ஆண்மாணவர்கள் இன்று பாடசாலைகளில் மிகக் கூடுதலான பிரச்சினைக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர். பாடசாலைச் சட்டதிட்டங்களை மதிக்காமை, ஆசிரியர்களை மதிக்காமை, வகுப்பறையில் கட்டுப்பாடின்மை, பாடவேளையில் குழப்படி, தீய பழக்க வழக்கங்கள், படிப்பில் ஆர்வமின்மை, தவறான இணையத்தளங்களில் நேரத்தைக் கழித்தல், வன்முறைகளில் ஈடுபாடு என ஆண்மாணவர்கள் பற்றிய பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் மாணவிகளின் ஈடுபாடு ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானதே.
ஆண்மாணவர்களின் இந்நடத்தை காரணமாக பாடசாலைகளில் அதிகம் தண்டிக்கப்படுபவர்களாகவும் சட்டநடவடிக்கை எடுக்கப்படுபவர்களாகவும் ஆண்மாணவர்களே காணப்படுகின்றனர். இந்நடவடிக்கைகள் மூலம் அவர்கள் திருந்துவதற்குப் பதிலாக மேலும் வன்முறையாளர்களாகவும் பிடிவாதக் காரர்களாகவுமே மாறி வருகின்றனர். இதனால் ஆசிரியர்களின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் அதிகம் உட்படுகின்றனர். இதே நேரம் மாணவிகளோ அவர்களது இயல்பான சுபாவம் காரணமாக ஆசிரியர்களால் விரும்பிக் கற்பிக்கப்படுபவர்களாகவும், விருப்புக்கள் நிறைவேற்றப்படக் கூடியவர்களாகவும் மாறிவருகின்றனர்.
இந்நிலை தொடருமாயின் இதன் பாதகமான பிரதி விளைவுகள் சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் பிரதி பலிக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. எனவே இது மிகவும் அவசரமாகத் தீர்வு காணப்பட வேண்டிய ஓர் சமூகப் பிரச்சினையாகும்.
குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மேற்கத்திய சமூகவியலாளர்களால் முன்வைக்கப்படும் தீர்வு முறைகள் முஸ்லிம் மாணவர்களில் பிரயோகிக்கப்படும் போது நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை அவை ஏற்படுத்த மாட்டாது. எனவே முஸ்லிம் சமூகவியலாளர்கள் ஒன்றிணைந்து இஸ்லாமிய நம்பிக்கை மற்றும் உளவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆண்மாணவர்களின்; பிரச்சினைகளைத் தனியாக ஆய்வு செய்து சிறந்த தீர்வுத் திட்டம் ஒன்றை உருவாக்கி அதனை முஸ்லிம் பாடசாலைகளில் அமுல்படுத்துவது காலத்தின் அவசரத் தவையாகக் காணப்படுகிறது. சமூகத்தை வழிநடாத்தும் தலைமைகள் ஒன்றிணைந்தே இக்கடமையை நிறைவேற்ற வேண்டும்;.
அத்தீர்வு முன்வைக்கப்படும்வரை மாணவர்களுடன் நேரடியாகத் தொடர்புபடும் அதிபர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஆண்மாணவர்களைக் கையாள்வதற்கான பொருத்தமான அணுகுமுறைகள் கடைபிடிக்கப்படுவது அவசியமாகும்.
மாணவர்கள் மாணவியர் முன்னிலையில் தோல்வியுற விரும்புவதில்லை. தண்டிக்கப்பட விரும்புவதில்லை. அவமானப்பட விரும்புவதில்லை. தலைகுணிய விரும்புவதில்லை. இவை அவர்களது உளவியல் இயல்பு நிலை. இதைப் புரிந்து கொள்ளாமல் ஆண்மாணவர்கள் நடாத்தப்படும் போது ஏற்படும் எதிர்விளைவுகள் ஆபத்தானவை. ஆகவே ஆண்மாணவர்கள் விடயத்ததில் மிகக் கவனமாகவே நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.
வகுப்பறையில் கற்றல் கற்பித்தலுக்கு சாதகமான சூழலை உருவாக்க மாணவர்களைவிட மாணவியர்கள் அதிகம் ஒத்துழைக்கின்றனர். மாணவர்களின் ஒத்துழைப்;பின்மைக்கான காரணம் கற்பித்தல் வழிமுறைகளை ஏற்றுக்கொள்வதிலும் சகித்துக்கொள்வதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள இயல்பான வேறுபாடுகளாகும். ஆகவே ஆண்மாணவர்களின் உடல் உள நிலைக்கேற்ற கற்பித்தல் வழிமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்.
ஒரே தினத்தில் வாழை மரமுமம் பலா மரமும் நடப்படுமாயின் மென்மையான வாழை மரம் பலமான பலா மரத்தை விட குறிப்பிட்ட காலம் வரை வேகமாக வளரும். ஆனால் பலா மரமோ மெதுவாக வளர்ந்தாலும் வாழை மரத்தைவிடவும் ஓங்கி வளரும். இரு மரங்களும் அருகருகே வளர்க்கப்படும் போது மென்மையான வாழை மரங்களின் அகன்ற இலைகளால் பலா மரங்கள் மறையுமாயின் ஒன்றோ அவை வளையும் அல்லது மடியும்.
எனவே பலமான ஆண்மாணவர்களை பயனுள்ளவர்களாக வளர்த்தெடுக்க அவர்களுக்கென்ற சிறப்பான அணுகுமுறைகளைக் கையாளவேண்டும். அல்லது தனியாக வளர்க்க வேண்டும். ஆசிரியர்களாகிய நாம் இவ்விடயத்தில் கைகோர்ப்போம்.