம் இல்லை
இதயம் இல்லை
அவர்களின் பார்வையில் இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன.
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைகள் ஆகும்
கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்க
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடைக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்” (மேலது,ப.247).
என்ற சங்கரியின் கவிதை பெண்ணைக் குறித்த பண்பாட்டு அடையாளப் புனைவுகளின் வழி பெண் சுயமிழந்து நிற்பதை எடுத்துரைக்கிறது. பெண்மொழி வெளிப்படுத்துகிற பண்பாட்டுக் கூறுகளை கீழ்க்காணும் முறையில் பகுத்து ஆராயலாம். அவை,
- சாதியம் சார்ந்தது
- பாலினம் சார்ந்தது
- மரபு சார்ந்தது
- சூழல் சார்ந்தது
- இலக்கியம் சார்ந்தது
என்பனவாகும்
- சாதியம் சார்ந்தது
ஈழத்தில் இனக்கலவரங்களுக்கு முன்பிருந்தே பரவலாக சாதிய அடக்குமுறை நிலைகொண்டிருந்தது. போர்ச்சூழல் இன்னும் அதிகமான சாதியத் தூண்டல்களை உண்டாக்கியது. பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளோடு சாதிய அடக்குமுறையும், கூடவே ஈழத்தில் வளர்ந்தது. இதனை,
“கலாசாலைக் கல்வியின் பொருத்தமின்மையா
அக்காமாரின் பிரச்சனையா
தாழ்த்தப்பட்டவனென்று கூறி
உனையவர்கள் ஒதுக்கி வைத்தமையா
இயக்கங்களின்
ஏறுமாறான நடவடிக்கைகளா ….
இவற்றில் எது உன்னை
அகதியாய் துரத்திற்று?.” (ikj;Nuap>, பெயல்மணக்கும் பொழுது >gf;.209-212)
என்ற மைத்ரேயியின் கவிதை, ஈழத்தில் சாதிய ஒடுக்குமுறைகளின் விளைவுகளை உணர்த்துத்pறது. சாதிய நோக்கில் படைப்பாளர்களின் படைப்புக்களை வெளியிடுவதில் தமிழகச் சூழலிலும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. சாதியின் பெயரைச்சொல்லி சமூக மதிப்பீடுகளில் கீழான இடத்திற்கு தள்ளப்பட்ட மக்கள் தங்களுடைய அடிப்படை உணர்வுகளையும் உரிமைகளையும் மேல்தட்டு வர்க்கத்திடமிருந்து போராடிப்பெற வேண்டியிருந்தது. அதனை வெகுஜன ஊடகமான இலக்கியத்திற்குள் கொணர்ந்து மேல்வர்க்கத்தைத் திணறடிக்கும் செயல் இன்று நடைமுறையில் உள்ளது.
“ இங்கே தான்
இந்தக் கடைசிப் பக்கத்தில் தான்
தலைமுறை தலைமுறையாய்
நாங்கள்
ஒதுக்கப்பட்டிருப்பது
இந்தக் கடைசிப் பக்கத்தில் தான்
;; ; ; ; ; ; ; ; ; ;
நளத்தியென்றும்
பள்ளி பறைச்சியென்றும்
அழுகல் வாயால் சொல்லெறிந்து
அடித்து விரட்டியதும் இந்த
கடைசி கலட்டி வெளிக்குள்தான்
……
மீண்டும் மீண்டும் கூறியது கூறமறுத்து
அடம்பிடிக்கிறதென் கவிதை
மு~;டியை உயர்த்தி
கட்டியம் கூறி ஓங்கியெழுகிறது அது
என்னவென்று?
உங்கள் பல்லுக்கில்லெல்லாம்
அடித்துடைக்கும் படி
தலைமுறை தலைமுறையாய்
உங்களால் களவாடப்பட்ட
எங்களுழைப்பை
மீண்டும் ஒன்றுக்குப் பத்தாய் பறித்தெடுக்கும்படி” (பானுபாரதி, பிறத்தியாள்,ப.77.)
