நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம், ஆனால், மக்களின் நலனுக்காக அமைதிப் பாதையில் செல்கிறோம் என்று இந்தியாவை வம்புக்கு இழுக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த 19-ம் தேதி இந்திய பிஎஸ்எப் வீரர் ஒருவர் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டுக் கிடந்தார். அடுத்த சில நாட்களில் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் 3 போலீஸாரை வீட்டில் இருந்து கடத்திச் சென்ற ஹிஸ்புல் தீவிரவாதிகள் அவர்களை சுட்டுக்கொலை செய்தனர்.
இதற்கிடையே பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள இம்ரான் கான் மீண்டும் அமைதிப் பேச்சை தொடங்க விரும்புவதாகத் தெரிவித்தார். இந்த வாரம் நியூயார்க்கில் நடைபெறும் ஐநா கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்களையும் சந்தித்து தீவிரவாதிம், காஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட நிலுகையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து மத்திய அரசும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் அமைச்சர் குரேஷியுடன் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இந்திய வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பேச்சு வார்த்தையை ரத்து செய்து அறிவித்தது.
இதையடுத்து டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறுகையில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நடவடிக்கை அவசியம், ஆனால், மிகக்கொடூரமாக அல்ல. இதற்கு முன் பல ஆப்ரேஷன்களை பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் போன்று காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஆசிப் கபூர் அந்தநாட்டுச் செய்தி சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்காகத் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடி வருகிறோம்.ஏராளமான உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளோம். எங்களுக்கும் அமைதியின் விலை என்ன என்பது தெரியும்.
நாங்கள் ஒருபோதும் வீரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியது இல்லை. இதற்கு முன் இதுபோல் இந்திய வீரர்கள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட போது எங்களைத்தான் இந்திய ராணுவம் குற்றம் சுமத்தியது. நாங்கள் முறையான, நேர்மையான ராணுவத்தினர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம்.
நாங்கள் போருக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், மக்களின் நலனுக்காகவும், அண்டைநாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமைதிப்பாதையில் செல்கிறோம். நாங்கள் கடந்த மே மாதம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தினோம். அதைத் தொடர்ந்து இந்திய ராணுவம் பின்பற்றி இருந்தால், அடுத்த கட்டத்துக்கு சென்று இருக்கும்
இவ்வாறு கபூர் தெரிவித்தார்