கடந்த ஆட்சிக் காலத்தில் பெரும் அடாவடித்தனத்திற்குப் பெயர் போயிருந்தது பொதுபல சேனா என்னும் கடும்போக்குவாத அமைப்பு. எனினும் கடந்த சில காலமாக அதன் செயற்பாடுகள் மங்கியிருந்தன.
காரணம் ஆட்சி மாற்றமும், அதன் பின்னர் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருந்த செயற்பாடுகளும்.
இந்நிலையில் மீண்டும் தன்னுடைய கடும்போக்குவாத அரசியல் மற்றும் மதவாத செயற்பாடுகளை முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக இஸ்லாமிய மக்களை குறி வைத்து செயற்படுவதனை இலக்காகக் கொண்டு தன்னுடைய காய்களை நகர்த்திவருகிறது இந்த ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பு.
நேற்றைய தினம் கொழும்பில் அதன் தலைமை அலுவலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டிருக்கும் ஞானசார தேரர்,
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் ஒன்றை நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அப்பல்கலைக்கழகத்தில் குர்ஆன் இல் உள்ளடங்கியுள்ள விடயங்களே கற்பிக்கப்படும் என்பதை சகலரும் அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அவர்,
குர்ஆன் இலும் தீவிரவாதம்தான் போதிக்கப்படுகின்றது. எனவே மேற்படி கல்விக்கூடத்தில் தீவிரவாதிகளே உருவாக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வாதிகளுக்கு அறிவுரை,
நாட்டின் பாதுகாப்பு குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டிய தரப்புக்கள் அனைத்துக்கும் இஸ்லாமிய இனவாதம் பற்றி அறிவுறுத்தியுள்ளோம். அதனை எந்த அளவுக்கு உள்வாங்கிக்கொண்டனர் என்பது கேள்விக்குரியாகவே உள்ளது.
பிரதான் கட்சிகள் ஒன்றுகூடி முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வற்காக அவர்கள் நினைத்த போக்கிலெல்லம் செல்வதற்கு அனுமதிக்கின்றார்கள். இது மீதொட்டமுல்லை குப்பை மேட்டு விவகாரம் போன்றதாகும்.
முதலில் சிறியதாக இருந்த குப்பை மேடு நூற்றுக்கணக்கான அடிக்கணக்கு உயர்வடைந்து சரிந்து விழுகின்ற வரையில் அரசாங்கத்தினர் அமைதி காத்தது போலவே தான் இஸ்லாமிய தீவீரவாதம் மேலீட்டும் வரையில் பொறுமையாக இருப்பார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைவருமே இந்த போக்கினைதான் கடைப்பிடித்தார்கள்.
இவர்கள் நாட்டின் உரிமையாளர்கள் என்று நினைத்துக்கொண்டு ஆட்சி செய்கின்றார்கள் தாம் சிறிது காலம் இருக்க போகின்ற ஆட்சியாளர்கள் மாத்திரமே என்பதை இவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
இது சிங்கள பெளத்தர்களுக்கு உரித்துடைய நாடாகும். அதனால் முஸ்லிம்களின் அச்சுறுத்தலுக்கு ஆட்சியாளர்கள் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை.
இஸ்லாம் ஒரு புற்று நோய்
பெளத்த வரலாறுகளின் அடிப்படையில் பார்க்கின்ற போது பசுக்களை கொன்ற போது தான் உலகில் முதல் முறையாக அதர்மம் உருவானது என்று கூறப்படுகின்றது.
அதனால் தான் அநாகரிக தர்மபாலவின் போராட்டங்களின் போது பயன்படுத்தப்பட்ட பதாதைகளிலும் மாட்டு இறைச்சி உண்ண வேண்டாம் என்று எழுதப்பட்டிருந்தது. அதனால் தான் இ்ஸ்லாமியர்களின் செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்.
எம்மைப் பொறுத்தவரையில் இஸ்லாம் என்பதே ஒருவகையான புற்றுநோய் என்றுதான் கூறுவோம். இன்று நாட்டில் மஹிந்தவின் குழு ஒரு பக்கத்தில் அதிகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கின்றது மறுமுனையில் ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆட்சியை தக்க வைக்க முயற்சின்றன.
இவர்கள் சகலரும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக அவர்களின் செயற்பாடுகள் அனைத்துக்கும் சுதந்திரம் வழங்குகின்றார்கள். முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஏற்படும் போது அவர்கள் பக்கமிருந்து சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள்.
இந்த விடயங்களை பற்றி நாங்கள் பேசுகின்ற போது இனவாதிகள் என்று முறைப்பாடு செய்கின்றார்கள். எங்கு சென்று முறைப்பாடு செய்தாலும் அது எமக்கு பிரச்சிணையில்லை மாறாக எந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம்.
முஸ்லிம்களின் இலக்கு!
முஸ்லிம் சமுதாயம் ஒரு இலக்கை வைத்து நகர்கின்றது. இஸ்லாமியர்கள் அல்லாத ஒரு மதக்குழுவை சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பதே இவர்களின் கொள்கையாகும்.
நல்லிணக்கம் குறித்து பேசும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இது விளங்கவில்லை. அவர்கள் நல்லிணக்கத்தை சிங்களவர்களுக்கு மாத்திரமே போதிக்கின்றார்கள்.
இன்று சவூதி அரேபியாவிலிருந்து வந்த சில முஸ்லீம் இனக் குழுக்கள் கிழக்கு பகுதிகளில் உள்ள பெளத்தர்களின் புராதன சின்னங்களையும் வரலாற்று அம்சங்களையும் அழிக்க முயற்சிக்கின்றார்கள்.