என்ற கவிதை சாதிக்கொடுமையின் பாதிப்புக்குள்ளாகி மீண்டவர்களின் குரலாய் ஒலிக்கிறது. படைப்புகளில் மட்டுமல்ல இலக்கியத்தளத்தில் அவற்றை பரப்புவதிலும் சாதியம் பெருந்தடையாக இருந்தது. பொதுவாக சாதியம் சார்ந்த தடைகளை இருவகையாப் பிரிக்கலாம். அவை,
(அ) படைப்பாளர்களைச் சுட்டுவது
(ஆ) படைப்புகளைச் சுட்டுவது
(அ)படைப்பாளர்களைச் சுட்டுவது
படைப்பாளர்களின் சாதியை முன்வைத்து அவர்களுக்குச் சரியான மதிப்பு கிடைப்பதில்லை என்பது நடைமுறையில் கண்கூடு. பொதுவாக கீழ்ச்சாதியெனக் கருதப்பட்டவர்கள் சமுதாயத்தில் குறிப்பிட்ட மதிப்பினைப் பெறுவதில் மேல் வர்க்கத்தார்க்கு உடன்பாடில்லை. அதிலும் கீழ்வர்க்கப் பெண்கள் தங்கள் படைப்புகளால் கொண்டாடப்படுவதை இலக்கியவட்டம் ஏற்கவில்லை. அவர்களது படைப்புகளுக்கும் மதிப்பு எளிதில் கிடைப்பதில்லை.
இலக்கியம் சாதிய முறையில் இயங்குகிறபொழுது அதனைக் காலக்கண்ணாடியாக ஏற்பதில் இடையூறுகள் பல உண்டு. படைப்பாளிகளை மேல், கீழ்வர்க்கமாகப் பகுத்து, சிந்தனைகளுக்குச் சாதிய முலாம் பூசுவது எவ்விதத்திலும் சரியான போக்கு அன்று. அப்படி நோக்குகிற சமுதாயமும் ஆரோக்கியமானதன்று. இத்தகு நிலையிலிருந்து மேலெழுந்து வந்து தம் படைப்புகளால் உயரிய இடத்தைப் பெற்றுள்ள சில எழுத்தாளர்கள் எதிர்கொண்ட சிக்கல்களைப் பார்க்கும்பொழுது இது எளிதில் புலப்படுகிறது.
மேலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் படைப்புகளைத்தர சாதி ஒன்றும் தடையன்று என்பதை உணர்ந்தவர்களே இத்தகு சிக்கல்களை எதிர்கொண்ட பொழுதிலும் ,அதனின்று மீண்டு வந்திருக்கின்றனர். பலர் தம் படைப்பு முகத்தை அடையாளப்படுத்தாமலேயே மறைந்திருக்கின்றனர். அதிலும் சாதிய அரசியல் தமிழகத்தில் பெரும்பங்கு வகிக்கிற இந்நிலையில் எழுத்தாளர்களும் சாதிய நிலையில் இருந்து ஆதரவு தருகிறநிலை தடுக்கப்படவேண்டியது. இன்றைய காலகட்டத்தில் தமிழகப் பெண்கவிஞர்களின் சாதிய ஒடுக்குமுறைகளைப் புறந்தள்ள குரல் கொடுப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சுகிர்தராணி. அவர் தன் கவிதையான,
“மெல்லிய
புலால் நாற்றம் வீசுகின்ற
நானும்…..” (சுகிர்தராணி, இரவுமிருகம்,ப.31.)
எனும் கவிதையில் பறையொலி கேட்கும் எங்கள் வீடும் தெருவும் கடைசியில் இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். நானோ முதலில் இருப்பதாக கூறிக்கொள்கிறேன் என்கிறார். மேலும், ‘புலால் வாசம் அடிக்கிற என் உடல்’ என்ற சொல்லாடலில் தன்னை ஒரு தலித்தாக வெளிப்படுத்திக் கொண்டு ஒடுக்கப்பட்ட நிலையிலிருந்து சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறார்.
