அனுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று நான்காவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் தம்மை பொது மன்னிப்பு அளித்து விரைவில் விடுதலை செய்யவேண்டுமெனக் கோரி அனுராதபுரம் சிறையில் உள்ள 8 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
மதியரசன் சுலக்ஷன், இராசதுரை திருவருள், சிவசுப்ரமணியம் தில்லைராஜ், ராசபல்லவன் தபோதரன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், சிவப்பிரகாசம் சிவசீலன், மற்றும் தங்கவேல் நிமலன் ஆகியோரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களாவர்.
நேற்று நான்காவது நாளாக இவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்றது. இந்நிலையில் இவர்களில் நான்கு கைதிகளின் உடல் நிலை நேற்று மோசமடைந்தது. இதனையடுத்து அவர்கள் நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவசுப்ரமணியம் தில்லைராஜ், தங்கவேல் நிமலன் ஆகிய இரு கைதிகளும் அனுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையிலும் சூரியகாந்தி ஜெயச்சந்திரன், ராசபல்லவன் தபோரூபன் ஆகியோர் அனுராதபுரம் பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இராசபல்லவன் தபோரூபன் சக்கரையின் அளவு ஆபத்து வழைவிக்கக்கூடியளவு குறைவடைந்துள்ளது என மருத்துவமனை வட்டராரத் தகவல்கள் தெரிவித்தன.
சூரியகாந்தி ஜெயச்சந்திரன், என்ற கைதி ஏற்கனவே பாரிசவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தால் மீண்டும் இந்நோயின் தாக்கத்துக்கு ஆட்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்தனர் என இவர்கள் தொடர்பில் கவனம் செலுத்திவரும் சிவன் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கணேஸ் வேலயுதம் கூறினார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகளை நான் எமது அமைப்பைச் சேர்ந்த சதீஸ் இருவரும் பார்வையிட்டடோம். பேசக் கூட முடியாத அளவு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கணேஸ் வேலாயுதம் கூறினார்.