கிழக்கு பல்கலைக்கழகமும், தீவிரவாதிகள் உருவாக்கமும்
மஹிந்தவின் ஆட்சியில் தான் கிழக்கு பகுதியில் மிகப்பெரிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.
அவ்விடயத்தில் குர்ஆன் இல் உள்ள விடயங்களை தான் கற்பிக்க போகின்றார் குர்ஆன் முழுமையாக தீவிரவாதத்தினையே போதிக்கின்றது. எனவே மேற்படி கல்விக் கூடத்திலிருந்து வெளியேறுபவர்களும் தீவிரவாதிகளாகவே இருப்பார்கள்.
மேலும் பாகிஸ்தானின் உதவியுடன் மதரசாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான தீவிரவாத சக்திகளை தோற்றுவிக்கு தளமாக செயற்படுகின்றது. அவர்கள் எமது நாட்டிலும் தீவிரவாதினை போதிக்க முற்படுகின்றார்கள்.
இதனைதான் அல்லாஹ் கூறிய வழிமுறை என்று கூறுகின்றார். இவ்வாறு கூறிக்கொண்டு கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்கள் சிங்கள புரதான இடங்களில் சென்று குடியேறுகின்றார்கள் அதற்கு எதிர்ப்பு கிளம்புகின்ற போது தமக்கு குடியேற வேறு இடம் வேண்டும் என்கிறார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று அரசாங்கமும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குகின்றது.
இவ்வாறு தான் முஸ்லீம்கள் இடங்களை சூட்சமாக பிடிக்கின்றார்கள் இனி வரும் நாட்களில் தமிழர்களுக்கும் சிங்களவர்களும் அந்த வழிமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தவுள்ளோம் என்று நேற்றைய தினம் ஊடக சந்திப்பில் கொதிந்தெழுந்த ஞானசார தேரர், இன்று அமைச்சர் மனோகணேசன் அலுவலகத்தில் கடும் தொணியில் பேசியிருக்கிறார்.
குறிப்பாக, இந்த நாடு முற்றிலும் பௌத்தத்திற்கு சொந்தமான நாடு என்பதனை அரசும், அமைச்சர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து விட்டு நல்லிணக்கம் என்பதனை எப்போதுமே ஏற்படுத்த முடியாது.
நாட்டில் இப்போது பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன பௌத்தம் அழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது. வெளிப்படையில் நல்லிணக்கம் என்ற போர்வை போர்த்தப்பட்டு மறைமுகமாக பௌத்தம் மீது தாக்குதல் நடத்தப் பட்டுக் கொண்டு வரப்படுகின்றது.
அதேபோன்று முஸ்லிம்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளனர். ஒவ்வோர் பள்ளிவாசலும் பதுங்கு தளங்களே, அதற்குள் ஐ. எஸ். ஐ. எஸ் தீவிரவாதிகள் இருக்கின்றனர்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமாயின் இலங்கையர் அனைவரும் வரலாற்றினைப் பற்றி கற்க வேண்டும். பௌத்தம் என்றால் என்ன? பிக்குமார்கள் யார் என்பது தொடர்பிலும் கற்க வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் மனோகணேசன் பதவிக்கு தகுதியற்றவர் எனவும் ஞானசார தேரர் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பெரும் சண்டித்தனத்தில் ஈடுபட்டிருந்த ஞானசார தேரர் ஆட்சிமாற்றத்தின் பின்னர், சற்று அடங்கியிருந்தார்.
எனினும் இந்த இரண்டு நாட்களும் அவரின் செயற்பாடு முற்றுமுழுதாக முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாகவும் மதவாத, இனவாத சிந்தனையின் அடிப்படையில் நேரடியாக தாக்கும் விதத்தில் அமைந்திருப்பது மக்கள் மனங்களில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, பாணந்துறை மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் இரு பள்ளிவாசல்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று முன் தினமும் நேற்றும் இவ்விரு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இதனால் முஸ்லிம் மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அண்மைய நாட்களாக முஸ்லிம்களை இலக்கு வைப்பது இவர்களின் நோக்கமாக காணப்படுகிறது.
இது தவிர, நேற்றைய தினம் திருகோணமலை, மூதூர் – செல்வநகர் பகுதியில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். குறித்த காணியில் தங்கியிருந்த மக்களை வெளியேறுமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பிக்கு ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், நேற்று மாலை இனந்தெரியாத நபர்களினால் குறித்த காணியில் தங்கியிருந்த மக்களின் குடியிருப்புகளுக்கு கல் வீசப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் முஸ்லிம் மக்கள் கடும் பீதியடைந்தனர். எனினும் சிறிது நேரத்தில் அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு, நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
ஆக, நாட்டில் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்கும் இந்தச் செயற்பாடுகள் மெல்ல மெல்ல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அரசியல் உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களின் போராட்டம் நசுக்கப்பட்டு, அடக்கப்பட்டு இன்றோடு, எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.
இந்நிலையில் நாட்டில் எஞ்சியிருக்கும் மற்றுமொரு சிறுபான்மை சமூகத்தின் இயல்பு வாழ்க்கை மீது கைவைக்கத் தொடங்கியிருக்கிறார்கள் இனவாதிகள்.
தமிழ் மக்களின் பொருளாதார, வாழ்விடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. இப்பொழுது நாட்டில் பொருளாதார ரீதியில் வளர்ச்சி பெறும் இஸ்லாமிய மக்களின் மீதும் தங்கள் பார்வையை இவர்கள் திருப்பியிருக்கிறார்கள்.
இதனால், அவர்களின் வளர்ச்சியும், முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்துவது இவர்களின் இலக்கு. அதற்கான காரியங்களைத் தொடர்ந்தும் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.