மொத்த உடல் உழைப்பையும் வாங்கிக் கொண்டு வியர்வையையும் வலியையும் வறுமையையும் கொடுத்துவிட்டு எங்களால் சுகப்பட்ட வாழ்க்கையை கொண்டாடிக் கொண்டிருக்கிற சமூகம் பின்வரிசையில் மட்டுமே வைத்திருக்கிறது. உரிமையைப் பறித்துக் கொண்டு புறக்கணிப்பை மட்டுமே கவ்விக் கொள்ளும்படி வீசி எறிகிறது என்ற கருத்துக்களை தனது கவிதைகளில் முன் வைக்கிறார் சுகிர்தராணி.
(ஆ) படைப்புகளைச் சுட்டுவது
இன்றைய இலக்கியச்சூழலில் தலித்இலக்கியம் என ஒருபிரிவு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. தலித் இன மக்களின் துன்பங்கள், அவமதிப்புகள் எனப் பலவற்றை காட்டுவதாக அப்படைப்புகள் அமைகின்றன. அதற்குக் காரணம் சாதிய வழிகளில் படைப்புகளை ஒடுக்குவது தான். ஒரு குறிப்பிட்ட சமூகம் சார்ந்து கவிதைகள் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. எவ்விடத்தில் அடக்குமுறை ஆக்கிரமிக்கிறதோ அவ்விடத்திலிருந்தே புரட்சி மேலெழுகிறது. சாதிய ஒடுக்குமுறைக்குள் சுழன்று மறைந்து போக இன்றைய எழுத்தாளர்கள் தயாராக இல்லை. அதிலும் பெண்எழுத்தாளர்கள் சாதிய அடையாளத்தை முன்வைத்தே தம் படைப்புக்களால் போராட முனைந்துள்ளனர். இதனை சுகிர்தராணி,
“வெகுநேரம் நின்று வாங்கிய
ஊர்ச் சோற்றை தின்று விட்டு
சுடுசோறென பெருமை பேசுவேன்…..
இப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்
பளிச்சென்று சொல்லிவிடுகிறேன்
பறச்சி என்று” (மேலது,ப.33).
என்ற கவிதை மூலமாக சாதிய அடையாளத்தை வெளிப்படுத்தியும் அச்சாதியால் தான் தாழ்ந்தவளாகி விடவில்லை என்பதையும் புலப்படுத்துகிறார்.
“புறக்கணிப்பிலிருந்து தீண்டாமையிலிருந்து பொருளாதாரப் பின்னடைவில் இருந்து தன்னை மீட்டெடுத்துக் கொள்ளத்தக்க சிறுமியின் சொற்கள்தான் ஊர்ச்சோற்றை சுடுசோறென பெருமை பேசுவதும் மீட்கத்துணிந்த மனம் சிறுமியாய் இருந்தபோது சுடுசோறென்றது வளர்ந்தபின் கம்பீரமாய் சொல்லுகிறது பறச்சி என இதை சொல்வதற்கு எவ்வித அருவருப்பும் கொள்ளாமல் பெருமிதமாய்ச் சொல்கிறது.” (ச.விசயலட்சுமி, பெண்ணெழுத்துக் களமும் அரசியலும். ப.124.)
என மேற்சொன்ன கவிதையின் விமர்சனமாய் ச.விசயலட்சுமியின் கூற்று சாதியம் குறித்த சொல்லாடல்களை தம் படைப்புக்களால் தைரியமாய் வெளிப்படுத்தும் பெண்கவிஞரின் பாங்கு புலனாகிறது.
மேலும் பார்ப்பனீய இந்துத்துவத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இயங்கும் கவிஞர் கு.உமாதேவியின் கவிதைகள், அரங்கமல்லிகா. புதியமாதவி போன்றோரின் கவிதைகள் சாதிக்கெதிரான பெண்குரலாக ஒலிக்கின்றன.
“தாய்மைக் குறியில்
திணிக்கப்படும்
சாதி இரும்புக் கம்பி
எவ்வித அருவருப்புமின்றி
வழிகிறது வீதியில்
வல்லூறுகளின் திணவு
பெருத்த அதிகாரக் குப்பியிலிருந்து…..
என்ற அரங்க மல்லிகாவின் கவிதையடிகள் ஒடுக்கப்பட்டதொரு சமூகத்தின் அசலான வேதனையின் மூலத்தைப் பேசுவதாக இருக்கிறது. சாதியக் கட்டுமானம் ஆண்களைக் காட்டிலும் மிக மோசமான அடிமைகளாகப் பெண்களை உற்பத்தி செய்து வருவதைக் கண்டிக்கிறது.” (மேலது, ப.124.)
என்று மேற்கண்ட கவிதை சாதியத்திற்கெதிராகக் குரல் கொடுப்பதைப் பதிவு செய்திருக்கிறது.
- பாலினம் சார்ந்தது
சங்க காலந்தொட்டே பெண்ணுக்கான வரன்முறைகளையும் ஆணுக்கான அதிகார முறைகளையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தாய்வழிச் சமுதாயமாக இருந்து தந்தை வழிச் சமுதாயமாக மாற்றம்பெற்ற பின்னர் பெண்கள் மீதான மரபுகள் முழுமையாக அடிமைப்படுத்துதலாகத் திணிக்கப்பட்டன. இதைப் பெண்கள் அடிமைத்தளையென உணராது, சிலகாலம் பெண்கள் போற்றப்படுகின்றனர் என்ற மாயத்திரையை வடிவமைத்திருந்தனர் ஆணாதிக்கத்தினர். அதன்பயனாகப் பெண் ஒரு போகப்பொருள் என்றாகி போற்றும்சூழல் குறைந்து உடைமைகளாய் வீட்டில் முடங்கி இருக்கச் செய்தனர். இதனால் சராசரி மனித உயிர்க்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டு ஆணுக்கு அடங்கியே வாழவேண்டிய கண்டிதச்சூழல் ஏற்பட்டது. இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படும் சூழலே மேலோங்கியிருந்தது. பெண்ணைப் பாலினம் சார்ந்து அடிமைப்படுத்த உயிரியல் வகைமை, பண்பாட்டு வகைமை இரண்டும் துணைபுரிந்திருக்கிறது. பெண்ணுக்கு இயற்கையாகவே அமைந்துள்ள மாதவிடாய், மகப்பேறு போன்றவை பெண்ணை பலவீனமாக்குகிற உயிரியல் வகைமையாகும். பண்பாட்டு வகைமை என்பது பெண்ணினுடைய நடத்தை முறைகள், விழுமியங்கள், அறங்கள், போன்றவற்றை வைத்துப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிருக்கின்றனர். இந்தப் புனைவுகளிலிருந்து வெளியேறும் போது, பெண் பிறரால் தூற்றுதலுக்கும் பழிக்கும் ஆளாகிறாள்.
“ஓடப் பார்த்தேன்
ஒற்றைக் கால் நொண்டி
…….
முடியாது
கதவைத் தள்ளினேன்
கால்களை உதறினேன்
வலிப்பவை வலிக்கட்டும்
இப்போது
எரிச்சல் இல்லை மூச்சில்
இவள்
பெண்ணல்ல என்றனர் வீட்டில்” (jh;kpdp>>ngay; kzf;Fk; nghOJ>g.137)
பெண் என்பதாலேயே தனியான கட்டமைப்புகளும் கட்டுப்பாடுகளும் சமுதாயத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. அத்தகு கட்டுப்பாடுகள் எல்லை மீறிப்போகும் பொழுதுதான் அதனை எதிர்த்தலுக்கான காரணம் வெளிப்படுகிறது. கல்வியறிவு கூட பெண் பாலினம் என்பதற்காக ஒதுக்கப்பட்ட கொடுமை இங்கே அரங்கேறியுள்ளது. சங்க இலக்கியங்களில் கூட பெண்கவிஞர்களின் எண்ணிக்கை குறைவு. பின்னர் வந்த இலக்கியங்களில் அந்த எண்ணிக்கை இன்னும் சரியத் தொடங்கியிருக்கிறது. அப்படியெனில் அதிகாரவர்க்கம் பெண்மீதான அடக்குமுறைகளை இன்னும் அதிகப்படுத்தியமை தெளிவாகிறது.
தற்காலத்தில் கல்வியறிவு பெறும் பெண்கள் சதவீதம் அதிகமானதன் பின்னர்தான் இத்தனை நாள் பண்பாடு, மரபு என்ற தலைப்பிட்டு அதிகாரவர்க்கம் எழுதி வைத்த அடிமைச் சாசனங்களை கேள்விக்குட்படுத்தினர். இதனால்தான் பெண்ணெழுத்துக்கள் முக்கியத்துவம் பெறலாயின. விளைவாகப் பெண்கள் தங்களுக்கான உரிமையைக் கோரியும் வர்ணிப்புப் பொருளாகக் கொள்ளப்படுவதை எதிர்த்து எழுதவும், போராடவும் துணிந்தனர்.
காதலும் நேசமும்கூட பெண்ணுக்கு உண்மையாய் கிடைப்பதில்லை. பெரும்பாலனவர்களுக்கு பெண்ணின் உடல் கவர்ச்சியாக இருக்கும்போது அவள் மேல் இருக்கிற ஈர்ப்பு மெல்ல கவர்ச்சி குறையும்போது குறைகிறது. காதலும் அதனை வெளிப்படுத்தும் உரிமையும் ஆணுக்கே உண்டென தமிழின் பழம்பெரும் இலக்கணங்களே வகுத்து வைத்திருக்கின்றன. இன்றைய இலக்கியங்களும் பெண்ணை நுகர்வுப்பொருளாகவே கொள்கிறது.
“ எண்ணெய்க் கசகசப்பில்
சமையல் நெடியுடனிருந்த
என் உடல்
உன் ஆர்ப்பரிப்பில்
அடங்கிக் கொள்கிறது
மறுபேச்சில்லாமல்
……..
அவசரமாய்
அவசியமாய்
நீ தொட்ட போதுதான் தெரிந்தது
மென்மையின் பெறுமதி உடன் கிளம்பும்
உன் காலடி ஓசையைத்
தொடர்ந்து
பரிதாபமாக வருகின்றன
இன்னும் மிச்சமிருக்கின்ற
என் காதலும்
பெண்மையும்” (மாதுமை, ஒற்றைச்சிலம்பு, பக்15-16.)
என்ற மாதுமையின் கவிதையடிகள் பெண்ணின் மனநிலையை தெளிவுபடுத்துகிறது. இத்தகு நிலையில் ஈழத்துப் பெண்கவிஞர்களின் பங்களிப்பு முதன்மையானதாகிறது. தமிழ்நாட்டுப் பெண்கவிஞர்கள் அதிகம் எழுதினாலும் ஈழக்கவிஞர்களின் கவிதை நோக்கு என்பது வேறுபட்டு நிற்கிறது. உணர்வுகளின் பிரதிபலிப்பதாக இருக்கிறது.
“ என் கைகளும் கால்களும்
பிணைக்கப்ட்டு
சிரசிலே முள்முடி தரிக்க
நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளேன்
…..
ஒடுக்குமுறைகள் என்
குரல் வளையை நெரிக்கின்றன
மூட நம்பிக்கைகளோ என் மேனிமீது
பாம்புகளாய் நெளிகின்றன.
…..
ஆனாலும்
என்னுள் முகை கொண்டுள்ள
அசைக்கவியலாத ஒளிபொருந்திய நம்பிக்கையின் மீதுமட்டும்
ஆணியறைந்திட
எவற்றாலும் முடியவில்லை.” .(செந்தணல், பெயல்மணக்கும் பொழுது,ப.123).
இங்ஙனம் ஒரு பாலின அடக்குமுறைக்கு எதிரான குரலைத் தக்கநேரத்தில் பதிவு செய்யத் துணைசெய்திருக்கிறது பெண்மொழி
- மரபு சார்ந்தது
காலங்காலமாக பழக்கப்படுத்தப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்ற பழக்கவழக்கங்கள் மரபாக ஏற்றுக் கௌ;ளப்படுகினறன. மனிதசமுதாயம் பெண்ணுக்கும் ஆணுக்குமான தனித்தனியான மரபுகளைக் கொண்டிருக்கிறது. பெண்ணுக்கான மரபுகள் எப்பொழுதும் ஆணைச் சார்ந்ததாகவே, ஆணுக்கு பயனளிப்பதாகவே அமைந்திருக்கிறது. இந்த மரபு ஆணாதிக்கச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. அதனைச் சீர்திருத்த பெண்ணியல்பு மரபை பெண்ணே உருவாக்க வேண்டும். பெண்ணை அடிமையாய் வைத்திருக்கும் மரபை உடைத்தெறிய வேண்டும்.
“பெண்கள் மென்மையானவர்கள் éப்போன்றவர்கள் வலிமையில்லாதவர், புத்தியில்லாதவர்கள் என்றும் அடங்கிப் போக வேண்டியவர்கள் தான் என்றும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் ஆண்களால் சொல்லிக் கொண்டிருக்க முடியும். அதைக் கேட்டுக் கொண்டு இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் பெண்களால் மனதுக்குள் குமுறிக் கொண்டு வெளியில் பதுமை போல் நடிக்க முடியும்.” (றஞ்சி, ஊடறு,ப.164)
இத்தகைய அடக்குமுறை மரபை மாற்றியமைக்கும் விதமாகவும் ஆண்கள் வம்ச வழியாக அம்மரபைக் கடத்துவதையும் பெண்கவிஞர்கள் தம் கவிதைகளின் வழி விளக்குகிறார்கள்.
“……
வாழையடி வாழையாய்…
வம்சப் பரம்பரையாய் … அதே,
வழித் தோன்றலில் வந்தவன்,
ஆணவத்தை ஆளுமையில் கொண்டவன்!
ஆர்ப்பரித்தான்
ஆணென்று!
மகனுக்கும்
பேதையொன்றைப் பேசி….
மணமுடித்து,
நாளும் உடைபடும்
மருமகள் கன்னம் பார்த்து
மகனின் வீரத்தையும்,
மெச்சிக் கொண்டான் !
ஓ….இறைவா..!
அப்படியே …..
‘பெண்’சாதி…
அடங்கிப் போனது!
இப்படியே…
‘இவன்’ சாதி
அலட்டிக் கொண்டது
இதுதான் ஆண்மையென்று” (முகைசிராமுசைடீன், பெயல்மணக்கும் பொழுது,ப.207)
அதாவது ஆண்வழிச் சமூக முறைமை அதிகாரம் எனும் பிடியில் பெண்ணை வைத்திருப்பதால் ஆண்கள் உருவாக்குகிற கருத்தாங்களை மரபுகள் என்று கொண்டாடுகின்றனர். அதனை மறுக்கவும் போலியானது எனப் புரிய வைக்கவுமே பெண்மொழி பயன்படுகிறது.
சமூகம் ஆண்களை பெண்ணிற்குரிய குடும்பப் பணிகளை ஏற்றுக் கொள்ளத் தயங்குபவர்களாகவும் மரபார்ந்த அதிகாரக் கட்டமைப்பை மாற்றிக் கொள்ள விரும்பாதவர்களாகவும் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. பெண்ணை முற்று முழுவதுமாக திருமணச் சந்தையில் விற்பதற்கு ஏற்ற முறையில் உருவாக்குகின்றனர். பெண் புதுமை பேசுபவளாகவும் புரட்சி செய்பவளாகவும் இருக்க அவர்கள் ஒப்புவதில்லை. இதனை,
“ வேண்டுவனவெல்லாம் கிடைக்கும்
கற்பகத் தருவின் ஏகபுத்திரியென
அழைக்கப்படுபவள்
“அப்பா பிடிக்கும்
அம்மா பிடிக்காது”
வெளிப்படையாய் சொல்லித் திரியும்
சுதந்திர ஊடகம் நான்
அப்பாவின் எல்லாமும் கொண்ட
வீரிய விந்தொன்றின்
வெளிப்பாடு நான் .. . . . . .
அம்புலி மாமாவிற்கு முன்னரே
பாரதியையும் கார்ல்மார்க்ஸையும்
தெரிந்து கொண்ட
அதிர்~;டசாலி நான்
எல்லாம் அப்பாவாகிப் போன பின்பும்
அப்பாவே நானாகிய பின்னும்
எதிரிகளாய் முறைத்துக் கொள்கிறோம்
என் காதல் வயப்பாட்டின் மனிதத்தில்
தெரிந்திருந்தால்
உருவாக்கியிருப்பாரோ
நொய்ந்த விந்தொன்றின் மூலம் அம்மா போன்ற
சாதாரணப் பெண்ணாக” (மாதுமை, ஒற்றைச் சிலம்பு, பக்.11-12)
என்ற கவிதையின் மூலம் தெளிவுபடுத்துகிறார் கவிஞர். பெண் தன்னை, தன் உணர்வுகளை வெளிக்காட்டாது குடும்பம், கணவன்,குழந்தை என இவர்களைச் சார்ந்து வாழவேண்டும் என்ற பண்பாட்டுப் புனைவுகளையும் மரபார்ந்த கட்டுப்பாடுகளையும் எதிர்த்து மீண்டுவரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்பதைப் பெண்கவிஞர்களின் கவிதைகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. ஒவ்வொரு சூழலும் தான் நுகர்வுப்பொருளாக்கப்படுவதை, கனன்று கொண்டிருக்கும் எரிமலை போல மனதிற்குள் கொதித்துக் கொண்டிருக்கிறாள் என்றாவது ஒருநாள் அவ்வுணர்வு வெடித்து சிதறும் என்பதை பின்வரும் கவிதை குறிப்பிடுகிறது.
“ காயம்பட்ட
என் விளை நிலத்தில் தான்
தொடர்ந்த பயிரிடலும்
தொடர்ந்த அறுவடையும்
நடந்து கொண்டிருக்கின்றன
எப்போதும் சீராக
இருந்ததில்லை
என் மூச்சும்
என் சரீரமும்
வாழ்க்கைப்பட்ட பின்னால்
தூக்கியெறிந்து விட்டு
ஓடிப்போய் மழையில் நனைந்தபடி
மணல் வீடு கட்ட
வாய்ப்புக்கள் இருந்தும்
சேலை கட்டிய
கம்பமென
உட்கார்ந்திருக்கிறேன்
இயலாமையால் அல்ல” (மாதுமை,மு.கு.நூ,பக்.43-44)
என்ற கவிதை, மரபு எனும் பிடியில் பெண்சுதந்திரம் உழல்வதைத் தடுக்க முனைந்துள்ளதை உணர்த்துகிறது
முடிவுரை
இலக்கியத்தில் பெண்மொழி, ஆண்மொழி என பேதம் கற்பித்துப் படைப்பாக்கத்தில் விரிசலை உருவாக்குகிறார்கள் பெண் கவிஞர்கள் எனப் பலர் குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பெண்மொழி வழியாகவே மொழிக்குள் இருந்த ஒருதலைச்சார்பு விலகி இருக்கிறது. இலக்கிய வெளியில் பெண்ணின் அனுபவங்கள் சுயம் சார்ந்ததாகவும் ஆணின் அனுபவங்கள் உலகார்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.
பெண்ணின் படைப்புலகத்தை முடக்கவே பெண்மொழி மீதான விமர்சனங்களும் பெண்மொழியை இழிவுபடுத்துதலும் நடந்தேறுகிறது. இதனைக் கட்டுடைத்துப் பழைய இலக்கியங்களை மீள்வாசிப்புக்கு உட்படுத்தி நவீன இலக்கியங்களின் பங்களிப்பை உறுதி செய்வது பெண்மொழியின் கருத்துருவாகும்.
துணைநின்றவை
- சுகிர்தராணி, 2004, இரவுமிருகம், காலச்சுவடு பதிப்பகம், கே.பி.சாலை, நாகர்கோவில்.
- பானுபாரதி, 2009, பிறத்தியாள், கருப்புப் பிரதிகள், லாயிட்ஸ்சாலை, சென்னை.
- மகாராசன், 2010, பெண்மொழி இயங்கியல், தோழமை வெளியீடு, கே.கே நகர்,சென்னை.
- மங்கை.அ.(தொ.ஆ.), 2007, பெயல் மணக்கும் பொழுது, மாற்று, சூளைமேடு, சென்னை.
- மாதுமை, 2008, ஒற்றைச் சிலம்பு, உயிர்மை பதிப்பகம், அபிராமபுரம், சென்னை.
- றஞ்சி (சுவிஸ்), 2007, மை (ஜெர்மனி), ஊடறு வெளியீடு.
…
முனைவர் சி. அம்சவேணி
தமிழ் – உதவிப் பேராசிரியர்
கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.